ஹைட்ரஜனில் ரயில்கள் ஓட போகுதா!! உலகின் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் ரயில் அறிமுகம்! எங்கு தெரியுமா?
உலகின் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கக் கூடிய ரயில் பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

உலகெங்கிலும் மின்சார வாகனங்கள் மிக வேகமாக பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன. இவை சுற்றுச்சூழலுக்கு நண்பனாக விளங்கும் என்கிற காரணத்தினால் உலக நாடுகள் அனைத்தும் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை மிக சிறப்பாக ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த மின் வாகனங்களின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில், இவை மின்சார வாகனங்களைக் காட்டிலும் அதிக சூப்பரான பயன்பாட்டு வசதிகளைக் கொண்டவையாக உள்ளன. இந்த வாகனமும் மின்சாரத்தால் இயங்கக் கூடியவையே ஆகும். ஆனாலும் தனக்கு தேவையான மின்சாரத்தை ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இருந்து அவை பெற்றுக் கொள்கின்றன. அதாவது, ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை வேதிவினைக்கு உட்படுத்தும்போது கிடைக்கக் கூடிய மின்சாரத்தையே தன்னுடைய இயக்கத்திற்காக இந்த ரக வாகனங்கள் பயன்படுத்திக் கொள்ளும்.

"இந்த வேதிவினை மாற்றத்தின்போது காற்று மாசை ஏற்படுத்தக் கூடிய வாயுக்கள் வெளிவராதா" என நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான். ஆனால், கார்பன்-டை ஆக்ஸைடு போன்ற மிக மோசமான வாயுக்களை இந்த ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் வாகனங்கள் வெளிப்படுத்தாது. இவை வெறும் நீராவியை மட்டுமே வெளியேற்றும். இது சுற்றுச் சூழலுக்கு துளியளவும் பாதிப்பை ஏற்படுத்தாது.

மேலும், வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களில் எரிபொருளை நிரப்புவதைப் போல் இந்த ரக வாகனங்களில் மிக சுலபமாக ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்பிக் கொள்ள முடியும். ஆகையால், மின்சார வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய பல மணி நேரம் காத்திருப்பதைப் போல் இதற்கு காத்திருக்க தேவையில்லை.

இத்தகைய சூப்பரான வசதியுடன் நான்கு மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த நேரத்தில் தற்போது ரயிலும் ஹைட்ரஜன் ஃப்யூவல்லில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே, ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கும் உலகின் முதல் ரயிலாகும். ஆகையால், உலகளவில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றது இந்த ரயில்.

ஜெர்மன் நாட்டிலேயே உலகின் முதல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கக் கூடிய ரயில் உருவாக்கப்பட்டுள்ளது. எல்விஎன்ஜி (Landesnah verkehrsgesellschaft Niedersachsen) மற்றும் அல்ஸ்டோம் (Alstom) ஆகிய ரயில் உற்பத்தியாளர்களாலே இந்த ரயில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 93 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மொத்தமாக 14 ஹைட்ஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கும் ரயில்கள் உருவாக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து ரயில்களே தற்போது வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இவை வெகு விரைவில் தற்போது டீசல் எஞ்ஜினில் இயங்கிக் கொண்டிருக்கும் ரயில்களை ரீபிளேஸ் செய்யும் விதமாக அந்நாட்டில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. நடப்பாண்டு இறுதிக்குள்ளாகவே இந்த சம்பவம் நிகழ்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு டீசல் எஞ்ஜின் கொண்ட ரயில் 4.5 கிலோகிராம் பயன்பாட்டில் தரக் கூடிய பலனை தற்போது வெளியீடு செய்யப்பட்டிருக்கும் ஹைட்ரஜன் ஃப்யூவல் ரயில்கள் வெறும் 1 கிலோவிலேயே தந்துவிடும் என கூறப்படுகின்றது. இதனால்தான் மிக வேகமாக தற்போது பன்பாட்டில் இருக்கும் டீசல் எஞ்ஜின் ரயில்களை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை இருந்த இடத்தில் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் ரயில்கள் பயன்பாட்டிற்கு களமிறக்கப்பட உள்ளன.

ஜெர்மன் நாட்டின் முக்கிய வழித் தடங்களான குக்ஸ்ஹவன், ப்ரெமர்ஹேவன், ப்ரெமர்வோர்டே மற்றும் ஹம்பர்க்கிற்கு அருகிலுள்ள பக்ஸ்டெஹுட் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் டீசல் எஞ்ஜின் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் வழி தடத்திலேயே விரைவில் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் ரயில்கள் சேர்க்கப்பட உள்ளன. இந்த ரயில்கள் ஒலி மாசையும் குறைக்க உதவ இருக்கின்றன.

வழக்கமான ரயில்களைக் காட்டிலும் மிகக் குறைவான ஒலியையே ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் ரயில்கள் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஒரு முறை இதில் ஒரு முறை ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்பினால் முழுமையாக 1000 கிமீ வரை பயணிக்க முடியும். இதன்டாப் ஸ்பீடு மணிக்கு 140 கிமீ ஆகும். தற்போது பயன்பாட்டில் இருக்கும் டீசல் எஞ்ஜின் ரயில்கள் மணிக்கு 100 கிமீ வேகத்தில் மட்டுமே இயங்கும். ஆகையால், இந்த ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் ரயில்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையிலும் இயங்கும் என தெரிகின்றது.
Image Courtesy: Alstom


Click it and Unblock the Notifications