குஜராத்தின் முதல் கார் உற்பத்தி தொழிற்சாலை மூடப்படுகிறது
குஜராத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கார் தயாரிப்பு தொழிற்சாலை மூடப்படுகிறது. அது குறித்த தகவல்களை காணலாம்.
குஜராத் மாநிலத்தில் முதல் முதலாக கார் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியது அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம். 21 ஆண்டு காலமாக இயங்கிவந்த இந்த தொழிற்சாலை தற்போது மூடப்பட உள்ளது.

குஜராத் மாநிலம் வதோதரா அருகிலுள்ள ஹலோல் எனுமிடத்தில் 1996ஆம் ஆண்டில் குஜராத்தின் முதல் கார் உற்பத்தி தொழிற்சாலையை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் துவங்கியது. இங்கு தான் செவர்லட் பிராண்ட் கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த தொழிற்சாலையில் உற்பத்தியை 2016ஆம் ஆண்டின் மத்தியில் நிறுத்தப்போவதாக கடந்த ஜூன் 2016ல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. பின்னர், நிர்வாக காரணங்களுக்காக மார்ச் 2017 வரையிலும் உற்பத்தி தொடரும் என அறிவித்திருந்தது.

எனினும் ஊழியர்கள், சப்ளையர்கள் மற்றும் நிறுவன பங்குதாரர்கள் ஆகிய தரப்பினரை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தர நேரம் தேவைப்படுவதால் உற்பத்தி நிறுத்த முடிவு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி நிறுத்தப்படுவதையொட்டி இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 650க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியில் இருந்து விடுவிக்க எண்ணி அவர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்ல அறிவுறுத்தியது தொழிற்சாலை நிர்வாகம். ஆனால் இதனை இன்னும் அவர்கள் ஏற்க மறுப்பதாக தகவல்கள் தெரியவருகிறது.

இது தொடர்பாக அந்த தொழிற்சாலையில் பணியுரியும் ஊழியர் ஒருவர் கூறுகையில், கடந்த மாதம் விருப்ப ஓய்வு திட்டத்தை நிர்வாகம் முன்மொழிந்தது, அதில் மேற்பார்வையாளர்களுக்கு 35-40 லட்ச ரூபாய் தொகை என்றும் ஊழியர்களுக்கு வெறும் 8- 10 லட்ச ரூபாய் அளிக்கப்படும் என தெரிவித்தனர், அதனை நாங்கள் எதிர்க்கிறோம்" என்றார்.

குஜராத் மாநில தலைமை செயலாளர் சிங் கூறுகையில், தொழிற்சாலையை மூடுவதென்பது ஜெனெரல் மோட்டார்ஸ் நிர்வாகம் எடுத்த தனிப்பட்ட தொழில் சார்ந்த முடிவாகும், அதனை அரசு ஏற்கிறது, மேலும் ஊழியர்கள் சார்ந்த பிரச்சனைகளை தாங்களாகவே சுமூகமாக பார்த்துக்கொள்வதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர் என்றார்.

மூடப்படும் தொழிற்சாலையை விற்பனை செய்வது தொடர்பாக SAIC மோட்டார் கார்ப்பரேஷனிடம் ஜெனரல் மோட்டார்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் இந்த கார் உற்பத்தி தொழிற்சாலை மூடப்படுவதால், அது ஆட்டொமொபைல் துறையில் முன்னணி நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு இந்தியா, ஸ்கூட்டர்ஸ் இந்தியா ஆகியவற்றிற்கு வணிக கதவுகளை திறந்து வைத்தது போல் உள்ளது.
புதிய 2017 செவர்லட் கமாரோ எசட்எல்-1 காரின் படங்கள்:


Click it and Unblock the Notifications








