தம்மாதுண்டு எலெக்ட்ரிக் பைக்கில் கல்யாணத்துக்கு வந்தது அவரா! கொஞ்சம் கூட பந்தாவே இல்ல! வாயை பிளக்கும் மக்கள்!
இந்தியாவில் திருமணங்களை (Weddings) மிகவும் ஆடம்பரமாக நடத்தும் கலாச்சாரம் இருந்து வருகிறது. மக்கள் தங்கள் அந்தஸ்தை வெளிக்காட்டும் ஒரு நிகழ்ச்சியாக திருமணங்களை கருதுவதுதான் இதற்கு காரணம். எனவே ஒரு சிலர் பல கோடிக்கணக்கான ரூபாயை திருமணங்களுக்கு வாரி இறைக்கின்றனர். அங்கெல்லாம் எளிமை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
அத்தகைய திருமண நிகழ்ச்சிகளில், மணமகன் மற்றும் மணமகளை மண்டபத்திற்கு அழைத்து வரும் ஊர்வலங்களில் கூட, மிகவும் விலை உயர்ந்த கார்களை நம்மால் பார்க்க முடியும். அவ்வளவு ஏன்? ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce), ஆடி (Audi) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்களின் கார்களை வாடகைக்கு எடுத்து திருமண நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்துபவர்களும் கூட இருக்கவே செய்கின்றனர்.

இப்படிப்பட்ட ஆடம்பரங்களுக்கு மத்தியில் மிகவும் வித்தியாசமான திருமண ஊர்வலம் ஒன்று கர்நாடகா (Karnataka) மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் (Bangalore) சமீபத்தில் நடந்துள்ளது. அங்கு மணமகனும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் ஊர்வலமாக மண்டபத்திற்கு செல்ல யூலு பைக்குகளை (Yulu Bikes) பயன்படுத்தியுள்ளனர்.
யூலு என்பது பெங்களூர் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) செல்போன் செயலி மூலமாக நீங்கள் எடுத்து பயன்படுத்த முடியும். இதற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக (Fare) செலுத்த வேண்டும்.

இந்த எலெக்ட்ரிக் பைக்குகள் உருவத்தில் மிகவும் சிறியதாக, சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். போக்குவரத்து நெரிசல் (Traffic Congestion) மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு இவை மிகவும் ஏற்றவையாக உள்ளன. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில் யூலு நிறுவனத்தின் பைக்குகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது.
இந்த பைக்குகளில்தான் மணமகனும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களும் மண்டபத்திற்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த வித்தியாசமான திருமண ஊர்வலத்தின் வைரல் வீடியோ (Viral Video) சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த முயற்சிக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஆடம்பரமான திருமணங்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் அங்கொன்றும், இங்கொன்றுமாக அவ்வப்போது வித்தியாசமான மற்றும் எளிமையான திருமண ஊர்வலங்களும் அரங்கேறி கொண்டுதான் உள்ளன. இதற்கு முன்பாக மாட்டு வண்டிகளிலும், எளிமையான டூவீலர்களிலும் (Two Wheelers) மணமக்கள் ஊர்வலம் சென்ற நிகழ்வுகளை பார்த்திருக்கிறோம்.
இந்த வரிசையில்தான் யூலு பைக் திருமண ஊர்வலம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சாதாரண எலெக்ட்ரிக் பைக்கில் வருவது திருமண மாப்பிள்ளையா? என நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். திடீரென சார்ஜ் இல்லாமல் நின்று விட்டால், என்ன செய்வது? என ஒரு சிலர் வேடிக்கையாகவும் கமெண்ட் செய்து கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








