வாகன உரிமையாளர்கள் தலையில் இடியை இறக்கிய அரசு! டோல்கேட் போதாதுனு இனி இது வேறயா! எல்லாரும் வண்டிய விக்க போறாங்க
இந்திய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக பெங்களூர் (Bangalore), மும்பை (Mumbai), டெல்லி (Delhi) மற்றும் சென்னை (Chennai) போன்ற நகரங்களில் எல்லாம், போக்குவரத்து நெரிசல் பிரச்னை தற்போது தலை விரித்தாடி கொண்டுள்ளது. போக்குவரத்து நெரிசலால், 2 முக்கியமான பிரச்னைகளை பொதுமக்கள் சந்திக்கின்றனர். ஒன்று நேர விரயம். மற்றொன்று காற்று மாசுபாடு. எனவே சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைப்பதற்காக, அரசு பல்வேறு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தற்போது அதிரடியான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது. அது வாகனங்களுக்கு 'நெரிசல் வரி' (Congestion Tax) விதிக்கும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின்படி, நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகள் முதலில் அடையாளம் காணப்படும். 'பீக் ஹவர்' எனப்படும் பிஸியான நேரங்களில், அந்த சாலைகளின் வழியாக பயணம் செய்தால், அதற்காக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

'நெரிசல் வரி' என்ற பெயரில், அந்த கட்டணம் வசூல் செய்யப்படும். இந்த திட்டத்தை அரசு செயல்படுத்துவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இது சம்பந்தப்பட்ட சாலைகளில், 'பீக் ஹவர்' சமயங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும். கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், தேவையில்லாத பயணங்களை வாகன ஓட்டிகள் தவிர்ப்பார்கள்.
அத்தியாவசியமான பயணங்கள் மட்டுமே மேற்கொள்ளப்படும். இதன் காரணமாக நெரிசல் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் இது காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கவும் உதவி செய்யும். மேலும் பொதுமக்கள் பஸ், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்துவதற்கு இந்த திட்டம் வழிவகுக்கும்.

பொதுமக்கள் பொது போக்குவரத்து வாகனங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கினாலும், சாலைகளில் இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் குறைந்து விடும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும். இது போன்ற காரணங்களால்தான், 'நெரிசல் வரி' திட்டத்தை செயல்படுத்த அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது.
தற்போது டெல்லியில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வேலைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக டெல்லியில் 13 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடங்களில் எல்லாம் 'நெரிசல் வரி' வசூலிக்கும் திட்டம் கூடிய விரைவில் அமலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
போக்குவரத்து நெரிசலையும், காற்று மாசுபாடு பிரச்னையையும் குறைப்பது மட்டுமே இந்த திட்டத்தின் நோக்கம் என இந்த திட்டத்தில் தொடர்புடைய டெல்லி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூல் செய்வது மட்டும் இந்த திட்டத்தின் நோக்கம் கிடையாது என்பது அவர்களுடைய கருத்து.
டிராஃபிக் குவாலிட்டி இன்டெக்ஸ் (Traffic Quality Index) தரவுகளின்படி பார்த்தால், இந்தியாவிலேயே அதிக நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலில், டெல்லி 3வது இடத்தில் உள்ளது. முதல் 2 இடங்களில் முறையே பெங்களூர் மற்றும் மும்பை ஆகியவை உள்ளன. அத்துடன் டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்னையை பற்றி நாங்கள் தனியாக சொல்லி தெரிய வேண்டிய அவசியம் கிடையாது.
இந்தியாவின் தலைநகர் டெல்லி ஏற்கனவே காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே டெல்லியில் 'நெரிசல் வரி' திட்டத்தை கொண்டு வருவது அவசியம் என அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'நெரிசல் வரி' திட்டம், சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஏற்கனவே வெற்றிகரமாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: போக்குவரத்து நெரிசலையும், காற்று மாசுபாடு பிரச்னையையும் குறைக்க 'நெரிசல் வரி' போன்ற திட்டங்கள் அவசியமான ஒன்றுதான். ஆனால் பொதுமக்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையில், இது போன்ற திட்டங்களை நன்கு ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும் என்பது எங்கள் கருத்து.
அதே நேரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளை விரிவாக்கம் செய்தல் மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் பொது போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய திட்டங்கள் மூலமாகவும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க முடியும் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருதுகிறது.
இந்தியாவின் பெரும்பாலான பெரு நகர சாலைகள் உண்மையில் குறுகலாகவே உள்ளன. இது போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு மிக முக்கியமான காரணம். அதேபோல் நிறைய இடங்களுக்கு பஸ் மற்றும் மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வசதிகள் கிடையாது. அப்படிப்பட்ட இடங்களுக்கு எல்லாம், சொந்த வாகனங்களில் பயணம் செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு, அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








