மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்ல தயாராகும் ஹாட்-ஏர் பலூன்! ஒரு நபருக்கு எவ்வளவு கட்டணம் தெரியுமா?
மிக வேகமாக தயாராகிக் கொண்டிருக்கும் இந்த விண்வெளி பலூன் விரைவில் மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்துச் செல்ல இருக்கின்றது. இந்த பணியில் அது எப்போது களமிறங்க இருக்கின்றது மற்றும் இதன் இயக்கம்குறித்த கூடுதல் முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் இந்த பணியில் சற்று தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது என்றே கூறலாம். இந்த ஆண்டிலேயே ஏற்கனவே இரு விண்வெளி சுற்றுலா விமானங்கள் அனுப்பப்பட்ட நிலையில், மூன்றாவதாக ஓர் விமானத்தையும் வரும் 4ஆம் தேதி விண்வெளிக்க அனுப்ப அது திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு பல விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்ப தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற வேலையில், ஒரு நிறுவனம் மட்டும் இந்த பயணத்தை மாசில்லாத ஒன்றாக மாற்றும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. ஃப்ளோரிடாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் (Space Perspective) எனும் நிறுவனமே இந்த பணியில் களமிறங்கியிருக்கின்றது.

இதற்காக நிறுவனம் ஹாட்-ஏர் பலூன் ரக விண்வெளி கப்பலையே தயார் செய்திருக்கின்றது. இது விண்வெளி அல்லது விமானத்தின் உதவியின்றி வானில் மிதக்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் வாயிலாக மனிதர்களை விண் வெளிக்கு சுற்றுலா அழைத்து செல்ல இருக்கின்றது ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ். சுமார் 1 லட்சம் அடி உயரம் வரை சென்று பூமி பந்தின் அழகை இது காண்பிக்குமாம். இத்தகைய ஸ்பெஷலான விண்வெளி பலூன் குறித்த படத்தையே ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் அனுப்பி வைத்திருக்கின்றது.

இதை உருவாக்கும் பணியிலேயே நிறுவனம் தற்போது அதி-தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது. இதை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் வகையிலேயே அது விண்வெளி பலூன் பற்றிய படங்களை ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் வெளியிட்டிருக்கின்றது. இந்த பலூன் அதிக லக்சூரி வசதியை வழங்கக் கூடியதாகவும் உருவாக்கப்பட உள்ளது.

சொகுசான இருக்கை, பல வண்ணங்களில் ஒளிரக் கூடிய லைட் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கக் கூடிய கேபின் தனியாக இருக்கும். இது மிதக்கும் பலூனுக்கு அடிப்பகுதியில் அதிக உறுதியான உலோக கயர்களால் கட்டப்பட்டிருக்கும். இவையே இந்த ஸ்பேஸ்ஷிப்பின் மிக முக்கியமான அம்சமாக உள்ளது. விண்வெளி சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த விண்வெளி கப்பலில் சில பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட இருப்பதாக ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் தெரிவித்துள்ளது.

மேலும், சுற்றுலா பயணிகள் மிக தெளிவாக அண்டத்தை காணும் விதமாக 360 டிகிரி பனோரமிக் பார்வை திறன் கொண்டதாக ஸ்பேஸ்ஷிப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளைக் கொண்டதாக இந்த பூஜ்ஜியம் உமிழ்வு கொண்ட விண்வெளி கப்பல் உருவாக்கப்பட உள்ளது. ஒரே நேரத்தில் சுமார் 8 பேர் வரை இந்த விண்வெளி பலூனில் பயணிக்க முடியுமாம்.

6 மணி நேரம் சுற்றுலா பயணிகள் விண்வெளியைக் கண்டு ரசிக்கலாம். இந்த 6 மணி நேர பயணத்திற்கு 1.25 லட்சம் அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கின்றது. இது ஒரு நபருக்கான கட்டணம் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆமாங்க விண்வெளிக்கு ஜாலியா ஒரு ரைடு போய்டு வர இந்த பெருந்தொகையையே ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் வசூலிக்க இருக்கின்றது.

இந்த பயணத்திற்கு சுற்றுலா பயணிகள் பிரத்யேக பயிற்சிகள் எதையும் பெற்றிருக்க தேவையில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது. புவி ஈர்ப்பு விசையை விட்டு ஸ்பேஷிப் வெளியேறாது என்பதால் இந்த அவசியம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆகையால், சுற்றுலா பயணிகளால் வழக்கம்போல் அந்த கலனுக்குள் நடக்க, குதிக்க முடியும் என தெரிகின்றது.

பயணிகளுக்கான சிறப்பு வசதியாக Wi-Fi உள்ளிட்ட அம்சங்கள் அதில் வழங்கப்பட்டிருக்கும். அது, வீட்டில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்க உதவும். இதுதவிர, லைவ்ஸ்ட்ரீமும் அவர்களால் செய்துகொள்ள முடியும். ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ்-ன் இந்த சேவைக்கு ஏற்கனவே பலர் முன் பதிவுகளை குவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை சுமார் 900 பேர் விண்வெளி சுற்றுலாவிற்காக முன்பதிவு செய்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்பதிவிற்கான கட்டணமாக ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுகின்றது. வாடிக்கையாளர்களுக்கான தங்களுக்கான கட்டணத்தை க்ரிப்டோ கரன்சி வாயிலாகவும் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் உருவாக்கி வரும் இந்த விண்வாகனம் ஹைட்ரஜனால் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ்ஷிப் நெப்டியூன் ஹைட்ரஜனே இதன் இயக்கத்திற்கு பயன்படுத்தப்பட இருக்கின்றது. மேலும், பலூனுக்குள் பிரத்யேக லிஃப்ட் வாயு நிரப்பட இருக்கின்றது. இவையே விண்வெளி கப்பலை நீருக்கு மேல் மிதக்கும் ஐஸ் கட்டியைப் போல் காற்றில் மிதக்க செய்ய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








