விரட்டி, விரட்டி பிடித்த பைக்குகள்! அபராதம் கட்டினாலும் கிடைக்குறது கஷ்டம்!! போலீசார் அதிரடி
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகள் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது அதன் அதிர வைக்கும் எக்ஸாஸ்ட் குழாய் சத்தம் தான். ஆனால், அந்த சத்தமும் போதாமல், மற்ற ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இருந்து வேறுப்பட்டு தெரிவதற்காக சிலர் ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் கூட எக்ஸாஸ்ட் குழாயில் மாற்றங்களை செய்கின்றனர். இது முற்றிலுமாக சட்டத்திற்கு விரோதமானது ஆகும். ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 6 எக்ஸாஸ்ட் மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளை தற்போது கோவா போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.
ஒரு சிலர் (குறிப்பாக இளைஞர்கள்) பைக்குகளை அதிக இரைச்சல் தரக்கூடியதாக வைத்திருந்தால் கெத்து என நினைக்கின்றனர். ஆனால் உண்மையில், அவை மற்றவர்களுக்கு மன உளைச்சலை தான் தருகின்றன. வேறு யோசனையில் நடந்து செல்லும்போது, திடீரென நெஞ்சை அதிர வைக்கும் சத்தத்தை கேட்டால் எவரொருவரும் கொஞ்சம் அதிர்ந்து போவார்கள்.

ஒரு சிலர் ராயல் என்ஃபீல்டு பைக்குகளிலும் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை மாற்றுகிறார்கள் என்பதுதான் இதில் நகைச்சுவையான விஷயமே. ஏனெனில், ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அவற்றின் "டுப் டுப்" சத்தத்திற்கு தான் பிரபலமாகியது. ஏற்கனவே உறுமக்கூடிய ராயல் என்ஃபீல்டு பைக்கின் எக்ஸாஸ்ட்டை மேலும் ட்யூன் செய்தால் அதன் சத்தம் இன்னும் அதிர வைக்கும் என்பது உண்மை.
அத்தகைய ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்று சென்றாலே காது கிழியும். இங்கு அவ்வாறான ராயல் என்ஃபீல்டு பைக்குகள் மொத்தம் 6 பைக்குகள் சென்றுள்ளன. நம்மில் நிறைய பேர் நண்பர்களுடன் ஜாலியாக கோவா சென்று வந்திருப்பீர்கள். சிலர் பைக்குகளில் சென்று வந்திருக்கலாம். அவ்வாறு, இங்கு ஒரு பைக் குழு எக்ஸாஸ்ட் மாடிஃபை செய்யப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உடன் கோவாவிற்கு சென்றுள்ளது.
ஆனால், பைக்கின் சத்தத்தை கேட்டு பாதி வழியிலேயே கோவா போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்டுள்ள படத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 6 ராயல் என்ஃபீல்டு பைக்குகளையும், அவற்றிற்கு அருகே 2 கோவா போக்குவரத்து போலீசாரையும் காணலாம்.

இதுகுறித்த ஃபேஸ்புக் பதிவில் "பனாஜி போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட அதிக இரைச்சல் தரக்கூடிய சைலன்சரை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு எதிரான நடவடிக்கையில், தலேய்கா பகுதியில் இரைச்சல் தரக்கூடிய எக்ஸாஸ்ட் சைலன்சர்களை கொண்ட 6 மோட்டார்சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளனர்" என குறிப்பிடப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள 6 ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் 2 காண்டினெண்டல் ஜிடி650, 2 இண்டர்செப்டர் 650, 2 ஹண்டர் 350 பைக்குகள் அடங்குகின்றன.
இந்த பைக்குகளில் எக்ஸாஸ்ட் குழாய் மாடிஃபை செய்யப்பட்டது மட்டுமின்றி, ஹெட்லைட்களும் மாற்றப்பட்டுள்ளன. மேற்கூறப்பட்டுள்ள ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் ஹண்டர் 350 கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் ராயல் என்ஃபீல்டு பைக் ஆகும். மற்ற இரு 650சிசி பைக்குகள் நீண்ட காலமாக விற்பனையில் உள்ளன. அவ்வப்போது இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 பைக்குகளையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அப்டேட் செய்துவிடுகிறது.
இந்த பவர்ஃபுல்லான 650சிசி ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் 649சிசி ஏர்/ஆயில்-கூல்டு, 2-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகப்பட்சமாக 47 பிஎச்பி மற்றும் 52 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஹண்டர் 350 பைக்கில் பொருத்தப்படும் 349.34சிசி ஏர்/ஆயில்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 20.2 பிஎச்பி மற்றும் 27 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய ஆற்றல்மிக்க பைக்குகளின் எக்ஸாஸ்ட் குழாயை தான் தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி உள்ளனர். கோவாவில் தற்போது நடந்திருப்பதுபோல், இதற்கு முன்பும் சிலமுறை இவ்வாறு போலீசார் அதிரடி காட்டியுள்ளனர். கோவா போலீசாரே கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் இதுபோன்று சுமார் 40 மோட்டார்சைக்கிள்களை அதிக இரைச்சலினால் பறிமுதல் செய்துள்ளனர். இவ்வாறு பைக்குகளை மாற்றிக் கொடுக்கும் மெக்கானிக்குகள் இதில் இருக்கும் தீமைகளை உணர வேண்டும்.
Image Courtesy: Goa Khabar


Click it and Unblock the Notifications








