விசித்திரமான நிறத்தில் இருந்த ஹெலிகாப்டர்... நடு ரோட்டில் லேண்டிங்!! மிரண்டு போன வாகன ஓட்டிகள்
சாலையில், வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த அனைவரையும் மிரள வைக்கும் விதமாக ஹெலிகாப்டர் ஒன்று நடு ரோட்டில் தரையிறக்கப்பட்டு உள்ளது. பெங்களூரில் அரங்கேறியுள்ள இந்த விசித்திரமான சம்பவத்தை பற்றியும், இந்த சம்பவம் குறித்து இணையத்தில் வெளியாகி உள்ள படத்தையும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெங்களூர், இந்தியாவின் மென்பொருள் தலைநகரம். புதிய, புதிய மென்பொருள் தொழிற்நுட்பங்களை கண்டுப்பிடிப்பதிலும், அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதிலும் பெங்களூர் புகழ்பெற்றதாக விளங்குகிறது. அதேநேரம், பெங்களூர் வேறு விஷயத்திற்கும் பிரசித்திப் பெற்றது. அதுதான், போக்குவரத்து நெரிசல். பெங்களூருக்கு ஒரேயொரு முறை தான் சென்றுள்ளீர்கள் என்றாலும், நிச்சயமாக நீங்கள் அங்கு நிலவும் போக்குவரத்து நெரிசலை எதிர்க்கொண்டு இருப்பீர்கள்.

அந்த அளவிற்கு, சாலையில் வாகனங்களின் எண்ணிக்கையும், வேலைக்காக செல்பவர்களின் எண்ணிக்கையும் பெங்களூரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு, நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பெங்களூர் மாநகராட்சி அவ்வப்போது புது, புது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தவறியதில்லை. இதனால், பெங்களூர் சாலைகளில் அடிக்கடி புதிய, புதிய விஷயங்களை எதிர்பார்க்கலாம்.
ஆனால், இங்கு சமீபத்தில் நடைபெற்றிருப்பது அனைவரையும் அதிர்ச்சியுற செய்யக்கூடிய ஓர் விசித்திரமான நிகழ்வாகும். பெங்களூரின் பிசியான சாலை ஒன்றில், இந்தியாவுக்கு சொந்தமில்லாத ஹெலிகாப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டு உள்ளது. பெங்களூர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் அலுவலகத்திற்கு அருகே நடு ரோட்டில் இந்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டு உள்ளது.

காக்கி மற்றும் நீல நிறங்களில் ஹெலிகாப்டர் பெயிண்ட் செய்யப்பட்டிருந்ததால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் இது எந்த நாட்டின் ஹெலிகாப்டர் என புரியாமல் குழம்பிபோய் திகைத்து நின்றனர். ஏனெனில், இந்திய வான் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் இவ்வாறான நிறங்களில் பெயிண்ட் செய்யப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, தரையிறங்கிய ஹெலிகாப்டரில் இந்தியாவிற்கு உண்டான முத்திரை எதுவும் இல்லை.
பிறகு விசாரித்ததில், இது மாலத்தீவு நாட்டின் தேசிய பாதுகாப்பு படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஆகும். ஹெலிகாப்டரின் பின்பக்க துடுப்பு பகுதியில் பொறிக்கப்பட்டுள்ள 'MNDF' என்பது மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படை என்பதன் சுருக்கமாகும். சிறிது நேரத்தில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அனைவரையும் மிரள வைத்த இந்த நிகழ்வு குறித்து டுவிட்டரில் வெளியிடப்பட்டு உள்ள படத்தை கீழே காணலாம்.
"பெங்களூர் டிராஃபிக் காரணங்கள்" என்ற கேப்ஷன் உடன் @பீக் பெங்களூர் டுவிட்டர் கணக்கை மென்ஷன் செய்து அமான் சுரானா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலர், தங்களது பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், "பறவை ஒன்று சாலையை கடந்ததால், நான் தாமதமாக வந்ததாக எனது மேலதிகாரியிடம் கூறினேன்" என பதிவிட்டுள்ளார்.
மாலத்தீவின் தேசிய பாதுகாப்பு படைக்கு சொந்தமான 'ஜி-854' ஹெலிகாப்டரான இதனை மாலத்தீவு நாட்டுக்கு இந்தியா வழங்கி இருப்பதற்கு கூட வாய்ப்புள்ளது. ஏனெனில், கடந்த காலங்களில் சில பாதுகாப்பு படை வாகனங்களை மாலத்தீவுக்கு இந்தியா வழங்கியுள்ளது. இதில் ஹெல்காப்டர்கள் கூட அடங்குகின்றன. அவ்வாறு இந்தியாவால் வழங்கப்பட்ட ஹெலிகாப்டர்களுள் ஒன்றாக கூட இது இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்கள் செல்லும் சாலை ஒன்றில் ஹெலிகாப்டரை தரையிறக்குவது மிகவும் ஆபத்தான செயலாகும். எதன் காரணமாக இவ்வாறு வேறு நாட்டிற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இந்தியாவில் பிசியான சாலை ஒன்றில் தரையிறக்கப்பட்டது என்பது தெரியவில்லை. தொழிற்நுட்ப கோளாறு அல்லது மோசமான வானிலை அல்லது அவசரகால உதவிகள் தேவைப்பட்டால் மட்டுமே இவ்வாறு ஹெலிகாப்டரை சாலையில் தரையிறக்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications