டூவீலரில் பயணிப்பவர்களுக்கு திடீர் உத்தரவு.. தமிழக அரசை பின்னணியில் இருந்து இயக்கியது இவர்கள்தான்..
இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் 2.51 கோடி வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதில், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டுமே 84 சதவீதம். எனவே இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள்தான், விபத்துக்களினால் அதிகம் உயிரிழக்க நேரிடுகிறது.

ஹெல்மெட் அணியாததே இதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் மட்டும், ஹெல்மெட் அணியாததன் காரணமாக, 4,091 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் கடந்த 2017ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 2,956ஆக குறைந்தது.

இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்பட அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாகவே, உயிரிழப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் ஹெல்மெட் அணியும் வழக்கம், இரு சக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் மீண்டும் குறைய தொடங்கியது.

இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதனை தமிழகத்தில் பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதே இல்லை.

அத்துடன் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் புகார் எழுந்தது. எனவே டூவீலர்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியை முறையாக அமல்படுத்த வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டது.

சென்னை கொரட்டூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் இந்த பொது நல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 24) விசாரணைக்கு வந்தது.

அப்போது கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பாக, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார். காவல் துறை சார்பில், இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர், ஹெல்மெட் அணியாத டூவீலர் ஓட்டிகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் ஹெல்மெட் அணியாமல், டூவீலரின் பின்னால் அமர்ந்து பயணம் செய்தவர்கள் மீது காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் அவர்கள் சுட்டிகாட்டினர்.

இதன்பின் மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து பயணம் செய்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி கண்டிப்புடன் அமல்படுத்தப்படும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்தார்.

அத்துடன் இது தொடர்பான விழிப்புணர்வு, பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் வாயிலாக, பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், ஹெல்மெட் அணியாமல், டூவீலரின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தனி அறிக்கை தாக்கல் செய்வதாகவும் கூறினார்.

இதன்பின் வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். எனவே இனி தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இருவரும் ஹெல்மெட் அணிந்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் போலீசாரின் கடும் நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும்.

முன்னதாக இந்த வழக்கை தொடர்ந்த ராஜேந்திரன் தனது மனுவில், காரில் பயணிக்கும் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். அந்த விதியையும் அரசு முறையாக அமல்படுத்தவில்லை என கூறியிருந்தார். இது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications