நீங்க பயன்படுத்தும் பெட்ரோல் உண்மையிலேயே தூய்மையானதுதானா? வீட்டிலேயே ஆய்வு செய்யலாம்! ஒரு பிட் பேப்பர் போதும்!
நாம் பயன்படுத்தும் பெட்ரோல் தூய்மையானதுதானா? கண்டுபிடிப்பது எப்படி? என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

நாம் நம் வாகனங்களில் பயன்படுத்தும் பெட்ரோல் கலப்படமற்றதுதானா?.. நம்மில் பலருக்கு இருக்கக் கூடிய பெருத்த சந்தேகங்களில் இதுவும் ஒன்று. இந்த கேள்வியை தனக்குள் எழுப்பாதவர்களே இருக்க முடியாது என்று கூட கூறலாம். அந்தளவிற்கு இந்த உலகத்தை கலப்படப் பொருட்கள் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் அருந்தும் பால் முதல்கொண்டு அனைத்திலும் லாபத்திற்காக கலப்படம் செய்யப்படுகின்றது.

அந்தவகையில் பெட்ரோலிலும் கலப்படம் செய்யப்படுகின்றது. பெட்ரோலில் மட்டுமல்ல டீசல் போன்ற பிற எரிபொருள்களிலும் தங்குதடையின்றி கலப்படங்கள் செய்யப்படுகின்றன. இந்த கலப்படம் செய்யப்பட்ட எரிபொருளால் வாகனங்களின் ஆயுட்காலம் பல மடங்கு வேகமாக குறைகின்றது.

அதுமட்டுமின்றி காற்றை மாசுப்படுத்தும் உமிழ்வையும் அதிகளவில் வெளியேற்ற கலப்படம் செய்யப்பட்ட எரிபொருள்கள் வெளியேற்றும். இதனால், வாகனத்தின் மதிப்பு விரைவில் நலிவடையலாம். இதுமட்டுமின்றி, எஞ்ஜினின் செயல்திறன் பாதித்தல், மைலேஜ் அடி வாங்குதல் என பல்வேறு பிரச்னைகள் ஒன்றன் பின் ஒன்றாக படையெடுத்த வரும்.

இதுமாதிரியான அவலங்களைத் தவிர்க்க கலப்படம் செய்யப்பட்ட எரிபொருளை தவிர்ப்பதே மிக சிறந்தது. அதெல்லாம் இருக்கட்டும் கலப்படம் செய்யப்பட்ட எரிபொருளை கண்டறிவது எப்படி என கேக்குறீங்களா?, இதற்கான கருவியை எங்கு வாங்குவது, அதன் விலை எவ்வளவு இருக்கும், அதோட விலை ரொம்ப அதிகமா இருக்குமோ என உங்களுக்குள்ளையே கேட்டு உங்களை குழப்பிக் கொள்ள வேண்டும்.

பெட்ரோலின் தரத்தை காண எந்தவொரு பெரிய உபகரணும் தேவையில்லை. குறிப்பாக பெரிய லேபும் தேவைப்படாதும். வீட்டிலேயே வைத்து பெட்ரோலின் தூய்மைத் தன்மையை எளிதில் கண்டறிய முடியும். இதற்கான வழிக்காட்டுதல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பெட்ரோலை எடுப்பதற்கான ஓர் நாஸில் மற்றும் சிறிய வெள்ளை காகித துண்டு இவை இருந்தாலே போதும், பெட்ரோலின் தூய்மை தன்மையைக் கண்டறிந்து விட முடியும். வாருங்கள் செயல் விளக்கத்திற்குள் போகலாம்.

நாஸில்:
பெட்ரோலை நாஸில் வாயிலாக எடுக்கும் முன், அந்த கருவியை சுத்தப்படுத்திக் கொள்ளவும். அதன் வாயிலாக தூசி பெட்ரோல் டேங்கிற்குள் போய்விடக் கூடாது என்பதால் இதை செய்தாக வேண்டும். அதேவேலை, நாஸில் இல்லை என்றால் சிறிய ட்யூப் அல்லது வேறு ஏதேனும் கருவியைக் கொண்டு உங்கள் வாகனத்தின் ஃப்யூவல் டேங்கில் இருக்கும் எரிபொருளை வெளியே எடுக்கலாம்.

ஃபில்டர் பேப்பர் அல்லது தூய்மையான டிஸ்யூ பேப்பர்:
பயன்படுத்தாத டிஸ்யூ பேப்பர் அல்லது புதிய ஃபில்டர் பேப்பரில் எடுக்கப்பட்ட பெட்ரோலை துளியளவு ஊற்ற வேண்டும். இந்த பேப்பரை சில நேரங்கள் காற்றோட்டமான பகுதியில் வைக்க வேண்டும். ஃபில்டர் பேப்பரில் ஊற்றப்பட்ட பெட்ரோல் தூய்மையான பெட்ரோலாக இருந்தால் அது இருந்த தடம் தெரியாமல் காற்றில் கரைந்துவிடும். ஒரு வேலை அது கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோலாக இருந்தால் அந்த ஃபில்டர் பேப்பரில் கருமையான புள்ளியைப் போல் மாறியிருக்கும்.

இதை வைத்தே நீங்கள் கலப்படம் செய்யப்பட்ட பெட்ரோலை பயன்படுத்துகின்றீர்களா அல்லது தூய்மையான பெட்ரோலை பயன்படுத்துகின்றீர்களா என கண்டுபிடித்து விடலாம். இந்த சோதனையைச் செய்ய பெரியளவில் செலவும் ஆகாது. பெட்ரோலில் கலப்படம் செய்வது விதிமீறல் செயலாகும். ஆகையால், நீங்கள் இந்த மோசடிக்கு ஆளாகியிருந்தால் குறிப்பிட்ட அந்த பெட்ரோல் பங்க் பற்றி மிக தாராளமாக புகார் அளிக்கலாம். அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க அது வழிவகுக்கும். குறிப்பாக பலர் பாதிக்கப்படுவதை தடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications








