இந்தியாவில் முதல்முறையாக நடக்கும் மோட்டோஜிபி!! இந்த விருந்தினர் இல்லாம எப்படி? முறைப்படி அழைப்பு விடுத்தாச்சு
இந்தியாவில் வருகிய செட்பம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள மோட்டோஜிபி பந்தயத்தில் கலந்து கொள்ளுமாறு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூரை நேரில் சென்று மோட்டோஜிபி பாரத் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்தும், இந்தியாவில் நடக்கவுள்ள மோட்டோ ஜிபி பந்தயம் குறித்தும் முழுமையாக இனி பார்க்கலாம்.
உலகளவில் நடத்தப்படும் மிக பெரும் மோட்டார்சைக்கிள் பந்தயம் மோட்டோ ஜிபி ஆகும். வருடம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உலகின் தலைசிறந்த தொழில்முறை பந்தய வீரர்களுக்கு இடையே, முன்னணி கார்ப்பிரேட் நிறுவனங்களால் நடத்தப்படும் மோட்டார்சைக்கிள் பந்தயம் இதுவாகும். போர்ச்சுகலில் கடந்த மார்ச் 26ஆம் தேதி 2023ஆம் ஆண்டிற்கான மோட்டோஜிபி பந்தயம் துவங்கியது.

அதன்பின் அர்ஜெண்டினா, அமெரிக்கா, பிரான்ஸ், நெதர்லாந்து என பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இந்த பந்தயம் தற்சமயம் கஜகஸ்தான் நாட்டில் நடைபெற வேண்டியது. ஆனால் கஜகஸ்தானில் போட்டி நடத்துவதற்கான பந்தய களம் தயாராகாததால் அந்த நாட்டில் நடைபெற வேண்டிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அடுத்தக்கட்ட போட்டிகள் இங்கிலாந்தில் வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி துவங்கவுள்ளன.
இங்கிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரியா, ஸ்பெயின், இத்தாலி என ஐரோப்பிய நாடுகளில் 2023 மோட்டோஜிபி நடைபெறவுள்ளது. இத்தாலியில் நடைபெறும் சான் மரினோ ஜிபி பந்தயத்தை முடித்துக்கொண்டு மோட்டோஜிபி குழுவினர் இந்தியாவிற்கு வர உள்ளனர். இந்த வகையில் இந்தியாவில் முதல்முறையாக மோட்டோஜிபி பந்தயம் நடத்தப்பட உள்ளது. வருகிற செப்டம்பர் 24ஆம் தேதி நொய்டாவில் உள்ள புத் சர்வதேச பந்தய களத்தில் இந்த போட்டி நடத்தப்பட உள்ளது.

இந்தியாவில் 2023 மோட்டோஜிபி பந்தயத்தை மோட்டோஜிபி பாரத் குழுவினர் முன்னிருந்து நடத்தவுள்ளனர். இந்த நிலையில், கிராண்ட் பிரிக்ஸ் ஆஃப் இந்தியா மோட்டோஜிபி பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூரை அவரது இல்லத்தில் வைத்து மோட்டோஜிபி பாரத் குழு அழைப்பு விடுத்துள்ளனர்.
அத்துடன், KYT ஹெல்மெட் ஒன்றும் அமைச்சருக்கு இந்த சந்திப்பில் நினைவு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது மோட்டோஜிபி பாரத் குழுவினர் உடன் சில மோட்டோஜிபி ரைடர்களும் இருந்தனர். பின்னர், தனது வீட்டில் இருந்து வெளியே வந்து, ரைடர்களுடன் ஓர் சிறிய பைக் ரைடிங்கையும் அமைச்சர் அனுராக் சிங் தாகூர் மேற்கொண்டார். இதுகுறித்த வீடியோவை கீழே காணலாம்.
#WATCH | Delhi: Union Minister for Youth Affairs & Sports Anurag Thakur rides bike with Moto GP riders pic.twitter.com/2TNrDFUtRA
— ANI (@ANI) July 8, 2023
பின்னர், மோட்டோஜிபி பாரத் குறித்து பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், "மோட்டோஜிபி இந்தியாவில் முதன்முறையாக நடைபெற உள்ளது. இந்த பெரிய நிகழ்வு இந்தியாவின் கௌதம் புத் நகரில் நடைபெறும். முதல்முறையாக இந்திய பந்தய வீரர் மோட்டோஜிபி பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார். இது பந்தய பைக்களுக்கு உந்துதலாக இருக்கும். நமது ஆட்டோமொபைல் துறையும் அதிக வளர்ச்சி பெறும்.
இது ஒரு பெரிய முயற்சியாக இருக்கும். இது ஆரம்பம் தான், பந்தயத்தில் இந்தியா புதிய உயரங்களை எட்டும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றார். கிராண்ட் பிரிக்ஸ் ஆஃப் இந்தியா பந்தயத்தில் முக்கியமான போட்டிகள் செப்டம்பர் 24ஆம் தேதி நடத்தப்பட உள்ளன என்றாலும், ஒத்திகை போட்டிகள் உள்ளிட்ட மற்ற போட்டிகள் செப்டம்பர் 22ஆம் தேதியே துவங்கவுள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மோட்டோஜிபி பந்தயங்களுக்கு நம் இந்தியாவிலும் பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் உள்ளது. இருப்பினும், இந்த போட்டியை பொது மக்களிடத்தில் எந்த அளவிற்கு விளம்பரப்படுத்த முடியுமோ அதற்கான வேலைகள் அனைத்தையும் மோட்டோஜிபி பாரத் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அழைக்கப்பட்டு இருப்பதும் அதில் ஒரு பகுதியே ஆகும். ஆதலால், விரைவில் பிரதமர் மோடி அழைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications









