ஆப்கானிஸ்தானில் வாழ்க்கையை ஓட்டுவதே கஷ்டம்... இதில் சூப்பர் கார் வியாபாரம் வேறயா!! எவ்வளவு சட்ட சிக்கல்கள்...
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் உருவாக்கப்பட்ட சூப்பர் கார் ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது பொருளாதார ரீதியாக இந்த சூப்பர் கார் நிறுவனத்தை முன்னேற்றம் அடைய செய்யும் என்பது மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானில் பலருக்கு உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெனிவா சர்வதேச மோட்டார் கண்காட்சி ஆனது உலகின் முக்கியமான ஆட்டோமொபைல் கண்காட்சி ஆகும். 1905ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த கண்காட்சியில், மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் முக்கியமான கார்கள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். இந்த வருடம் இந்த சர்வதேச மோட்டார் கண்காட்சி கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெறவுள்ளது.

வருகிற 2023 அக்டோபர் 5ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 14ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ள இந்த கண்காட்சியில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை வெளியீடு செய்ய தயாராகி வருகின்றன. இந்த வகையில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த சூப்பர் கார் மாதிரிகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த எண்டாப் (ENTOP) அதன் முதல் சூப்பர் காரை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளது.
2000ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட டொயோட்டா கரோல்லா காரின் என்ஜினை கொண்டு எண்டாப் நிறுவனம் உருவாக்கியுள்ள சூப்பர் காருக்கு மடா 9 (Mada 9) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த காரை எண்டாப் நிறுவனம் ஏற்கனவே கடந்த 2023 ஜனவரி மாதத்தில் படங்களுடன் வெளியீடு செய்துவிட்டது. அதனை தொடர்ந்து, அடுத்த அக்டோபர் மாதத்தில் தோகா கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட உள்ளது.

எண்டாப் நிறுவனத்தின் நிறுவனர், முகமது ரெஸா அகமதி. ஆப்கானிஸ்தானின் தென்மேற்கில் அமைந்துள்ள நிம்ரோஸ் என்ற பகுதியில் இருந்து மடா 9 காரை கண்காட்சிக்கு கண்டெயினர் லாரியில் கொண்டு செல்லும் வீடியோ ஒன்றை ரெஸா அகமதி இணையத்தில் பகிர்ந்துள்ளார். எல்லையை கடந்து ஈரான் நாடு வழியாக, கத்தாரின் தோகாவை அடைவது தான் இவர்களது திட்டம்.
ஆனால் இதற்கிடையில், சில பல அதிகாரத்துவ பிரச்சனைகளை முகமது ரெஸா அகமதி சந்தித்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து காரை ஏற்றுமதி செய்வதில் சில சட்டப்பூர்வமான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் தற்போது சரியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், மடா 9 காரை கண்காட்சி நடைபெறும் இடம் வரையில் கொண்டு செல்வதற்கு ஆகும் செலவுகளினாலும் முகமது ரெஸா அகமதி பொருளாதார சிக்கல்களை சந்தித்துள்ளார்.

நல்லவேளையாக, அவரது ஆதரவாளர்களின் உதவியுடன் பொருளாதார பிரச்சனைகளையும் சரி செய்துள்ளார் ரெஸா அகமதி. இவரது ஆதரவாளர்கள் கிட்டத்தட்ட 1 லட்சம் டாலர்கள் வரையில் வழங்கியுள்ளனர். இவ்வாறு பல தடைகள் ஏற்பட்ட போதிலும், ஜெனிவா சர்வதேச மோட்டார் கண்காட்சிக்கு சென்றடைவதை இவர் நோக்கமாக கொண்டுள்ளார்.
ஏனென்றால், இந்த சர்வதேச மோட்டார் கண்காட்சியில் பங்கேற்பது எண்டாப் நிறுவனத்திற்கு மிக முக்கியமானது என கூறும் முகமது ரெஸா அகமதி, இந்த கார் தற்போதைக்கு முன்மாதிரி நிலையில்தான் உள்ளதாகவும், இதனை ஓர் நிஜ காராக மாற்ற தனக்கு பெரிய அளவில் பொருளாதார உதவிகள் தேவை எனவும் கூறுகிறார். இதற்காக முதலீட்டாளர்களை பெறுவதற்காகவே இந்த கண்காட்சியில் எண்டாப் நிறுவனம் பங்கேற்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஜனவரியில் எண்டாப் மடா 9 வெளியீடு செய்யப்பட்ட போது, காரை பற்றிய தகவல்கள் எதுவும் பெரியதாக வெளியிடப்படவில்லை. அவற்றை விரைவில் தோகாவில் நடைபெறும் கண்காட்சியில் எதிர்பார்க்கலாம். ஆப்கானிஸ்தானில் ஓர் கார் நிறுவனம் வணிகத்தை மேற்கொள்வதே பெரிய விஷயம். அப்படியிருக்கையில், ஓர் சூப்பர் கார் நிறுவனமாக வளர்ச்சியடைவது அதனை காட்டிலும் சிரமமான விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications









