எஞ்சினியரிங் படிக்கவில்லை... பறக்கும் மின்சார காரை உருவாக்கி பறந்து அசத்திய உத்தரகாண்ட் இளைஞர்!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் வளர்ச்சி ஒருபுறம் வேகமெடுத்து வரும் நிலையில், சாலைகளில் மட்டுமல்லாமல் ஆகாயத்திலும் பயணிக்கக்கூடிய வாகனங்களை உருவாக்கும் முயற்சிகளும் கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரவி தம்தா என்ற இளைஞர், பொறியியல் பட்டம் பெறாமலேயே மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனத்தை உருவாக்கி அசத்தி உள்ளார்.

அல்மோரா மாவட்டத்தில் உள்ள காஃப்லிகான் கிராமத்தைச் சேர்ந்த ரவி தம்தா, தனது சொந்த முயற்சியால் HAPIDA SKYNeX என்ற ஒற்றை நபர் பயணிக்கும் பறக்கும் வாகனத்தின் முன்மாதிரியை உருவாக்கியுள்ளார். இணையவழிக் கற்றல், தொடர்ச்சியான சோதனைகள் மற்றும் பல ஆண்டுகால உழைப்பின் மூலம் இந்த முயற்சியை அவர் முன்னெடுத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த வாகனத்தின் சோதனைப் பறப்பும் நடைபெற்றது.

Flying Car

13 ஆண்டுகால விடா முயற்சி

கிராமத்து விஞ்ஞானியாக மாறி உள்ள ரவி தம்தா முறையான அறிவியல் அல்லது பொறியியல் கல்வியைப் பெறவில்லை. அவர் கலைப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். இருப்பினும், தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வம் அவரைத் தொடர்ந்து புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டியுள்ளது. இணையத்தில் கிடைக்கும் தகவல்கள், தொழில்நுட்ப விளக்கங்கள் மற்றும் நடைமுறைச் சோதனைகள் மூலம் தனது அறிவை அவர் வளர்த்துக்கொண்டுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதலே பறக்கும் வாகனத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியுள்ளது. மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல நீண்ட நேரம் சாலைகளில் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பாக, மருத்துவமனைகள் போன்ற அத்தியாவசிய இடங்களை அடைவதில் ஏற்படும் சிரமங்கள், மாற்றுப் போக்குவரத்து முறையை உருவாக்க வேண்டும் என்ற அவரது ஆர்வத்திற்குக் காரணமாக அமைந்தன.

இந்த முயற்சியைச் செயல்படுத்துவதற்காக அவர் Hapida Sky Private Limited என்ற நிறுவனத்தின் பெயரில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். டும்பத்தினரின் ஆதரவும் அவரது முயற்சிக்கு உதவியுள்ளது. முறையான பொறியியல் ஆய்வகம் அல்லது சிறப்புப் பயிற்சி இல்லாத சூழலிலும், தொடர்ந்து கற்றுக்கொண்டு பரிசோதனைகளை மேற்கொண்டு தனது எண்ணத்தை பறக்கும் காராக தயாரித்து அசத்தி உள்ளார்.

டிரோன் மாடல்

பறக்கும் கார் என்றவுடன் சாலையிலும், ஆகாயத்திலும் பறக்கும் என்று எண்ண வேண்டாம். இது செங்குத்தாக மேலே எழும்பி பறந்து கீழே இறங்கும் டிரோன் வகை பறக்கும் வாகனமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. பல மின்சார மோட்டார்கள் மற்றும் சுழலிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஆளில்லா விமானங்களில் பயன்படுத்தப்படும் பல்சுழலி தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த அமைப்பு, வாகனத்தை செங்குத்தாக மேலே எழுப்பவும் கீழே இறக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தில் இலகுவான கட்டமைப்பு, ஒருவர் அமரக்கூடிய இருக்கை அமைப்பு மற்றும் வெளிப்படையான பாதுகாப்பு மூடி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், பேட்டரி மின்சாரத்தின் மூலம் இயங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான விமானங்களைப் போன்று இல்லாமல் இது நேரடியாக மேலே எழும்பி பறக்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

இந்த காரை சோதனை முயற்சியாக ரவி தம்தா சிறிது தூரம் மட்டும் பறந்து பாதுகாப்பாக கீழே இறக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. எனினும், இந்த பறக்கும் வாகனம் முழுமையாகப் பாதுகாப்பானது என்றும், வணிகப் பயன்பாட்டுக்கு ஏற்றதாக கூற முடியாது. பேட்டரி செயல்திறன், பறக்கும் நிலைத்தன்மை, கட்டமைப்பின் உறுதித்தன்மை மற்றும் அவசரநிலைப் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் விரிவாகச் சோதிக்கப்பட வேண்டியுள்ளது.

Also Read

முந்தைய கண்டுபிடிப்புகள்

ரவி தம்தாவின் தொழில்நுட்ப முயற்சிகள் இந்தப் பறக்கும் வாகனத்துடன் முடிந்துவிடவில்லை. இதற்கு முன்பு, கைப்பேசிகளுக்குச் சார்ஜ் அளிக்க உதவும் காலணிகள், பார்வைக் குறைபாடு கொண்டவர்களுக்கு உதவும் திறன் கொண்ட கைத்தடி, மூங்கிலைப் பிளக்கும் இயந்திரம் மற்றும் தீயணைப்புக் கருவிகள் போன்றவற்றையும் உருவாக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பறக்கும் வாகனத்தின் எதிர்காலப் பயன்பாடுகளில், தொலைதூர மலைக் கிராமங்களுக்கான போக்குவரத்து மற்றும் அவசர மருத்துவ உதவிக்கான பயணங்கள் போன்றவை இடம்பெறலாம். இருப்பினும், இவை தற்போது சாத்தியக்கூறுகளாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். இதற்கான தொழில்நுட்பத் திறன், பயணப் பாதுகாப்பு மற்றும் நடைமுறைப் பயன்பாடு ஆகியவை உரிய சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும்.

மேலும், இந்த வாகனத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கு முன்பு கூடுதல் சோதனைகளும், பொருந்தக்கூடிய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அனுமதிகளும் தேவைப்படும். குறிப்பாக, இந்தியாவில் விமானப் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளுக்கு ஏற்ப தேவையான அனுமதிகளைப் பெறுவது முக்கியமாகும்.

பல ஆயிரம் கோடிகளை கொட்டி பெரும் நிறுவனங்கள் பறக்கும் காரை உருவாக்கும் முயற்சிகள் இன்னும் முழுமையான வெற்றியை பெறாத நிலையில், பொறியியல் பட்டம் இல்லாத ஒருவர் தனது ஆர்வம், சுயமாகக் கற்றுக்கொள்ளும் திறன் மற்றும் விடாமுயற்சியின் மூலம் பறக்கும் வாகனத்தின் முன்மாதிரியை உருவாக்கியிருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். அதே நேரத்தில், இந்தத் தொழில்நுட்பம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் பல கட்டப் பரிசோதனைகளையும் பாதுகாப்பு மதிப்பீடுகளையும் கடக்க வேண்டியுள்ளது.

Article Published On: Saturday, October 24, 2026, 13:12 [IST]
English summary
Hapida skynex electric flying car ravi tamta uttarakhand
மேலும்... #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out