இவ்வளவு சேட்டைகளையும் செய்வது போலீஸ்காரரின் மகனா? அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள்!!
காரின் மேற்கூரையில் பயணம் செய்வது மிகவும் ஸ்டைலாக இருக்கும் என்கிற எண்ணம் நம் மக்களிடையே பரவலாக உள்ளது. குறிப்பாக, சல்மான் கான், ஷாரூக்கான் போன்ற நடிகர்களின் இண்ட்ரோவை வாகனங்களின் மேற்கூரையில் பார்த்து, பார்த்து வட இந்தியர்களுள் பலர் வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்வது கெத்து என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஓடும் காரின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்வது மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பானது ஆகும். அவ்வாறு, இங்கு சிறுவன் ஒருவன் மஹிந்திரா தார் (Mahindra Thar) வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளான். அவனை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
எந்தவொரு வாகனத்தின் மேற்கூரையிலும் பயணம் செய்வது ஆபத்தானது ஆகும். அதுவும், காரின் மேற்கூரையில் பயணம் செய்வது அதனினும் ஆபத்தானது ஆகும். ஏனெனில், காரின் மேற்கூரை சமமாக இருக்காது. ஆனால், மஹிந்திரா தார் வாகனத்தின் மேற்கூரை சமமாக இருக்கும் என்றாலும், அதில் அமர்ந்து பயணம் செய்வதும் ஆபத்தானதே.

ஏனெனில், சிறிய தடுமாற்றம் மற்றும் சடர்ன் பிரேக் உங்களை வாகனத்தில் இருந்து கீழே விழ வைக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, தார் வாகனத்தின் மேற்கூரையில் பிடித்து கொள்வதற்கு கம்பிகள் எதுவும் கிடையாது. மேற்கூரையில் கம்பிகள் இருந்து, மேற்கூரை சமமாக இருப்பினும் வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்வது எப்படியிருந்தாலும் ஆபத்தானதே.
அதனால்தான், இவ்வாறு ஆபத்தான முறையில் பயணம் செய்பவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால், ஹரியானாவில் மஹிந்திரா தார் வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து சிறுவன் ஒருவன் பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகிய போதிலும், அவன் மீதும் அவன் பயன்படுத்திய வாகனத்தின் உரிமையாளரின் மீதும் போலீசார் எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்ததுபோல் தெரியவில்லை.

இந்த சிறுவனின் பெயர், ரக்சித் பெனிவால். இன்ஸ்டாகிராமில் பிரபலமானவராக விளங்கும் ரக்சித் பெனிவால் இவ்வாறு சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதை வீடியோவாக காட்சிப்படுத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதே மஹிந்திரா தார் வாகனத்தில் இதற்கு முன்பும் ஒருமுறை மேற்கூரையில் அமர்ந்தப்படி பயணம் செய்வதை இந்த சிறுவன் வீடியோவாக வெளியிட்டு இருந்தான்.
இவ்வளவு தைரியத்துக்கு காரணம், அவனது தந்தை என கூறப்படுகிறது. ரக்சித் பெனிவாலின் தந்தை ஓர் போலீஸ் அதிகாரி ஆவார். என்ன நடந்தாலும், என் தந்தை பார்த்துக் கொள்வார் என கூறியே ரக்சித் பெனிவால் தனது வீடியோக்களை பதிவிடுகிறார். தார் வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்வது போன்று ரக்சித் பெனிவால் வெளியிட்டுள்ள இரு வீடியோக்களிலும் போலீஸ் அதிகாரி ஒருவர் கட்டிடம் ஒன்றில் இருந்து வெளிவரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அவர் தான் உண்மையில் இந்த சிறுவனது தந்தையா என்பது தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், வீடியோவில் போலீஸ் உடையில் இருக்கும் அந்த நபர் உண்மையில் போலீஸ் தானா என்பதும் உறுதியாக தெரியவில்லை. ரக்சித் பெனிவால் வெளியிட்டுள்ள 2 வீடியோக்களிலும் அந்த நபர் மஹிந்திரா தார் வாகனத்தினுள் நுழையும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 10 வயது கூட நிரம்பாத ஒரு சிறுவன் இந்த அளவிற்கு தைரியமாக சட்டத்திற்கு புறம்பான செயலில் ஈடுப்படுகிறான் என்றால், நிச்சயமாக அவனுக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள். ஒருவேளை அது அவனது போலீஸ் தந்தை என்பது உண்மையென்றால், இவ்வாறான செயல்களில் இருந்து முதலில் மாற வேண்டியது அவரே ஆகும்.


Click it and Unblock the Notifications









