பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ10 குறைய வாய்ப்பு! தீபாவளி பரிசு காத்திருக்கிறது!
தீபாவளியை முன்னிட்டு மக்களுக்கு தீபாவளி பரிசாக பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 10 வரை குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கலால் வரியை குறைக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 100க்கும் அதிகமாக தான் அனைத்து மாநிலங்களிலும் விற்பனையாகி வருகிறது. ஒரு சில மாநிலங்களில் மட்டுமே ரூபாய் 100 விட வெகு சில ரூபாய்கள் மட்டும் குறைவான விலையில் விற்பனையாகி வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாகவே மக்கள் பலர் கருதுகின்றனர். இதை குறைக்க மத்திய மாநில அரசுகள் நிச்சயம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதிக்கு பிறகு இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரே மாதிரியான விலையில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக பெட்ரோல் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதால் அடுத்த மாற்றம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என மக்கள் பலர் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
இந்நிலையில் வரும் 12ஆம் தேதி இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் இந்த தீபாவளி பண்டிகைக்கு மக்களுக்கு தீபாவளி பரிசாக மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 10 குறைக்க முடிவு செய்திருப்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளன. இதற்கான சாத்திய கூறுகள் மற்றும் ஆய்வுப் பணிகளை செய்ய தற்போது மத்திய அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இதையடுத்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தற்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதேபோல கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாள் மத்திய அரசு பெட்ரோல் வீதான விலையில் ரூபாய் 5ம் டீசல் விலையில் ரூபாய் 10-ம் குறைத்து அறிவித்தது. மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீது விதிக்கும் கலால் வரியை குறைத்து இந்த விலை குறைவை அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது தீபாவளி பரிசாக மீண்டும் கலால் வரியையே குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இப்படியாக கலால் வரியை குறைக்கும் முன் அதனால் ஏற்படும் நஷ்டத்தை எப்படி ஈடு செய்வது என்பது குறித்து தற்போது ஆலோசனைகள் நடந்து வருகிறது. இவையெல்லாம் வெற்றிகரமாக திட்டமிடும் பட்சத்தில் இந்த தீபாவளிக்கு இந்தியா முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு தீபாவளி பரிசாக பெட்ரோல்,டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 10 குறைய வாய்ப்புள்ளது.

பெட்ரோல் என்பது கச்சா எண்ணெய்யை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் பொருளாகும். கச்சா எண்ணெயின் விலை என்பது சர்வதேச மார்க்கெட் தீர்மானிக்கும் விஷயம் தான். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து தான் பெட்ரோலின் அடிப்படை விலை என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை ஏறும் போது பெட்ரோலின் அடிப்படை விலை ஏறும் கச்சா எண்ணெய் விலை குறையும் போது பெட்ரோலின் அடிப்படை விலை குறையும். இந்தியா பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து தான் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து பெட்ரோல் தயாரித்து வருகிறது.

இப்படியாக இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி பெட்ரோல் தயாரிக்க ஒரு லிட்டருக்கு 57.35 ரூபாய் வரை செலவாகிறது. இந்த மதிப்பிற்கு கலால் வரி விதிக்கப்படுகிறது. லிட்டருக்கு 19.90 என்ற மதிப்பில் கலால் வரி விதிக்கப்படுகிறது. இது போக டீலர் கமிஷன் இருக்கிறது, மதிப்பு கூட்டு வரியிருக்கிறது, இவை எல்லாம் சேர்த்து தான் இந்தியவில் பெட்ரோல் விலை என்பது நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதில் அடிப்படை விலை என்பது பெட்ரோலுக்கான போக்குவரத்து செலவு தொகையையும் சேர்த்து அடங்கும். ஊருக்கு ஊர் இந்த போக்குவரத்து செலவு மாறுபடுவதால் ஊருக்கு ஒரு பெட்ரோல் விலையும் சிறிய அளவில் மாறுபடும். தற்போது மத்திய அரசு அதன் கலால் வரியை லிட்டருக்கு ரூபாய் 10 வரை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தற்போது ரூபாய் சுமார் 100க்கு விற்பனையாகும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 90ஆக குறையும் வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு பெட்ரோல் மீதான அதிக வரியை சுமத்துவதற்கு மக்கள் பெட்ரோலை அளவாகவும் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு நோக்கமும் இருக்கிறது. இப்படியாக பெட்ரோல் விலையை அதிரடியாக குறைத்தால் பெட்ரோல் விற்பனை அதிகமாகும், இதனால் பெட்ரோல் தேவை அதிகரிக்கும். இருந்தாலும் தீபாவளியை ஒட்டி மக்களுக்கு சில காலத்திற்கு இந்த குறைந்த விலை பெட்ரோலை மத்திய அரசு வழங்க திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
