இனி நிலவிலும் கால் டாக்ஸிகள் ஓடும்... லூனார் கார்களை தயாரிக்கத் தீவிர முயற்சி
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் நிலவில் பயணிக்கும் காரை தயாரிக்கும் தீவிரமான முயற்சியில் இருக்கிறது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

நிலவில் மனிதர்கள் வாழ வழியுள்ளதா? நிலவைப் பூமி போல மாற்ற முடியுமா? என விஞ்ஞான ரீதியாகப் பல ஆய்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. நிலவிற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு நடத்துவதே தற்போது பெரும் சவாலாக இருக்கிறது. இந்நிலையில் நிலவில் பயணிக்கும் வகையிலான கார்களை தயாரிக்க ஜென்ரல் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. என்னது நிலவில் பயணிக்கும் காரா என நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது. இந்த காரின் தயாரிப்பு உள்ளிட்ட முழு விபரத்தைத் தான் இங்கே காணப்போகிறோம்.

தற்போது நாசா, இஸ்ரோ போன்ற அரசு நடத்து விண்வெளி ஆய்வு மையத்தையும் தாண்டி தற்போது தனியார் விண்வெளி ஆய்வு மையங்கள் பல செயல்பட்டு வருகிறது. டெஸ்லா நிறுவனம் எலான் மஸ்க் நடத்தி வரும் ஸ்பேஸ் எக்ஸ், அமேசான் நிறுவனர் நடத்தி வரும் ப்ளு ஆர்ஜின் ஆகிய நிறுவனங்கள் தற்போது விண்வெளி பயணத்தை கமர்ஷியலாக மாற்றி வருகின்றனர். ஏற்கனவே வெளிவரை சென்று வரும் திட்டத்தை அந்நிறுவனங்கள் கமர்ஷியலாக நடத்தியது.

இந்நிலையில் விரைவில் விண்வெளி பயணங்கள் அடுத்த சில ஆண்டுகளில் கமர்ஷியலாக மாறும்பட்சத்தில் அப்படியாகப் பயணம் செய்பவர்களுக்குப் பயன்படும் வகையில் நிலவில் பயணிக்கும் காரை தயாரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக அந்நிறுவனம் லுக்ஹீட் மார்டின் என்ற நிறுவனத்திடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அதன்படி இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து நிலவில் இயங்கும் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதை அந்நிறுவனம் லூனார் வாகனம் என அழைக்கிறது. வரும் 2025ம் ஆண்டு இந்த வாகனத்தின் முதல் பிரதி தயாராகும். அது வெற்றிகரமாகச் சோதனை செய்யப்படும் பட்சத்தில் அடுத்தடுத்து பல கார்களை தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அந்த வாகனத்தைப் பூமியிலேயே விற்பனை செய்து நிலவில் டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லூனார் வாகனம் என்றால் அது சாதாரணமாகப் பூமியில் தயாரிக்கப்படும் வாகனம் அல்ல. நிலவில் இதை மிகக் குறைவான புவியீர்ப்பு விசையில் இயங்கும் வாகனமாகத் தயாரிக்கப் பல புதிய தொழிற்நுட்ப அம்சங்களை இந்த காருக்குள் கொண்டு வரவுள்ளது. மிக முக்கியமாக விண்வெளியில் மனிதர்கள் இருக்கும் போது அங்கு அதற்குத் தகுந்த சூட்களை போட்டிருக்க வேண்டும்.

இந்த காரை வடிவமைக்கும் போது காரில் மனிதர்கள் ஏறும்போதும் இறக்கும்போதும் எந்த வகையிலும் இந்த சூட்களை கார் எந்த வகையிலும் சேதப்படுத்தாமல் இருக்கும் படி வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும் இந்த காரில் பல நவீன இயந்திர தொழிற்நுட்ப கருவிகள் பொருத்தப்படுகிறது. தற்போது விண்வெளிக்கு அனுப்பட்டும் ரோவர்கள் போல இந்த காரும் பேட்டரியில் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார் முதலில் குறைந்த வேகத்தில் பயணிக்கும்படி தான் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பக் கட்டத்தில் இந்த கார்களை விண்வெளியில் ஆய்வுக்கான செல்லும் விண்வெளி வீரர்கள் தான் பயன்படுத்துவார்கள் என்பதால் வேகம் முக்கியமான விஷயம் அல்ல பாதுகாப்பு தான் முக்கியம் எனக் கருத்தில் கொண்டு இது உருவாக்கப்படுகிறது.

மேலும் இந்த நிலவில் பயணிக்கும் வானகத்தைத் தயார் செய்வது ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஒன்றும் புதிதல்ல கடந்த 1960ம் ஆண்டுகளில் இந்த ஜெனரல் மோட்டார்கள் நிறுவனம் போயீங் நிறுவனத்துடன் சேர்ந்து முதல் லூனார் ரோவர் வாகனங்களைத் தயாரித்தது. இது 1971-1972 ஆகிய ஆண்டுகளில் இதில் 3 வாகனங்கள் நிலவிற்கு அனுப்பப்பட்டன. இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த 3வாகனங்கள் அதாவது LRV1, LRV2 மற்றும் LRV3 ஆகிய வாகனங்கள் இன்றும் நிலவில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது.

இந்த லூனார் ரோவரை மையமாகக் கொண்டு தான் அடுத்த மேம்பட்ட தொழிற்நுட்ப வசதிகள் கொண்ட வாகனங்களை உருவாக்க இது காரணமாக இருக்கிறது. தற்போது இதே ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கும் காருக்கும் நிலவில் பயன்படுத்தப்படும் கார்களின் முன்மாதிரியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த திட்டம் வெற்றி பெற்றால் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் நிலவில் இந்த காரை முதலில் வாடகை முறையில் இயக்க திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications