கோல்டு நிறத்தில் ஆடி காரை மாற்றிக் கொண்ட ஓனர்!! யார் சாமி இவரு...
நம் இந்தியர்களையும் தங்க ஆபரணங்களையும் பிரிக்கவே முடியாது. இது இப்போது இல்லை, மன்னர் காலத்தில் இருந்தே தங்கத்தின் மீது நமக்கு ஓர் இனம்புரியாத ஈர்ப்பு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், உலகிலேயே அதிக தங்க ஆபரணங்களை பல்வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தியது நம் இந்தியர்கள் எனலாம். இதன் காரணமாகவே, அதன் தாக்கம் நம்மிடத்தில் இப்போதுவரையிலும் உள்ளது. அதன் வெளிப்பாடாக, எப்போதும் கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து உலாவரும் குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ஆடி காருக்கு கோல்டு நிறத்தில் பெயிண்ட் கொடுத்துள்ளார். அவரை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் மட்டுமில்லாமல், உலகளவில் பலர் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கார்களை கொஞ்சம் ஸ்பெஷலாகவே பார்க்கின்றனர். அதிலிலும் நம் இந்தியர்கள் தங்களது கார்களை நண்பர்கள் ரேஞ்சுக்கு பார்க்கின்றனர். அதனால்தான், இங்கு ஒருவர் தனது ஆடி காருக்கு கோல்டன் நிறத்தில் பெயிண்ட் வ்ராப்-ஐ கொடுத்துள்ளார்.

இவரது பெயர் பாரத்ஜி தாகூர். ஆனால் எல்லாரும் கோல்டு மேன் என்றுதான் அழைக்கின்றனர். இதற்கு காரணம், கை மற்றும் கழுத்தில் கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களை உடுத்தியப்படி இவர் வலம் வருகிறார். குறிப்பாக கழுத்தில், பெட்ரோல் பம்ப் அகலத்திற்கு தங்க நகையை இரண்டு சுற்றாக அணிந்துள்ளார். அதில் பெரிய அளவில் டாலர் ஒன்று தொங்குகிறது.
இவை எல்லாம் தங்கம் தானா என்பது அவருக்கு மட்டுமே தெரியும். இருப்பினும், இந்த கெட்-அப்பிற்காகவே இவரை இன்ஸ்டாகிராமில் நிறைய பேர் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில், குஜராத்தை சேர்ந்த பாரத்ஜி தாகூர் தனது ஆடி காருக்கும் கோல்டு நிறத்தில் வ்ராப் கொடுத்துள்ளார். இதனால், கார் முழுவதும் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. இது உண்மையான தங்கமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.

பாரத்ஜி தாகூரிடம் இருப்பது ஓல்டு-ஜென்ரேஷன் ஆடி க்யூ5 கார் ஆகும். இன்ஸ்டாகிராமில் முன்னர் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், இவரது ஆடி க்யூ5 காரை கருப்பு நிறத்தில் பார்க்க முடிகிறது. ஆனால், பாரத்ஜியின் சமீபத்திய இன்ஸ்டா பதிவில், அதே ஆடி க்யூ5 கார் தங்க நிறத்தில் அவரது பக்கத்தில் நிற்கிறது. ஆதலால், காரை இவ்வாறு முழுவதுமாக கோல்டு நிறத்திற்கு மாற்ற வேண்டும் என்கிற ஐடியா சமீபத்தில்தான் இவருக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால், பாரத்ஜி தாகூரின் இந்த ஆடி காரில் நம்பர் பிளேட்டில் பதிவெண்கள் ஏற்கனவே தங்க நிறத்திற்கு மாற்றப்பட்டு இருந்தன. மேலும், நம்பர் பிளேட்டிற்கு மேலே 'குஜராத்தின் தங்க மனிதன்' என்கிற பெயர் பலகையையும் பாரத்ஜி தாகூர் ஏற்கனவே தங்க நிறத்தில் பொருத்தியுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது முழு காரும் தங்க நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி, எந்தவொரு வாகன ஓட்டியும் தனது வாகனத்தின் நம்பர் பிளேட்டின் நிறத்திலோ அல்லது எழுத்துருவின் ஸ்டைலிலோ மாற்றங்களை செய்வது சட்டப்படி குற்றமாகும். ஏனெனில், நம் நாட்டில் நம்பர் பிளேட்டின் நிறங்கள் ஒவ்வொரு விதமான பயன்பாட்டிற்கு என ஒதுக்கப்பட்டுள்ளன. சொந்த பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் வெள்ளை நிற பிளேட்டில் கருப்பு நிறத்தில் பதிவெண் இருக்க வேண்டும் என்பது விதி ஆகும்.
பாரத்ஜி தாகூர் தனது இந்த ஆடி க்யூ5 காருக்கு '7777' என்கிற ஃபேன்சி பதிவெண்ணை கொடுத்திருப்பதை பார்க்க முடிகிறது. உண்மையில் இந்த ஃபேன்சி பதிவெண்ணை அவர் ஆர்டிஓ-இல் இருந்து வாங்கியுள்ளார் எனும்போது இதில் தவறில்லை. காருக்கு முழுவதுமாக கோல்டு நிறம் கொடுக்கப்பட்டிருப்பினும், காரின் சக்கரங்கள் எப்போதும் போலவே உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இவ்வாறான கோல்டு மேன்களை ஒவ்வொரு மாநிலத்திலும் பார்க்க முடியும். இவ்வாறு விலையுயர்ந்த ஆபரணங்களை அணிந்தப்படி உலா வருவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், சட்டத்திற்கு புறம்பான விதத்தில் நம்பர் பிளேட்டை பயன்படுத்துவது சொந்த விருப்பங்களை தாண்டி பொது வெளியில் தவறாகிறது.


Click it and Unblock the Notifications









