பர்ஸ் பத்திரம் பாஸ்.. ஹெல்மெட், சீட் பெல்ட் குறித்த சென்னை ஐகோர்ட்டின் புதிய உத்தரவால் போலீசார் குஷி
இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என அதிரடியான உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என அதிரடியான உத்தரவுகளை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சாலை விபத்துக்களில், 1,50,000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழக்கின்றனர். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 400 பேர் சாலை விபத்துக்களினால் உயிரிழக்கின்றனர். இதுதவிர பல லட்சம் பேர், படுகாயம் அடைந்து, கை, கால்களை இழக்கின்றனர்.

இந்தியாவை விட ஆட்டோமொபைல் மார்க்கெட் நன்கு வளர்ச்சியடைந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை காட்டிலும் இந்த எண்ணிக்கை மிக மிக அதிகம். பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், சாலை விதிகளை முறையாக பின்பற்றாததே விபத்துக்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும், காரில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் யாரும் அதனை முறையாக கடைபிடிப்பது இல்லை.

தற்போது இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையை சுழற்றியுள்ளது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சில அதிரடியான உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர்.

இனி இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கார்களில் பயணிப்பவர்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிவதும் கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டாயமாக ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதை முதலில் காவல்துறையினர் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இந்த உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டும் என்றும், அதனை தமிழக அரசு உறுதிபடுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதுதவிர விபத்துக்களை கட்டுப்படுத்தவும், குறைக்கவும் மேலும் சில அதிரடியான உத்தரவுகளையும், தமிழக காவல்துறை தலைவருக்கு (டிஜிபி) சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

ஒரு சிலர் இரவு நேரங்களில் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை (ஹை பீம்) அதிக பிரகாசமாக எரியவிடுகின்றனர். இதனால் எதிரே வரும் வாகன ஓட்டிகளின் கண்கள் கூசி, அவர்கள் விபத்தில் சிக்க நேரிடுகிறது. இதனை தடுக்க முகப்பு விளக்குகளின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும்.

ஆனால் ஒருசிலர் மட்டுமே இதனை பின்பற்றுகின்றனர். பலர் தொடர்ச்சியாக கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல், முகப்பு விளக்குகளை அதிக பிரகாசத்துடன் எரியவிடுகின்றனர். கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படாததால், முகப்பு விளக்குகளில் இருந்து நேரடியாக வெளிப்படும் பிரகாசமான வெளிச்சமும் விபத்துகளுக்கு முக்கிய காரணம்.

எனவே ஹை பீம் விளக்குகளை தடுக்க வேண்டும் என்றும், முகப்பு விளக்குகளின் நடுவில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவுகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 27ம் தேதி டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிக வருமானம் வரும் வளர்ச்சியடைந்த நாடுகளை காட்டிலும் இந்தியாவில் அதிக அளவிலான இரு சக்கர வாகனங்கள் இயங்குகின்றன. இந்தியாவில் இயங்கும் மொத்த வாகனங்களில், 69 சதவீத வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே டூவீலர்களில் பயணிப்பவர்கள்தான் அதிக அளவிலான விபத்துக்களில் சிக்குகின்றனர். இந்தியாவில் நடைபெறும் விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் 27 சதவீதம் பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள்தான். கார்களை காட்டிலும் டூவீலர்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவு என்பதும் இதற்கு ஓர் காரணம்.

எனவே இரு சக்கர வாகன ஓட்டிகளுடன் சேர்த்து டூவீலர்களில் பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிந்தால், விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. ஆனால் முடி கொட்டுகிறது, வியர்க்கிறது என கூறி அதனை யாரும் முறையாக பின்பற்றுவது இல்லை.

எனினும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவால், இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் கார்களில் சீல் பெல்ட் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த உத்தரவுகளை முறையாக அமல்படுத்த வேண்டிய பொறுப்பு போலீசாரின் கைகளில்தான் உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பயன்படுத்தி கொண்டு வசூல் வேட்டையில் இறங்காமல், உரிய நடவடிக்கை எடுத்தால், விபத்து உயிரிழப்புகள் கட்டுப்படுத்தப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








