தயார் நிலையில் உலகின் மிக பெரிய கப்பல்... இதுல ஒரு முறையாவது போய்ட்டு வந்துடனும்! செம்ம பிரமாண்டமா இருக்கு!
உலகின் மிகப் பெரிய மற்றும் பிரமாண்டமான தோற்றம் கொண்ட 'ஒண்டர் ஆஃப் தி சீஸ்' (Wonder of the Seas) கப்பலின் உருவாக்க பணிகள் முடிவடைந்திருப்பதாகவும், அக்கப்பலை இன்று ராயல் கரீபியன் இடத்தில் டெலிவரி கொடுக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகின் மிக பெரிய கப்பலான 'ஒண்டர் ஆஃப் தி சீஸ்' (Wonder of the Seas) இன்று டெலிவரி செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, ஓசிஸ் கிளாஸ் (Oasis Class)-இன் ஐந்தாவது பயணிகள் கப்பலாகும். இறுதி கட்ட தயாரிப்பு பணிகள் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள மார்செயிலில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த பணிகள் அனைத்தும் நிறைவுற்றிருக்கின்றன.

இந்த நிலையிலேயே ராயல் கரீபியனுக்கு இந்த பிரமாண்ட க்ரூஸ் கப்பல் டெலிவரி கொடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை ராயல் கரீபியன் நிறுவனத்தின் பொழுதுபோக்கு பிரிவின் மூத்த துணைத் தலைவர் நிக் வீர், அவரது டுவிட்டர் பதிவின் வாயிலாக உறுதி செய்தார்.

இந்த பதிவுடன் சேர்த்து ஓர் வீடியோவையும் அவர் பகிர்ந்திருக்கின்றார். அவர் சென்ற விமானம் கப்பல் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு மேலே பறந்துச் சென்ற போது, அதனை வீடியோவாக எடுத்தே தற்போது பதிவிட்டுள்ளார். இறுதி டச்-அப் பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில் கப்பல் நிற்பது போன்ற காட்சிகள் அவ்வீடியோவில் இடம் பெற்றிருக்கின்றன.

இத்துடன் சேர்த்து மற்றுமொரு வீடியோவையும் அவர் பகிர்ந்திருக்கின்றார். கப்பலுக்குள் இடம் பெற்றிருக்கும் மிக முக்கிய அம்சமான, 'ஆக்வா தியேட்டர்' பற்றிய வீடியோவையே அவர் வெளியிட்டுள்ளார். இரு வீடியோக்களும் தற்போது க்ரூஸ் கப்பல் பிரியர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

உலகின் மிக பெரிய கப்பல்:
நாங்கள் மேலே கூறியதைப் போல் இது ஐந்தாவது ஓசிஸ் கிளாஸ் உல்லாச கப்பலாகும். ஒண்டர் ஆஃப் தி சீஸ் கப்பலின் ஒட்டுமொத்த எடை 2,36,857 டன் ஆகும். உண்மையில் இது மிக அதிக எடையாகும். இந்த அதிகபட்ச அளவின் காரணத்தினால் முன்னதாக மிக உலகின் மிக பெரிய கப்பல் என்ற மகுடத்தைச் சூடியிருந்த சிம்பொனி ஆஃப் தி சீஸ், தனது பட்டத்தை இழந்திருக்கின்றது. ஆம், பிரமாண்ட உருவத்தின் காரணமாக தற்போது உலகின் மிகப் பெரிய கப்பல் என்ற புகழாரத்தை ஒண்டர் ஆஃப் தி சீஸ் பெற்றிருக்கின்றது.

இக்கப்பலில் ஒரே நேரத்தில் 6,988 பயணிகள் பயணிக்க முடியும். இத்துடன், 2,300 பணியாளர்களும் இக்கப்பலில் இடம் பெற முடியும். ஒட்டுமொத்தமாக 1,188 அடி நீளத்தில் இக்கப்பல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி 100 கேபின்கள் இக்கப்பலில் உள்ளன. மேலும், ஓர் நட்சத்திர விடுதியில் இருப்பதைக் காட்டிலும் அதிக சொகுசான மற்றும் பொழுதுபோக்குகளை வழங்கும் வகையில் இக்கப்பல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.

இதன்படி, நீச்சல் குளம், பார் மற்றும் சன் லவுஞ்சர்களுடன் கூடிய பிரத்யேக டெக் உள்ளிட்டவையும் இந்த கப்பலில் இடம் பெற்றிருக்கின்றன. ஆகையால், நட்சத்திர விடுதியில் இருப்பதைக் காட்டிலும் பன் மடங்கு அதிக சொகுசான அனுபவத்தை ஒண்டர் ஆஃப் தி சீஸ்-இல் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தெரிகின்றது.

இந்த கப்பல் வரும் மார்ச் 4ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்றே அதன் முதல் ஓட்டத்தை ஒண்டர் ஆஃப் தி சீஸ் காண இருக்கின்றது. ஃப்ளோரிடாவின் லாடர்டேலில் உள்ள எவர்க்லேட்ஸ் போர்ட்-இல் இருந்து கப்பல் புறப்பட இருக்கின்றது. இதுகுறித்த நேரடி அறிக்கைகளைப் பகிர தனது RoyalCaribbeanBlog.com எனும் தளத்தில் வெளியிட இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications