டெல்லியை பிரதமர் தான் வந்து காப்பாற்றனும் - 750 கோடி ரூபாயில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை பல் இழிக்கிறது!!
நாட்டின் தலைநகர் டெல்லியில் சில வாரங்களுக்கு முன் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால், தற்போது டெல்லியில் நிலைமையே வேறு. டெல்லி மக்கள் போதும், போதும் என்கிற அளவிற்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த மாதம் வரையில் வறண்ட கிடந்த டெல்லி சாலைகள் இன்று மழைநீரில் தத்தளிக்கின்றன. வறட்சி அதன்பின் திடீர் மழை என்பதெல்லாம் பூமத்திய ரேகைக்கு அருகே இருக்கும் பகுதிகளில் வழக்கமான ஒன்றுதான். ஆனால், அதனை சமாளிக்க எந்த அளவிற்கு தயாராக இருக்கிறோம் என்பதுதான் இங்கு கேள்வியே.
பொருளாதாரத்தில் உலகளவில் வேகமாக வளர்ந்துவரும் நாடு என கூறுகிறோம், ஆனால் நாட்டின் தேசிய தலைநகரிலேயே மழைநீர் வடிக்கால் அமைப்பு சரியாக இல்லை எனும்போது என்ன சொல்வது... மழை பொழிவது நல்லதுதான். ஆனால் அதன் காரணமாக மக்கள் அவதிப்படாத வகையில் முன்னெச்சரிக்கை உடன் இருப்பது அரசாங்கத்தின் கடமை ஆகும்.

தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை நிற்காமல் பெய்து வருகிறது. இதனால், டெல்லியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பாலங்களுக்கு அடியில் அதிகப்படியான மழைநீரை பார்க்க முடிகிறது. இதனால், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதோடு, மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது.
டெல்லி கவர்னர் வினய் குமார் சக்சேனா 24 மணிநேரத்திற்கும் செயல்படக்கூடிய அவசரகால கட்டுப்பாட்டு குழுவை நியமிக்க ஆணையிட்டுள்ளார். மேலும், நிலைமையை எதிர்கொள்ள அடுத்த ஒரு வார காலத்திற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகளையும் பட்டியலிட்டுள்ளார். டெல்லி நகரத்தில் எந்த அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளது என்பதை காட்டும் படங்களும், வீடியோக்களும் அங்கிருந்து தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட வண்ணம் உள்ளன.
குறிப்பாக, கடந்த 2022ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்ட பிரபலமான பிரகாதி மண்டப சுரங்கப்பாதையில் வாகனங்களின் சக்கரங்கள் மூழ்கும் அளவிற்கு மழைநீர் தேங்கியிருப்பது பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சுரங்கப்பாதை திறக்கப்பட்ட சமயத்தில் நேரில் பார்வையிட்ட பிரதமர் அங்கிருந்த குப்பைகளை தனது கைகளால் அகற்றினார். ஆனால், இப்போது, மோட்டார் போட்டு உறிஞ்சினால் கூட அகற்ற முடியாத அளவிற்கு மழைநீர் தேங்கி கிடக்கிறது.
இந்த சுரங்கப்பாதையில் எடுக்கப்பட்ட வீடியோவில், அளவில் பெரியதான ஃபோர்ஸ் டிராவலர் வாகனம் கூட சிரமத்துடன் செல்வதை பார்க்கும்போது, பைக்குகள் மற்றும் சிறிய கார்களின் நிலைமை இன்னும் மோசமானதாக இருக்கிறது. இதன் காரணமாக, அடுத்த அறிவிப்பு வரும் வரையில் பிரகாதி மண்டப சுரங்கப்பாதை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 750 கோடி ரூபாய்க்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதையில் ஆரம்பத்தில் இருந்தே எதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

டெல்லியில் இந்த அளவிற்கு மழைநீர் தேங்கி கிடப்பதற்கு குப்பைகள் மற்றும் பிளாஸ்ட்டிக் பொருட்களும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. கன மழையால் டெல்லி விமான நிலையத்தின் முதல் உள்நாட்டு முனையத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. டெல்லி ஏர்போர்டின் பிரம்மாண்ட மேற்கூரை விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார், 6 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 1 மாருதி சுஸுகி டிசைர் டாக்ஸி கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.
சாலைகளில் மழைநீர் தேங்குவதால் மக்கள் மட்டுமின்றி வாகனங்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள் அதன்பின் பயன்படுத்த முடியாத நிலைக்கு கூட செல்கின்றன. இடுப்பு அளவுக்கு தேங்கியிருக்கும் மழைநீரில் செல்வதால் வாகனங்களின் என்ஜின் செயல்படாமல் போகின்றன. எலக்ட்ரிக்கல் பாகங்களும் சேதமடைகின்றன. அதுமட்டுமின்றி, வாகனங்கள் துருப்பிடிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழை விவசாயத்திற்கும், குடிநீருக்கும் வழிவகுக்கிறது என்றாலும், பல விதங்களில் கனமழை மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கின்றன. இதனை சரிசெய்ய வேண்டுமென்றால், அரசாங்க அமைப்பு முதலில் ஒழுங்காக செயல்பட வேண்டியது அவசியமாகும். பழங்கால சுரங்க பாதையில் மழைநீர் தேங்குகிறது என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், மாடர்ன் டிசைனில் புத்தம் புதியதாக கட்டப்பட்ட சுரங்கப்பாதையில் 2 நாட்கள் பெய்த மழைக்கே கால்முட்டி அளவிற்கு நீர் தேங்கியதினால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்றால், சுரங்கப்பாதையை முறையாக டிசைன் செய்யவில்லை என்றுதானே அர்த்தம்.


Click it and Unblock the Notifications








