பொடி பசங்க பார்த்த வேலை.. 26 கார்களை போலீஸ் எடுத்து போயிட்டாங்க.. மசராட்டி, போர்ஷே கார்களையும் விட்டு வைக்கல!!
12 ஆம் வகுப்பு பயிலும் சிறுவர்கள் சிலர் பார்த்த வேலையால் மொத்தமாக 26 ஆடம்பர கார்களை போலீஸார் பறிமுதல் செய்யும் சூழல் ஏற்பட்டு இருக்கின்றது. அப்படி என்ன வேலையை அந்த 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் செய்தார்கள் என்று தானே கேக்குறீங்க. இன்னும் ஒரு சில தினங்களில் 12 ஆம் வகுப்புக்கான இறுதி ஆண்டு தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. ஆகையால், இப்போது 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் சிலர் தங்களின் சக மாணவர்களுக்கு பிரியா விடைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த மாதிரியான நிகழ்வையே குஜராத்தில் உள்ள தனியார் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் செய்திருக்கின்றனர். இதன் விளைவாகவே அனைத்து கார்களும் தற்போது போலீஸ் கஸ்டடியில் சிக்கி இருக்கின்றது. 26க்கும் மேற்பட்ட மாணவர்கள் மொத்தமாக 26 கார்களில் பிரியா விடையை அனுசரிக்கும் விதமாக கார் ரேலி செய்திருக்கின்றனர்.

அவர்கள் முறையான அனுமதி பெறாமலேயே இந்த செயலில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதுபோன்று அதிக எண்ணிக்கையில் கார்களை ஒரே நேரத்தில் ரேலி செய்யும்போது போலீஸாரிடத்தில் முன்னரே அறிவிப்பு செய்து அதற்கான அனுமதியைப் பெற வேண்டும். அசம்பாவிதம் எதுவும் ரேலியின்போது ஏற்படக் கூடாது என்பதற்காகவே இது கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றது.
ஆனால், இதை செய்யாமலே 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வாகன ரேலியில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதன் விளைவாகவே அனைத்து கார்களையும் தற்போது குஜராத் காவல்துறை சிறைப் பிடித்திருக்கின்றது. குஜராத்தின் சூரத்-திலேயே இந்த விநோத நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. காவலர்கள் வாகன ரேலியில் ஈடுபட்ட ஒரு காரைகூட விடவில்லை என தெரிகின்றது.
மொத்தமாக 26 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Land Rover Defender), மசராட்டி லேவண்டே (Maserati Levante) மற்றும் போர்ஷே 718 கேமேன் ஸ்பைடர் (Porsche 718 Cayman Spyder) போன்ற மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
இதுமட்டுமல்ல பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5-Series), பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7), மெர்சிடிஸ் பென்ஸ் இ-கிளாஸ் (Mercedes-Benz E-Class), கியா கார்னிவல் (Kia Carnival) மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜண்டர் (Toyota Fortuner Legender) போன்ற ஆடம்பர வகை கார்களையும் விதிமீறி வாகன ரேலியில் ஈடுபட்டதாகக் கூறி பறிமுதல் செய்திருக்கின்றனர்.
மிகப் பெரிய அளவில் இந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு முன்னர் இந்த வாகனங்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆவணங்களில் ஏதேனும் சிக்கல் இருப்பின் அந்த வாகனத்தின் மீது கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று அனுமதியின்றி வாகன ரேலியில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்வது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இந்த மாதிரியான சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே 12 ஆம் வகுப்பு பயிலும் சிறுவர்களினால் மேற்கொள்ளப்பட்ட வாகன ரேலி சம்பவம் அரங்கேறி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









