உன்ன நம்பி வந்ததுக்கு என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட!! நடுரோட்டில் ஒரே அசிங்கமா போய்டுச்சு...
பைக் வீலிங் எப்போதுமே ஆபத்தான ஒன்றாகும். அது பொது சாலையில் செய்தாலும் சரி அல்லது மூடிய வளாகத்திற்குள் செய்தாலும் சரி. பொது சாலைகளில் செய்வது இன்னும் ஆபத்தானது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த சமயங்களில் விபத்தில் நீங்கள் மட்டும் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உங்களால் மற்ற வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்க நேரிடும். பைக் வீலிங் செய்ததால் கீழே விழுந்து சில்லறை வாரியவர்கள் நிறைய பேரை பார்த்துள்ளோம். ஆனால், இங்கு ஒருவர் விசித்திரமான முறையில் விபத்தில் சிக்கியுள்ளார். இதை பார்த்த பின் சிரிப்பதா அல்லது கவலைப்படுவதா என்பதே தெரியவில்லை.
இன்றைய கால பைக்குகள் மிகவும் செயல்திறன்மிக்கவையாக, அதிவேகமாக இயக்கக்கூடியவைகளாக உள்ளன. இந்த அதிவேகமே பைக்கில் புது, புது ஸ்டண்ட்களை செய்து பார்க்க இளைஞர்களை தூண்டுகிறது. அந்த ஆசைகளை எல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு பைக் ஓட்டுபவர்களும் இருக்கின்றனர். அதேநேரம், நடுரோட்டில் பைக்கில் சாகசம் காட்டுபவர்களும் இருக்கின்றனர்.

பொது சாலையில் பைக்கில் ஸ்டண்ட் செய்வது சட்டத்திற்கு புறம்பானது என்பதால், போலீசார் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், ஒருபக்கம் அதனை மீறுபவர்களும் தொடர்ந்து வந்துக் கொண்டே தான் இருக்கின்றனர். அந்த வரிசையில், இங்கு ஒருவர் நடுரோட்டில் பைக் வீலிங் செய்துள்ளார்.
இதில் அவருக்கு எந்த காயமும் இல்லையென்றாலும், பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து சென்றவர் கொஞ்ச நேரத்தில் பயத்தின் உச்சத்திற்கு சென்று வந்துள்ளார். ஏனெனில், ரைடர் பைக்கின் முன் சக்கரத்தை தூக்கியதில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் பைக்கின் பின்பக்க மட்கார்ட்டிற்கும், சக்கரத்திற்கும் இடையில் சிக்கிக் கொண்டுள்ளார். உடனடியாக பைக் நிறுத்தப்பட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தில் ஆண், பெண் என இருவர் யமஹா எம்டி15 பைக்கில் சென்றுள்ளனர். மேம்பாலம் ஒன்றின் மீது சென்ற போது, பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தவர் திடீரென பைக்கின் முன் சக்கரத்தை தூக்கி வீலிங் செய்ய முயற்சித்துள்ளார். இத்தனைக்கும். ஒரு அடி உயரத்திற்கு கூட அவர் பைக்கின் முன் சக்கரத்தை தூக்கியிருக்க மாட்டார்.
அதற்குள்ளாகவே, பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் இருக்கையில் இருந்து நழுவி, பைக்கின் பின் சக்கரத்திற்கும், மட்கார்டிற்கு இடையே சிக்கிக் கொண்டுள்ளார். இதனை கண்ட அந்த ஆண் நபர் உடனடியாக பைக்கை நிறுத்திவிட்டார். முதலில், யமஹா எம்டி15 போன்ற பைக்குகளில் வீலிங் செய்வதே கடினம்; செய்யக் கூடாத ஒன்று.

பின் இருக்கையில் ஒருவர் அமர்ந்திருக்கும் போது பைக் வீலிங் செய்வது இன்னும் மோசமான செயலாகும். பைக் ஸ்டண்ட்களில் அனுபவமிக்கவர்கள் கூட பின்னால் ஒருவரை வைத்துக் கொண்டு பைக் வீலிங் செய்ய கொஞ்சம் யோசிப்பர். இந்த நபரோ பைக் ஸ்டண்ட்களில் கை தேர்ந்தவர் போன்று தெரியவில்லை. பைக்கின் முன் சக்கரத்தை தூக்கும்போது, இருக்கையில் இருந்து ரைடர் பின்னோக்கி நழுவியதை வீடியோவில் காணலாம்.
ரைடர் பின்னோக்கி நகர்ந்ததினால்தான் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் இருக்கையில் இருந்து கீழே தள்ளப்பட்டார். அந்த சமயத்தில் அவர் ரைடரை இறுக்கமாக பிடித்திருந்தால், சக்கரத்தில் சிக்குவதை தவிர்த்திருக்கலாம். ரைடர் பைக் வீலிங் செய்ய போவதை அந்த பெண் எதிர்பார்க்கவில்லை போல. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, பைக் வீலிங்கை மேம்பாலத்தில் ஏறும்போது இந்த நபர் செய்துள்ளார். மேம்பாலத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் பைக் வீலிங் செய்வது முடியாத காரியம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், எந்த சூழலிலும் பைக் வீலிங் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். உண்மையில், இந்த பெண் பைக்கின் சக்கரத்திற்கு இடையே சிக்கியதால் தப்பித்துள்ளார். சாலையில் விழுந்திருந்தால், அவரது தலை பலத்த சேதத்தை சந்தித்திருக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, அவர் கீழே விழுந்ததால், ரைடர் பேலன்ஸ் இழந்து பைக் கவிழ்வதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









