கார்களை வாங்கும்போது இந்த அம்சங்களை எல்லாம் தவிர்த்திடுங்க.. இதெல்லாமே நடைமுறைக்கு தேவையே இல்லாதவை!
கார்களை வாங்கும்போது தவிர்க்க வேண்டிய அம்சங்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இந்த அம்சங்களைத் தவிர்ப்பதன் வாயிலாக உயர்ந்துக் காணப்படும் காரின் விலையைக் கணிசமாகக் குறைத்துக் கொள்ள முடியும். மேலும், நாம் நினைத்தபடி கணிசமான அளவு காசை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும்.
நவீன யுகத்தின் மாபெரும் வளர்ச்சியை பரைசாற்றும் விதமாக ஆட்டோமொபைல்ஸ்துறை (வாகன உலகம்) இருக்கின்றது. எண்ணற்ற வளர்ச்சியை இந்த துறை கண்டிருக்கின்றது. தானாக பிரேக் பிடிப்பது தொடங்கி சிக்னலுக்கு ஏற்ப வேகத்தைக் கட்டுப்படுத்துவது வரை என பல மேம்பாடுகளை ஆட்டோமொபைல்ஸ் துறை தற்போது கண்டிருக்கின்றது.

அந்தவகையில், நவீன யுகத்தின் வளர்ச்சியாக கார்களில் வழங்கப்பட்டு இருக்கும் அனைத்து அம்சங்களும் மிக மிக முக்கியானவை என்று கூறிவிட முடியாது. தேவையில்லாத ஆணி என்று கூறக் கூடிய வகையிலும் சில அம்சங்களும் நவீன யுகத்தின் வளர்ச்சியாக நவீன கால கார்களில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அந்த தேவையில்லா அம்சங்கள் எவை என்பது பற்றியே விரிவாக இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். சுமார் ஏழு அம்சங்களை இந்த பதிவில் பட்டியலிட்டு, அவை எதனால் தேவையற்றது என கருதப்படுகின்றது என்பது பற்றிய தகவலையே இங்கு காண இருக்கின்றோம். வாருங்கள் எவை என்பதைப் பார்த்துவிடலாம்.

பகல்நேரத்தில் ஒளிரக் கூடிய எல்இடி லைட்டுகள்: நவீன கால கார்களில் வழங்கக் கூடிய தேவையற்ற மற்றும் காசை அதிகம் குடிக்கக் கூடிய அம்சங்களிலும் இதுவும் ஒன்றாகும். இது காரை கவர்ச்சியாக காண்பிப்பதிலேயே முக்கிய பங்கினை வகிக்கின்றது. அதேவேளையில், இதன் முக்கிய என்னவென்றால் எதிரில் வரும் வாகனங்களுக்கு வாகனத்தின் இருப்பை தெரியப்படுத்துவது ஆகும்.
இதை ஹெட்லைட் மற்றும் டேஞ்ஜர் லைட் வாயிலாக நம்மால் காண்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், பனி காலத்தில் சாலையின் தெரிவுநிலையை தெளிவுப்படுத்தவும் இந்த லைட் உதவுகின்றது. இதனால்தான், இந்த அம்சத்திற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கின்றது. இருப்பினும், பனி மின் விளக்கு எனும் அம்சம் இந்த வேலையை செய்துவிடும் என்பதால் இந்த அம்சம் தேவையற்ற அம்சமாகவே பார்க்கப்படுகின்றது.

இது பேட்டரியின் திறனை தொடர்ந்து உறிஞ்சக் கூடியதாக இருக்கின்றது. இதுதவிர, இந்தியாவின் கால சூழலுக்கு ஏற்ற அம்சம் இது இல்லை என்றும் வாகனத்துறை வல்லுநர்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், வெறும் பிரீமியம் லுக்கை மட்டுமே வழங்கக் கூடியதாக இந்த அம்சம் இந்திய சந்தையில் காட்சிளிக்கின்றது. எனவேதான் இதை தவிர்க்கலாம் என கூறப்படுகின்றது.
பனோரமிக் சன்ரூஃப்: மிக மிக விலை உயர்ந்த கார்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த அம்சங்களில் ஒன்றே பனோரமிக் சன்ரூஃப் ஆகும். ஆனால், இப்போது இந்த அம்சம் ஹேட்ச்பேக் மற்றும் செடான் என அனைத்து விதமான கார்களிலும் கிடைக்கத் தொடங்கிவிட்டது. இதுவும் காரின் பிரீமியம் ஃபீலை அதிகரிக்கச் செய்யக் கூடிய ஓர் அம்சமே ஆகும்.

பயணத்தின்போது வான்வெளியை ரசித்த வண்ணம் பயணிக்க இந்த அம்சம் உதவியாக இருக்கின்றது. இதேபோல் நேரடியாக இயற்கையான வெளிச்சத்தை பெறவும் இது வழிவகுக்கும். ஆனால், இந்த அம்சம் தேவையற்றது ஆகும். டிராவலின்போது பெரிய அளவில் காருக்குள் வெளிச்சம் தேவைப்படாது. அப்படியே தேவைப்ட்டாலும் லைட்டைப் போட்டுக் கொள்ளலாம்.
மிக முக்கியமாக இது பழுதடையும் பட்சத்தில் எளிதில் மழை நீர் காருக்குள் வரும். மேலும், காரின் மேற்பகுதியில் அதிக எடைக் கொண்ட பொருள் விழும் எனில் அது விரைவில் பாதிப்படைய நேரிடும். உதாரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிக மழையால் தற்காலிகமாக உருவாகிய அருவியில் சன்ரூஃப் வைத்த காரை அதன் உரிமையாளர், அந்த அருவி நீர் நேரடியாக சன்ரூஃப் மீது விழும்படி காரை நிறுத்தினார்.

அப்போது நீரின் வேகத்தை தாங்க முடியாத அந்த சன்ரூஃப் விரிசலைச் சந்தித்தது. இதனால் காருக்குள் நீர் நுழைய நேரிட்டது. இது மாதிரியான திடீர் சிக்கல்களைத் தவிர்க்க இந்த அம்சத்தைத் தவிர்ப்பதை விட்டால் வேறு வழியே இல்லை. பணத்தையும் மிச்சப்படுத்திக் கொள்ள முடியும்.
மழை பொழிந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள்: நவீன கால கார்களில் வழங்கப்படும் முக்கிய அம்சங்களில் இதுவும் ஒன்றாகும். மழை பொழிந்தால் வைப்பர்கள் தானாக ஆக்டிவேட் ஆகி மழை நீரை காரின் விண்ட்ஷீல்டில் இருந்து அகற்றும். இந்த அம்சத்தை நாமே நம் கைகளால் ஆக்டிவேட் செய்துக் கொள்ளலாம். அது அவ்வளவு கடினமான வேலை அல்ல. ஆகையால், இந்த அம்சத்தை தாராளமாக தவிர்த்துவிடலாம்.

கெஸ்சர் கன்ட்ரோல்: கை சைகைகள் வாயிலாக கன்ட்ரோல் செய்யும் அம்சமே கெஸ்சர் கன்ட்ரோல் ஆகும். இந்த வசதி உண்மையில் அட்டகாசமானதுதான். ஆனால், இந்த அம்சம் திடீரென வேலை செய்யாமல் போகும் எனில் அந்த நேரத்தில் கவன சிதறல் ஏற்பட நேரிடலாம். இதனால், விபத்து போன்ற மிகப் பெரிய ஆபத்து நேரிடும். எனவேதான் இந்த அம்சத்தை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் ஆட்டோமொபைல்துறையைச் சேர்ந்த வல்லுநர்கள்.
டச்பேட் கன்ட்ரோல்கள்: இது மிகவும் கூலான அம்சமாக பலரால் புகழ்பாடப்படுகின்றது. அதேவேளையில் இதனாலும் சில ஆபத்துகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. மிக முக்கியமாக இதனாலும் கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், நாம் ஒன்றை டச் செய்ய வேற ஒன்று ஆக்டிவேட் ஆகுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே பழைய வழக்கமான பொத்தான்களைக் கொண்ட கார்களை வாங்குவதே சிறந்தது என்கின்றனர்.

ஒயர்லெஸ் சார்ஜர்: பெரும்பாலும் நாம் வீட்டில் இருந்து புறப்படும் முன்னரே செல்போன் உள்ளிட்ட சாதனங்களை சார்ஜ் செய்துவிட்டே செல்வோம். இருப்பினும், கார்களில் சார்ஜிங் செய்யும் வசதி இருப்பது நல்லதே. அவசர நேரத்தில் பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக நீண்ட தூர டிராவலின்போது இதன் உதவி மிகப் பெரியது ஆகும்.
ஆனால், ஒயர்லெஸ் சார்ஜராகதான் இருக்க வேண்டும் என்பது அவசியமற்றது. ஏனெனில், இந்த ஒயர்லெஸ் சார்ஜிங் பேட்களில் செல்போனை வைப்பது ஓர் வறுக்கும் கடாயில் போடுவதற்கு சமம் என கூறப்படுகின்றது. அந்த அளவிற்கு அதிக வெப்பத்தை அது வெளிப்படுத்தும். இது செல்போனின் ஆயுட்காலத்தை விரைந்து குடிக்கச் செய்யும். இதனால்தான் இந்த அம்சத்தை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றது.

தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்: என்ன இந்த அம்சத்தையும் தவிர்க்க வேண்டுமா என நீங்கள் அதிர்ச்சியடையலாம். ஏனெனில் இந்த அம்சம் அந்த அளவிற்கு வாகன உலகில் ஊடுருவி இருக்கின்றது. அதேபோல், ஆபத்தை விளைவிப்பதிலும் இந்த அம்சம் முக்கிய பங்கினை வகிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
ஆம், இதைப் பயன்படுத்தும் ஓட்டுநர்களின் கவன சிதறடிக்கப்படுவதாகவும், இதனால் நாட்டில் பல்வேறு விபத்து சம்பவங்கள் அரங்கேறி இருப்பதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதானலேயே நாம் கார்களில் தவிர்க்க வேண்டிய நவீன கால தொழில்நுட்பங்களில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஒன்று என கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த அம்சங்கள் அனைத்தையும் விரும்பக் கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பணத்தை தாராளமாக வாகனங்களுக்காக செலவு செய்யக் கூடிய நபர் நீங்கள் என்றால், தாராளமாக மேலே உள்ள அம்சங்கள் கொண்ட காரை எந்த தயக்கமும் இன்றி வாங்கிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications









