நடுரோட்டில் மாப்பிள்ளை இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கல! மண்டபத்துக்கு போக வேண்டிய கார் போலீஸ் ஸ்டேஷனில்
தான் திருமணம் செய்தது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக புது மாப்பிள்ளை ஒருவர் மஹிந்திரா காரின் மேற்கூரையின் மீது ஏறி நின்றுக் கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். எங்கு இந்த விசித்திரமான சம்பவம் நடந்தது? அதன்பின் அந்த நபர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆபத்தான முறையில் வாகன ஓட்டுவது நம் நாட்டு மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது மட்டுமின்றி, மற்றவர்களை பயமுறுத்தும் வகையில் வாகனங்களில் பயணம் செய்வதையும் அடிக்கடி இணையத்தில் பார்க்க முடிகிறது. சமூக வலைத்தளங்களில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க இவ்வாறான செயல்களில் சிலர் ஈடுப்படுகின்றனர்.

அத்தகையவர்களை அடையாளம் கண்டு போலீஸார் அபராதம் விதிப்பது ஒருபக்கம் இருந்தாலும், மறுப்பக்கம் எப்போதும்போல் போக்குவரத்து விதிகளை மீறுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த வரிசையில், உத்தர பிரதேசம் மாநிலத்தில் புதியதாக திருமணம் முடித்த ஒரு நபர், மேரேஜ் போட்டோ ஷூட்டிற்காக நடுரோட்டில் காரின் மேற்கூரையில் ஏறி நின்றுக்கொண்டு மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் சஹாரன்புர் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த சம்பவம் தொடர்பான படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சஃபாரி உடை மற்றும் ஆபரண அணிகலன்களை அணிந்துக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு சிலை போல் காரின் மீது நின்றுக்கொண்டு இந்த நபர் போட்டோ எடுத்து கொண்டுள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து, போலீஸாரின் பார்வையிலும் பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மஹிந்திரா காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த செயலில் ஈடுப்பட்டுள்ள புது மாப்பிள்ளையின் பெயர் அன்கிட் ஆகும். சஹாரன்புரில் உள்ள பாயிலா கிராமத்தில் வசிக்கும் இவருக்கும், மீரட்டில் உள்ள ஒரு பெண்ணிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு உள்ளது.
திருமணத்திற்காக மண்டபத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த அன்கிட் மற்றும் அவரது நண்பர்கள் இடையில் காரை நிறுத்திவிட்டு, அன்கிட்டை காருக்கு மேலே ஏற்றி ட்ரோன் மூலமாகவும், தங்களது கேமராக்கள் மூலமாகவும் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தது, பரபரப்பான டெல்லி- டெஹ்ராடூன் நெடுஞ்சாலை ஆகும்.

ஹைவேயில் காரின் மேற்கூரையின் மீது ஏறி நின்றால், நிச்சயமாக சாலையில் செல்லும் அனைவரும் கொஞ்சம் விசித்திரமாக பார்ப்பார்கள். அவ்வாறு அன்கிட்டையும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் வித்தியாசமாக பார்த்தப்படி சென்றுள்ளனர். இந்த விஷயம் எப்படியோ போலீஸாரின் காதில் விழ, வழியிலேயே அன்கிட் மற்றும் அவரது குழுவை போலீஸார் தடுத்தி நிறுத்தி, காரை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுகுறித்து காடாலி நகர போலீஸ் அதிகாரி யாதேந்திரா சிங் நகர் கூறுகையில், "திருமண மாப்பிள்ளை ஒருவர் காரின் மேற்கூரையில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ குறித்த தகவல் எங்களுக்கு கிடைத்தது. மன்சூர்பூர் காவல்துறையினரால் தேசிய நெடுஞ்சாலை எண் 58-இல் தடுத்து நிறுத்தப்பட்டு, கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த சம்பவத்தில் இந்த நபர் சாலையில் நின்றிருந்த காரின் மேற்கூரையின் மீது ஏறி நின்றுள்ளார். அதுவே, ஓடும் காரின் மீது இவ்வாறு செய்திருந்தால், யோசிக்கவே முடியாத அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். இருப்பினும், இவ்வாறு ஓய்வு நிலையில் உள்ள காரின் பொனெட் மீது ஏறுவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், இவ்வாறான செயல்கள் மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடித்து விபத்துகளை ஏற்படுத்திவிடலாம்.


Click it and Unblock the Notifications








