போக்குவரத்து விதியை மீறினால் இன்சூரன்ஸ் கட்டணம் அதிகமாகும்.. நாம செய்யுற தப்பு அவங்களுக்கு எப்படி தெரியும்?..
போக்குவரத்து விதிமீறல்கள் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தலைவலியாக மாறியிருக்கின்றது. குறிப்பாக, டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் இது மிகப் பெரிய சவாலாகவே மாறியிருக்கின்றது. இந்த நிலையிலேயே போக்குவரத்து விதியை மீறுபவர்களுக்கு, அவர்கள் வழக்கமாக செலுத்துவதைவிட அதிக இன்சூரன்ஸ் பிரீமியத்தை செலுத்துவதற்கான புதிய திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான புதுமையான நடவடிக்கையாக இத்தகைய திட்டம் கையில் எடுக்கப்பட இருக்கின்றது. டெல்லியிலே இந்த திட்டத்திற்கான விதை தற்போது போடப்பட்டு இருக்கின்றது. டெல்லியின் துணைநிலை ஆளுநர் விகே சக்செனா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இதுகுறித்து ஓர் கோரிக்கையை அனுப்பி வைத்திருக்கின்றார்.
எனவே டெல்லியில், போக்குவரத்து விதியை மீறுபவர்கள் அதிக இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துவதற்கான சூழல் விரைவிலேயே உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு வாகனம் குவிக்கும் போக்குவரத்து அபராதங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே, அந்த வாகனத்திற்கான காப்பீட்டு பிரீமியம் தொகையும் இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவிற்கு வேண்டுமானால் இந்த விதி புதியதாக இருக்கலாம்.

பல வளர்ந்து நாடுகளில் ஏற்கனவே இந்த திட்டம் அமலில் உள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் இது ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. வாகனங்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட ஈடுபட அதற்கான காப்பீட்டு தொகையும் தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே இருக்கும்.
இதன் விளைவாகவே அங்கு மிகப் பெரிய அளவில் போக்குவரத்து விதிமீறல்கள் குறைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே வாகன ஓட்டிகளை போக்குவரத்து விதிகளை தவறாமல் கடைபிடிக்கச் செய்யும் பொருட்டு டெல்லியிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் அதிகரிப்பால் நாட்டில் அரங்கேறும் வாகன விபத்துகள் மற்றும் வாகன விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது.
இதனால்தான், இந்திய சாலைகளையும், வாகனங்களையும் இன்னும் அதிக பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என அண்மையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 4.57 லட்சம் சாலை விபத்துகளும், 1.55 லட்சம் உயிரிழப்புகளும் இந்தியாவில் ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுமாதிரியான சூழலைக் கருத்தில் கொண்டே டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்செனா வாகன உரிமையாளர்கள் பொது சாலைகளில் பொறுப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக விதியை மீறினால், காப்பீட்டு தொகை அதிகமாகும் என்கிற விதியை அமல்படுத்துவதற்கான வேலைகளில் களமிறங்கி இருக்கின்றார்.
இதன் அடிப்படையில் அவர் ஓர் கடிதத்தையும் அவர் அனுப்பி வைத்திருக்கின்றார். அந்த கடிதத்தில் அவர், "சாலை பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இன்சூரன்ஸ் பிரீமியத்தை, டிராஃபிக் விதிமீறல்களுடன் இணைக்க நான் பரிந்துரை செய்கின்றேன். விதிமீறல்களின் எண்ணிக்கையை பொருத்து காப்பீடு பிரீமியம் வசூல் செய்யப்படுவதனால் போக்குவரத்து விதிமீறல்களை கணிசமாக குறைக்க முடியும் என நம்புவதாக" தெரிவித்துள்ளார்.
எனவே, இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) இதுகுறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, இந்த டெல்லியில் மட்டுமின்றி இந்தியாவிற்கும் அமல்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கேற்ப நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களும், வாகனங்களால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டிய வண்ணம் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்றைய காலக்கட்டத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதங்கள் இ-செல்லாண் வாயிலாகவே அந்தந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது. இதுதவிர, வாஹன் உள்ளிட்ட அரசு தளங்களிலும் அபராதம் போன்ற முக்கிய விபரங்களை அறிந்துக் கொள்ள முடியும். இத்தகைய தளத்துடனேயே இன்சூரன்ஸும் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்துவதற்கான வேலைகளை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் பார்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, வாஹன் தளத்தை தொடர்ச்சியாக கண்கானித்து அந்தந்த வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தை ஆணையம் நிர்ணயம் செய்யும்.


Click it and Unblock the Notifications








