வாகன ஓட்டிகள் இனி இந்த தவறை செய்தால் கட்டாய சிறை.. ஜாமீன் மூலம் தப்பிக்க வழியே இல்லை..
குடிபோதையில் வாகனம் ஓட்டும் குற்றவாளிகளுக்கு, ஜாமீன் வழங்காமல், கட்டாயமாக சிறையில் அடைக்கும் வகையிலான சட்ட திருத்தத்தை கொண்டு வரும்படி, மாநில அரசை போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டும் குற்றவாளிகளுக்கு, ஜாமீன் வழங்காமல், கட்டாயமாக சிறையில் அடைக்கும் வகையிலான சட்ட திருத்தத்தை கொண்டு வரும்படி, மாநில அரசை போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் நிகழ்ந்து வருகின்றன. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதே, பெரும்பாலான கோர விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், இந்த பிரச்னைக்கு தீர்வு காண இயலவில்லை.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம், சிறை, லைசென்ஸ் ரத்து என தண்டனைகள் வழங்கப்படவே செய்கின்றன. ஆனால் அத்தகைய நபர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. ஏனெனில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது என்பது ஜாமீன் வாங்க கூடிய குற்றமாகவே இன்றளவும் உள்ளது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பணம் ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை. எவ்வித தயக்கமும் இன்றி அபராதத்தை கட்டிவிடுகின்றனர். அதே நேரத்தில் தொடர்ச்சியாக குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்குபவர்கள் மிக எளிதாக ஜாமீனும் பெற்று விடுகின்றனர். ஜாமீனுக்கான தொகை மிக குறைவாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

எனவே தற்போது இருப்பதை விட சட்டத்தை, கடுமையாக மாற்றினால் மட்டுமே, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என போலீசார் கருதுகின்றனர். எனவே மோட்டார் வாகன சட்டத்தில் சில திருத்தங்களை செய்யும்படி, மாநில அரசை போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

போலீசாரின் கோரிக்கையை ஏற்று மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டால், குடிபோதையில் வாகனம் ஓட்டி சிக்குபவர்கள் ஜாமீன் இல்லாமல், 7 நாட்களை கட்டாயமாக சிறையில் கழிக்க வேண்டியது வரும். 7 நாட்களை சிறையில் கழித்த பிறகே, ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியும்.

கட்டாய சிறைவாசம் என்பது கடுமையான தண்டனை என்பதால், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என போலீசார் கருதுகின்றனர். இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வரும்படி, கோவா போலீசார்தான், அம்மாநில அரசை வலியுறுத்தி கேட்டு கொண்டுள்ளனர்.

இதுகுறித்து டிஜிபி முக்தேஷ் சந்தர் கூறுகையில், ''குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களிடம் கோர்ட் கருணையுடன் நடந்து கொள்கிறது. சில குற்றவாளிகள் ஒரு இரவு கூட சிறைவாசம் அனுபவிப்பதில்லை. பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் இத்தகைய குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பும்போது, கோவாவில் மட்டும் ஏன் அதை செய்ய கூடாது?'' என்றார்.

இதனிடையே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான அபராதம் மற்றும் சிறை தண்டனைகளை வழங்க மத்திய அரசும் திட்டமிட்டு வருகிறது. இதன்படி அதிவேகமாக வாகனம் ஓட்டி, முதல் முறையாக சிக்குபவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அதே நபர், அதே குற்றத்திற்காக இரண்டாவது முறையாக சிக்கினால், 4,000 ரூபாய் அபராதம் கட்ட வேண்டியது வரும். செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டி முதல் முறையாக சிக்கினால், 100 ரூபாயும், 2வது முறையாக சிக்கினால், 300 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும்.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 10 மடங்கு உயர்த்தப்படுகிறது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு தற்போது விதிக்கப்படும் ரூ.100 என்கிற அபராதம் ரூ.1,000ஆக உயர்வடைகிறது. எனவே போக்குவரத்து விதிகளை பின்பற்றினால், விபத்துக்களில் இருந்து தப்புவதுடன், இது போன்ற கடுமையான தண்டனைகளில் இருந்தும் தப்பி விடலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications