விமான பயணத்தின்போது லக்கேஜ் காணாம போய்டுச்சா? புது துணி வாங்க அவங்களே காசு தருவாங்களாம்! முதல்ல பாலிசிய படிங்க
விமான பயணத்தின்போது லக்கேஜ் காணாமல் போய்விட்டதா?.. என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய முழு வழிகாட்டுதல்களையும் இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதவிற்குள் போகலாம்.

விமான பயணம் இந்த நவீன காலத்தில் மிகவும் சுலபமான ஒன்றாக மாறியிருக்கின்றது. பணக்காரர்கள் மட்டுமே விமானங்களில் பயணிக்க முடியும் என்றிருந்த காலம் தற்போது மாறியிருக்கின்றது. கணிசமான சில நாட்களுக்கு முன்னரே டிக்கெட்டுகளை புக் செய்வதன் வாயிலாக மிகக் குறைவான கட்டணத்தில் விமான பயணங்களை மேற்கொள்ள முடியும். இதுபோன்று இன்னும் பல காரணங்களால் விமான போக்குவரத்து பல மடங்கு எளிமையான ஒன்றாக மாறியுள்ளது.

மக்களும் அதிகளவில் விமான போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். அவ்வாறு விமான பயணத்தை அதிகம் மேற்கொள்வோருக்கு உதவும் விதமாக பல்வேறு டிப்ஸ்களை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், இந்த பதிவில் விமான பயணத்தின்போது நம்முடைய லக்கேஜ் காணாமல் போய்விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஏர்லைன் நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும்:
பல மணி நேரம் காத்திருந்தபோதிலும் உங்களுடைய லக்கேஜ் உங்கள் கை வந்து சேரவில்லை என்றால் முதலில் நீங்கள் பயன்படுத்திய ஏர்லைன் நிறுவனத்திடம் முறையிட வேண்டும். அவர்களுக்கே நம்முடைய லக்கேஜை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டிய பொறுப்பு உண்டு. மேலும், அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துச் செல்வதன் வாயிலாகவே தவற விடப்பட்ட லக்கேஜை உடனடியாக பெற முடியும்.

லக்கேஜ்களைக் கையாளும்போது அவை தவறவிடப்படலாம். இந்த மாதிரியான நேரத்தில் நமக்கு உதவும் விதமாக குறிப்பிட்ட நிறுவனம் சார்பில் ஊழியர்கள் கட்டாயம் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர்களின் உதவியை நாடினால் நம்முடைய உடைமைகள் நிச்சயம் வந்து சேரும். அதேசமயத்தில், இவர்களின் உதவியை நாட செல்லும்முன் சில தகவல்களை தயாராக எடுத்துச் செல்வது நல்லது. அது உடனடி பலனைப் பெற உதவியாக இருக்கும்.

அதாவது, லக்கேஜ் பற்றிய அனைத்து விபரங்களையும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். குறிப்பாக, லக்கேஜின் மாடல், பிராண்ட், நிறம் மற்றும் அளவு பற்றிய விபரங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும். இதன் வாயிலாக வெகு விரைவில் நம்முடைய லக்கேஜ் அடையாளம் காணப்பட்டு அவை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கப்படும்.

அவசரமான அல்லது முக்கிய பயணங்களின்போது லக்கேஜ் காணாமல் போனால் என்ன செய்வது?
இன்றைய காலத்தில் தொழில் மற்றும் பிற முக்கிய காரணங்களுக்காக விமானங்களில் பயணிப்பவர்களே அதிகம். இதுமாதிரியான பயணங்களின்போது லக்கேஜ்களுக்கு அதிகம் முக்கியத்துவம் செலுத்தி நேரத்தை வீணடிக்க சிலர் விரும்புவதில்லை. இத்தகையோர் தங்களுடைய லக்கேஜ்களை அவர்கள் வசிக்கும் இடம் அல்லது வேறு எங்கு விரும்புகிறார்களோ அங்கேயே கொண்டு வந்து சேர்க்குமாறு கோரிக்கை விடுக்கலாம்.

இதை நிச்சயம் அவர்கள் (விமான போக்குவரத்து நிறுவனங்கள்) தவிர்க்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், எவ்வளவு விரைவில் லக்கேஜை அவர்கள் அனுப்பி வைப்பார்கள் என்பது துள்ளியமாக தெரியாது. ஆகையால், நீங்கள் உங்களுடைய விடுமுறைக்காக சென்றிருப்பீர்கள் எனில் நீங்கள் எத்தனை நாட்கள் அங்கு இருப்பீர்கள் என்பதை முழுமையாக திட்டமிட்டு லக்கேஜை அந்த இடத்திற்கு வரவழையுங்கள். அதேநேரத்தில், தொடர்ந்து விமான நிறுவனம் மற்றும் டெலிவரி சேவை நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பதன் வாயிலாக லக்கேஜை மீண்டும் தவறவிடாமல் சரியாக உங்கள் கையில் பெற்றுக் கொள்ள முடியும்.

ரீஃபண்ட் கேட்கலாம்:
தொலைந்த லக்கேஜை உங்களிடம் 21 நாட்களுக்குள் விமான நிறுவனம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பது விதி. 21 நாட்களுக்கும் மேல் விமான நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளுமானால் அவர்களிடத்தில் நஷ்ட ஈடு கேட்கலாம். இதற்காக தனி கொள்கைகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரசீதுகளை பத்திரப்படுத்துங்கள்:
சில விமான நிறுவனங்கள் உங்களது உடைமைகள் காணாமல் போனதற்கு முழு பொறுப்பேற்கின்றன. பல நாட்கள் நம்முடைய சொந்த உடைமை இல்லாமல் வெளியில் வேறு உடைமைகள் வாங்கப்படுமானால் அதற்கான செலவை விமானங்கள் நிறுவனங்களே வழங்க வேண்டும். ஆகையால், உங்களது ரசீதுகளை பத்திரப்படுத்தி உங்களுக்கான செலவுகளை சுட்டிக் காட்டி இழப்பீட்டைப் பெறலாம்.

இன்சூரன்ஸை செக் செய்யவும்:
இப்போதெல்லாம் பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து என அனைத்து விதமான பயணங்களுக்கும் இன்சூரன்ஸ் பாலிசி வந்துவிட்டது. விபத்து மற்றும் தேவையற்ற பிற இன்னல்களுக்கு நஷ்ட ஈட்டைப் பெற இந்த பாலிசி உதவியாக இருக்கும். ஒவ்வொரு பாலிசியும் வெவ்வேறு விதமான நஷ்ட ஈடை வழங்கக் கூடியவையாக இருக்கின்றன. ஆகையால், நீங்கள் தேர்வு செய்த காப்பீட்டு நிறுவனம் உங்களது லக்கேஜ் தொலைந்து போனதற்கு நஷ்ட ஈட்டை வழங்குவார்களா என செக் செய்து பார்க்கவும்.

கண்டிப்பாக பரிசோதித்து பார்க்க வேண்டும்:
நிச்சயம் ஒரு நாள் உங்களது தொலைந்துபோன லக்கேஜ் உங்கள் கை வந்து சேரும். அப்போது, நீங்கள் வைத்திருந்த அனைத்து பொருட்களும் இதில் இருக்கின்றதா என்பது சோதித்து பாருங்கள். குறிப்பாக, லக்கேஜ் ஏதேனும் டேமேஜ் ஆகியிருக்கின்றதா என்பதையும் செக் செய்து பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications