பார்வையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் தீ விபத்து... காரணம் என்ன தெரியுமா?
பார்வையாளர்கள் படையெடுத்து வரும் நிலையில், ஆட்டோ எக்ஸ்போவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மார்ட்டில், ஆட்டோ எக்ஸ்போ 2020 நடைபெற்று வருகிறது. ஆசிய கண்டத்தின் மிக முக்கியமான ஆட்டோமொபைல் நிகழ்ச்சிகளில் ஒன்றாக உள்ள இந்த ஆட்டோ எக்ஸ்போவின் 15வது எடிசன் கடந்த பிப்ரவரி 5ம் தேதி தொடங்கியது. நாளையுடன் (பிப்ரவரி 12) ஆட்டோ எக்ஸ்போ 2020 நிறைவடைகிறது.

இன்னும் ஒரே ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளதால், பார்வையாளர்கள் சாரை சாரையாக ஆட்டோ எக்ஸ்போ திருவிழாவிற்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால், பார்வையாளர்களின் வருகை மிக அதிகமாக இருந்தது. அன்றைய தினம் மட்டும் 1.2 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்தனர்.

அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சனி மற்றும் ஞாயிறு போன்ற வார விடுமுறை நாட்கள் மட்டுமல்லாது, வார நாட்களிலும் கூட பார்வையாளர்களின் வருகை நன்றாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த ஞாயிற்று கிழமை மதியம் நடைபெற்ற தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ நடந்து வரும் இடத்திற்கு அருகே திறந்தவெளி பார்க்கிங் மைதானத்தில், கடந்த ஞாயிற்று கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் இது சிறிய அளவிலான தீ விபத்துதான். பார்க்கிங் பகுதியில் இருந்து புகை வந்ததை சிலர் பார்த்துள்ளனர். இதன் மூலமாக தீ விபத்து ஏற்பட்ட விஷயம் வெளியே தெரிந்தது.

பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கார்களுக்கு இடையே இருந்து புகை வருவதாக மதியம் 1.30 மணியளவில் தீயணைப்பு துறைக்கு தகவல் சென்றுள்ளது. எனவே இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்தன. அப்போது பார்க்கிங் செய்யப்பட்டிருந்த ஒரு காரின் அடியில் இருந்து புகை வந்து கொண்டிருந்ததை தீயணைப்பு வீரர்கள் பார்த்துள்ளனர்.

ஆனால் உடனடியாக தீ அணைக்கப்பட்டு விட்டது. யாரேனும் சிகரெட்டை அணைக்காமல் காருக்கு அருகே வீசியதால், இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த காருக்கு தீ பரவவில்லை. அதற்கு முன்னதாகவே தீ அணைக்கப்பட்டு விட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சுமார் ஒரு வார காலமாக நடைபெற்று வரும் ஆட்டோ எக்ஸ்போ 2020 நாளையுடன் நிறைவடைகிறது. இதில், ஏராளமான புதிய வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் புதிய மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் கிரெட்டா போன்ற கார்கள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளன.

இதுதவிர ஏராளமான கான்செப்ட் வாகனங்களும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தவர்களை கடந்த சனிக்கிழமை உள்ளே அனுமதிப்பதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டன. அப்போது கேட்கள் மூடப்பட்டதால், பார்வையாளர்கள் வலுக்கட்டாயமாக திறக்க முயன்றனர்.

இதனால் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் லேசான தடியடி நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் கொஞ்ச நேரத்திலேயே அந்த பிரச்னை சரி செய்யப்பட்டு, பார்வையாளர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








