ஓவர் ஸ்பீடில் போனா இவ்ளோ ரூபாவ அபராதமா வசூலிப்பாங்களா! மாச சம்பளத்துல பெரும் தொகையை கொடுக்கணும்போலையே!
இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டில் அரங்கேறிய விபத்துகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை பற்றிய புள்ளி விபரங்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. அது வெளியிட்ட தகவலின்படி, உலகிலேயே அதிக வாகன விபத்துகளைச் சந்திக்கும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த தகவல் பெரும் வேதனை அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. சுமார் 1,68,491 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். கடந்த ஓராண்டிலேயே இந்த அளவு மாபெரும் உயிரிழப்புகளை சாலை விபத்தினால் இந்தியா சந்தித்து இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக 4,61,312 விபத்துகளும், விபத்தினால் சுமார் 4,43,366 பேர் காயமும் அடைந்திருக்கின்றனர்.

இந்த அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் தற்போது உறைய வைத்து இருக்கின்றது. இந்த விபத்துகளில் பெரும் அளவிலான விபத்திற்கு அதிக வேகமே முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. இதுமட்டுமல்ல இன்னும் பல காரணங்களால் நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது.
இருப்பினும், அதீத வேகத்தினால் அரங்கேறிய விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளுமே நாட்டில் அதிகளவில் உள்ளது. இந்த நிலையிலேயே பலரின் உயிரிழப்பிற்கும், விபத்துகளுக்கும் காரணமாக இருக்கும் இந்த அதிக வேகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை காவல்துறை இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.

மேலும், வாகனங்களுக்கான வேக வரம்பையும் சென்னைக் காவல்துறை தற்போது அறிவித்து இருக்கின்றது. வாகனங்களின் ரகத்திற்கு ஏற்ப வேக வரம்பு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. பைக் மற்றும் ஸ்கூட்டர் போன்ற இரண்டு சக்கர வாகனங்களுக்கு அதிகபட்ச வேகம் மணிக்கு 50 கிமீ என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல், ஆட்டோ உட்பட பிற மூன்று சக்கர வாகனங்களுக்கு அதிகபட்ச வேகமாக மணிக்கு 40 கிமீ என கூறப்பட்டு இருக்கின்றது. நன்கு சக்கர வாகனம் உட்பட மற்ற இலகு ரக வாகனங்கள் மணிக்கு 60 கிமீ வேகம் வரை பயணித்துக் கொள்ளலாம்.

அதேவேளையில், குடியிருப்பு பகுதிகளுக்குள் பயணிக்கும் மணிக்கு 30 கிமீ வேகத்தில் மட்டுமே எந்த வகை வாகனமாக இருந்தாலும் பயணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆமாங்க, இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கரம் என அனைத்து வகையான வாகனங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.
இந்த விதியை மீறும் பட்சத்தில், குறிப்பிட்ட அந்த வாகனத்திற்கு உச்சபட்ச அபராதம் விதிக்கப்பட உள்ளது. ரூ. 2000 ஆயிரம் வரை ஓவர் ஸ்பீடுக்கு அபராதமாக வசூலிக்கப்பட இருக்கின்றது. அதுவே, வாகனத்தை ரேஷ் டிரைவ் (காட்டுத் தனமாக) ஓட்டினால் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும்.
இதே தொகையே ரேஸ் பந்தயத்தில் ஈடுபட்டால் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. எனவே, தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் வேகத்தைத் தாண்டி நீங்கள் வாகனத்தை ஓட்ட வேண்டும் என நினைத்தால், உங்களது சம்பளத்தில் பெரும் தொகையை அரசுக்கு அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும்.
இதுதவிர தொடர்ச்சியாக இதே போக்குவரத்து விதிமீறலில் ஓர் வாகன ஓட்டி ஈடுபட நேர்ந்தால், அந்த வாகன ஓட்டியின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுதல் அல்லது வாகனத்தை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை சென்னை போக்குவரத்துக் காவல்துறை மேற்கொள்ளும் என கூறப்படுகின்றது.
புதிய வேகக் கட்டுப்பாடு வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி முதல் சென்னையில் அமல்படுத்தப்பட இருப்பதாக சென்னை பெருநகர காவல் ஆணையரகம் அறிவித்து இருக்கின்றது. வாகனங்களினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கும் பொருட்டே இந்த அதிரடி அறிவிப்பை அது அறிவித்து இருக்கின்றது. ஆகையால் வரும் நாட்களில் சென்னையில் வாகன விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன விபத்து பலமடங்கு அதிகரித்துக் காணப்படுவது உலக அரங்கில் நம்முடைய மதிப்பை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையிலேயே சென்னை காவல்துறை, ஓவர்ஸ்பீடை இரும்புக் கரம் கொண்டு அடக்க முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. ஆனால், இந்த நடவடிக்கை டெலிவரி பாய்களை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி கொடுக்க தவறினால் அவர்களுக்கு அது சர்ச்சையை ஏற்படுத்தக் கூடும்.


Click it and Unblock the Notifications









