கால்முட்டி அளவுக்குதான் மழைநீர் தேங்கியிருக்கு... இதுக்கு ரப்பர் படகா!! பரபரப்பான சாலையில் இளைஞரின் அட்டகாசம்
குருகிராமில் பெய்துவரும் கனமழையால் சாலையெங்கும் மழைநீர் தேங்கி கிடக்கும் நிலையில், வாலிபர் ஒருவர் தனது போக்குவரத்திற்காக ரப்பர் படகை பயன்படுத்தி வருவது கவனத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள வீடியோவை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் மழைக்காலம் துவங்கிவிட்டது. நம் தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. ஆனால் சாலையில் கால்முட்டி வரையில் தேங்கும் அளவிற்கு நம் மாநிலத்தில் எங்கும் மழை வெளுத்து வாங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், வட இந்திய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் கடந்த ஜூன் மாத துவக்கத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது.

இந்த வகையில், தலைநகர் டெல்லிக்கு அருகே உள்ள குருகிராம் நகரத்திலும் கனமழை கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்து வருகிறது. இதனால் குருக்கிராமில் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கி கிடக்கும் நிலையில், வாலிபர் ஒருவர் தனது போக்குவரத்திற்கு ரப்பர் படகு ஒன்றை பயன்படுத்தியுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தலைநகர் டெல்லிக்கு அருகே அமைந்துள்ள காரணத்தினாலேயே மற்ற மாநிலங்களின் சில மாநகரங்கள் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சி கண்டு வருகின்றன. உதாரணத்திற்கு, உத்திர பிரதேச மாநிலத்தின் நொய்டாவை சொல்லலாம். அதேபோன்று ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியிலும் மக்களின் வாழ்க்கை முறை மெல்ல மெல்ல செலவு மிகுந்ததாக மாறி வருகிறது.
அப்படியென்றால், குருகிராமில் உள்கட்டமைப்பு வசதிகளும் சிறப்பானதாகவே இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், குருகிராம் மாநகரத்தில் இன்னும் பல பகுதிகளில் சாலைகள் தரமற்றவையாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இந்த செய்தியில் நாம் பார்க்கும் வாலிபர் படகில் பயணத்திருக்கும் ஜார்சா சாலையின் தரம் மிகவும் மோசமானதாக உள்ளதாகவும், இதனை அறிந்தே இந்த வாலிபர் இத்தகைய சாலையில் படகை ஓட்டி கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.

அதுமட்டுமின்றி, இந்த வாலிபர் 'குருகிராம் செய்திகள்' என்ற யுடியூப் சேனலின் செய்தியாளர் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், சாலையில் கால்முட்டி அளவிற்கு தேங்கியிருக்கும் மழைநீரில் இந்த நபர் தனது ரப்பர் படகில் செல்வதை பார்க்கலாம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் கால்முட்டி அளவிற்கு மழைநீர் தேங்கினால் எவ்வளவு பிரச்சனை என்பதை நீங்கள் நேரில் உணர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.
அத்தகைய சாலையில் வாகனத்தை ஓட்டுவதே கடினமானது. இதில் ரப்பர் படகை இயக்குவது அதனை காட்டிலும் சிரமம் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. மழைநீர் தேங்கிய சாலையில் நடப்பது & வாகனம் ஓட்டுவது எவ்வளவு கடினமானது என்பதையும், பாதாள சாக்கடை திட்டம் எந்த அளவிற்கு முக்கியமானது என்பதையும் வெளிக்காட்ட வேண்டும் என்பதே வீடியோவில் காட்சித்தரும் செய்தியாளரின் நோக்கம் ஆகும்.
சவுகரியமாக வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கே இந்த அளவிற்கு இன்னல்கள் உள்ளன எனும்போது, ஏழை, எளியோர் மற்றும் சாலையை வீடாக பயன்படுத்தும் ஆதரவற்றோர் நிலைமையை யோசிக்கும்போது இன்னும் கவலையாக உள்ளது. குருகிராமில் ஒவ்வொரு வருடமும் பருவமழை பெய்யும்போது இவ்வாறுதான் உள்ளதாக சாலையில் ரப்பர் படகை ஓட்டும் இந்த நபர் கூறுவதை கேட்க முடிகிறது.

குருகிராம் மட்டுமல்ல, மும்பை, பெங்களூர் போன்ற இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் கூட மழைக்காலத்தில் இவ்வாறு பல இடங்களில் மழைநீர் தேங்குவதை பார்க்க முடிகிறது. ஆனால் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்திய சாலைகள் வரும் காலத்தில் அமெரிக்கன் தரத்திற்கு மாறும் என கூறி வருகிறார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: குருகிராம் போன்ற மாநகரங்களில் பாதாள சாக்கடையின் மூலமாக மழைநீரை சாலையில் தேங்கவிடாமல் திருப்பி அனுப்பி வைக்கப்படும். ஆனால் இவ்வாறு சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் குருகிராம் பாதாள சாக்கடை அமைப்புகள் முறையாக செயல்படவில்லை என்பதை அறிய முடிகிறது. ஆனால், கால்முட்டி அளவு மட்டுமே உள்ள மழைநீரில் படகில் செல்வது கொஞ்சம் டூ மச்!!


Click it and Unblock the Notifications









