காற்று மாசுபாட்டை குறைக்க அதிரடி... டீசல் ஆட்டோக்களை எலெக்ட்ரிக் ஆட்டோக்களாக மாற்றும் புதிய திட்டம்...
டீசல் ஆட்டோக்களை எலெக்ட்ரிக் ஆட்டோக்களாக மாற்றும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக, குர்கான் மாநகராட்சி நிர்வாகம் தற்போது அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வயதுடைய சுமார் 12 ஆயிரம் டீசல் ஆட்டோ ரிக்ஸாக்களை அதிகாரிகள், எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாக்களாக மாற்றம் செய்யவுள்ளனர்.

காற்று மாசுபாடு இல்லாத நகரமாக குர்கானை மாற்றும் நோக்கில், இந்த புதிய திட்டத்தை அதிகாரிகள் அறிமுகம் செய்துள்ளனர். இந்த புதிய திட்டம் தொடர்பாக ஆட்டோ தொழிற்சங்கங்கள் உடன் குர்கான் மாநகராட்சி மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், காவல் துறையினர் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

அப்போது காற்று மாசுபாடு பிரச்னை எவ்வளவு அபாயகரமானது? என்பது குறித்து, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் எடுத்துரைத்தனர். அத்துடன் குர்கானை காற்று மாசுபாடு இல்லாத நகரமாக மாற்றுவதற்கு இந்த திட்டம் எவ்வளவு முக்கியமானது? என்பது குறித்தும், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் எலெக்ட்ரிக் ஆட்டோக்களை பராமரிப்பதற்கான செலவு குறைவு என்றும், டீசல் ஆட்டோக்கள் உடன் ஒப்பிடும்போது எலெக்ட்ரிக் தொழில்நுட்பம் சிறப்பானது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் குர்கான் நகரம் முழுவதும், எலெக்ட்ரிக் ஆட்டோக்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இந்தியா முழுவதும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. காற்று மாசுபாடு பிரச்னை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதே இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு குறைவான செலவே ஆகும்.

எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் சலுகைகளும் பலர் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற காரணமாக உள்ளது. உதாரணத்திற்கு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு டெல்லி மாநில அரசு குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கி வருகிறது.

அத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் சாலை வரி மற்றும் பதிவு கட்டணங்களில் இருந்தும் விலக்கு பெறலாம். இதுபோன்ற காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்களின் ஆன் ரோடு விலை ஓரளவிற்கு குறைகிறது. மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆர்வம் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

தற்போதைய நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் காராக உள்ளது. அத்துடன் ஏராளமான எலெக்ட்ரிக் பைக்குகளும், ஸ்கூட்டர்களும் விற்பனைக்கு வந்துள்ளன. வரும் காலங்களில் இந்திய சந்தையில் முழு வீச்சில் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications