ரோல்ஸ்ராய்ஸ் கார் விலைக்கு விற்பனைக்கு வந்த சைக்கிள்! அதில் அப்படி என்னதான் இருக்குது?
துபாயில் ரூபாய் 3.39 கோடி மதிப்பிலான சைக்கிள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு சைக்கிளில் என்ன இருக்கிறது தங்கமா இருக்கிறது? என நீங்கள் கேட்கலாம். இந்த சைக்கிள் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்டது தான். இந்த சைக்கிள் ஒரு நகை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள முக்கிய பகுதியான சார்ஜாவில் தற்போது 52-வது வாட்ச் மற்றும் நகைகளுக்கான கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் அந்நாட்டைச் சேர்ந்த அல் ரோமைஸான் தங்கம் மற்றும் நகை கடை சார்பில் தங்க சைக்கிள் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு மதிப்பில் 15 லட்சம் திராம்ஸ் என்ற விலையில் இந்த சைக்கிள் விற்பனைக்கு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 3.39 கோடியாகும்.

இவ்வளவு விலை மதிப்பு இந்த சைக்கிளுக்கு ஏன் என கேட்டால் இந்த சைக்கிள் தங்கத்தால் செய்யப்பட்டதாகும். அதனால்தான் இதை நகை கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த நகைக் கடைக்காரர்கள் இந்த சைக்கிளை ஒரு பிரிட்டிஷ் ரேஸ் சைக்கிள் போல வடிவமைத்துள்ளனர். முழுமையாக 24 கேரட் தங்கம் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் இந்த சைக்கிளின் எடை 7 கிலோ ஆகும், அதில் சுமார் 4 கிலோ 24 கேரட் தங்கம் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் ஹேண்டில் பார், வீல் ஸ்டேகள், கியர்கள், செயின்கள் எல்லாவற்றிலும் தங்கம் இருக்கிறது. இந்த சைக்கிள் பார்ப்பதற்கே கண்களைக் கவரும் வகையில் பளபளப்பான பினிஷிங் உடன் விற்பனைக்கு வருகிறது.
இந்த தங்க சைக்கிள் மெஷின் மூலம் இல்லாமல் முழுவதுமாக கைகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 20 ஊழியர்கள் கடந்த ஆறு மாதமாக உழைத்து உள்ளனர். இந்நிறுவனத்தின் தலைமை டிஜிட்டல் அதிகாரி முகமது அப்பாஸி தான் இந்த தங்க சைக்கிளை முதல் முறையாக அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த சைக்கிள் கண்காட்சியில் வரும் பார்வைக்காக மட்டும் வைக்கப்படவில்லை இதை விரும்பியவர்கள் வாங்கியும் செல்லலாம்.
இந்த சைக்கிளை வாங்கியவர்கள் இதை வெறும் காட்சிப் பொருளாக மட்டும் வைக்காமல் இதை சாலையில் ஓட்டி செல்லும் வகையில் அனைத்து வசதிகளுடன் தான் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் ஒட்டுமொத்த சைக்கிளின் எடையான ஏழு கிலோவில் நான்கு கிலோ மட்டுமே தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற 3 கிலோவில் சைக்கிளின் உறுதிக்காக மற்ற மெட்டல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சார்ஜாவில் நடந்து வரும் இந்த கண்காட்சியில் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவிலான 500 பிராண்டுகள் கலந்து கொண்டன. அவர்கள் எல்லாம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை எல்லாம் காட்சிப்படுத்தினார்கள். அதில் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த தங்க சைக்கிள் இருந்தது. இது போக பல நிறுவனங்கள் பல்வேறு விதமான வித்தியாசமான தயாரிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ஒரு சிறிய தங்க பொருளை வாங்கவே பெரிய அளவு கஷ்டப்பட்டு வரும் நிலையில், இந்த தங்க சைக்கிளை தற்போது யார் சொந்தமாகி கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக எழுந்துள்ளது. இந்த தங்க சைக்கிளை சொந்தமாகி கொள்பவர் இதை சாலையில் ஓட்டுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பொதுவாக தங்கத்தில் 24 கேரட் என்றால் அதில் தங்க நகைகள் செய்ய முடியாது. 22 கேரட்டாக இருந்தால் தான் தங்க நகைகள் செய்ய முடியும் என கூறுவார்கள். ஆனால் இந்த சார்ஜா நாட்டிலுள்ள நகைக்கடை 24 கேரட் தங்கத்தை வைத்து ஒரு சைக்கிளையை உருவாக்கி உள்ளது. சைக்கிளில் தங்கம் இருக்கும் பகுதி எல்லாம் 24 கேரட் தங்கமாக மட்டுமே இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகில் ஒரு காலத்தில் சைக்கிள் என்பது போக்குவரத்திற்கு மிக முக்கியமான வாகனமாக இருந்தது. ஏழைகள் கூட சைக்கிளை வாங்கி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எளிதாக நகர முடியும். சைக்கிள் எளிமையான போக்குவரத்துக்கு ஒரு வழியாக இருந்தது. ஆனால் இன்று சைக்கிள் என்பது பெரும்பாலும் போக்குவரத்தை விட உடற்பயிற்சிக்கான ஒரு சாதனமாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








