என்னது எத்தனால் என்பது சாராயமா? இதுல ஓட கூடிய இன்னோவாவையா வெளியீடு செஞ்சாங்க.. எரிபொருளின் நன்மை-தீமைகள்!
இன்னும் ஒரு சில ஆண்டுகள்தான் பெட்ரோல், டீசல் வாகனங்களே இல்லாத நாடாக மாற போகிறது நமது இந்தியா. இதற்கான பணியில் நமது அரசாங்கம் மிக தீவிரமாக களமிறங்கிவிட்டது. பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்களையும் ஊக்குவிக்கும் பணியை அது மிக சிறப்பாக செய்துக் கொண்டிருக்கின்றது.
இதற்கு ஒத்திசைக்கும் விதமாக விரைவில் ஒரு சில நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் வாகனங்களின் உற்பத்தியை கை விட இருப்பதாக அறிவித்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையிலேயே, நேற்றைய (ஆகஸ்டு 29) தினம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100 சதவீதம் எத்தனாலில் ஓடும் இன்னோவா ஹைகிராஸ் காரை டொயோட்டா நிறுவனம் வெளியீடு செய்தது.

இந்த காரை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாட்டில் வெளியீடு செய்து வைத்தார். தற்போது முன் மாதிரி மாடலாக மட்டுமே இந்த கார் உருவாக்கம் செய்யப்பட்டு இருக்கின்றது. வெகு விரைவில் இது உற்பத்தி நிலைக்கு உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அது எப்போது செய்யப்படும் என்கிற விபரம் வெளியிடப்படவில்லை.
இருப்பினும், இந்தியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை இந்த கார் ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. இந்த எத்தனால் பவர்டு டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் இயக்கத்திற்கு ஒரு துளி பெட்ரோல்கூட தேவைப்படாது. இப்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான வாகனங்கள் இ20 எனப்படும் 20 சதவீதம் எத்தனால் மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் சேர்க்கப்பட்ட எரிபொருளில் ஓடக் கூடியவையாக இருக்கின்றன.

ஆனால், மத்திய அமைச்சர் வாயிலாக நேற்று அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் இயங்க 100 சதவீத எத்தனால் மட்டுமே போதுமானதாக இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிஃபைடு ஃப்ளெக்ஸி ஃப்யூவல் வாகனம் என்பது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும். ஆகையால், மைலேஜை இந்த கார் மிக மிக தாராளமாக வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் விரைவில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றைபோல சகஜமான எரிபொருளாக மாற இருக்கும் எத்தனாலை பற்றி அறிய வேண்டிய முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, எத்தனால் என்றால் என்ன? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன என்பது பற்றிய தகவலையே பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
எத்தனால் என்றால் என்ன? எத்தில் ஆல்கஹால் இதையே எத்தனால் என்கின்றோம். ஆமாங்க, நீங்க நினைச்சது சரிதான். மதுபானத்தில் காணப்படும் அதே வகை ஆல்கஹால்தான். ஆனால், இதை அருந்த முடியாது. சோளம், கரும்பு மற்றும் தானியங்கள் உள்ளிட்ட விவசாய கழிவுகளில் இருந்தே இது தயாரிக்கப்படுகின்றது.
இதுதவிர மறைமுகமாக பேப்பரி கழிவுகளில் இருந்து எத்தில் ஆல்கஹால் தயாரிக்கப்படுகிறது. சந்தையில் இதனை ப்யூர் ஆல்கஹால், தானிய ஆல்கஹால் அல்லது எத்தில் ஆல்கஹால் என்று அழைக்கப்படுவது உண்டு. மேலும், இந்த ஆல்கஹால் பல ஆண்டுகளாக எரிபொருள் உலகில் பயன்பாட்டில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது விற்பனையில் இருக்கும் எரிபொருளுடன் கணிசமான அளவு எத்தனாலும் சேர்க்கப்படுகின்றது.
20-80 எனும் வீதத்தில் அது சேர்க்கப்படுகின்றது. இதனை எரிபொருள் உடன் சேர்ப்பதனாலேயே கார்பன் உமிழ்வு கணிசமாக குறைந்திருப்பதாக கூறப்படுகின்றது. இதுதவிர, எரிபொருளின் ஆக்டேன் மதிப்பையும் அதிகரிக்கச் செய்யவும் இந்த எத்தில் ஆல்கஹால் பெரும் உதவியாக இருக்கின்றது. இதுதவிர ஏராளமான பிற நன்மைகளையம் அது வழங்குகின்றது.
இந்த பயன்பாட்டை மட்டுமில்லைங்க தனி எரிபொருளாகவும் இந்த எத்தனாலை பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது, பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருளாகவும் இதனை பயன்படுத்திக்க முடியும். இதன் பயன்பாட்டில் சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இதன் தயாரிப்பு முறையிலும் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படாது. நொதித்தல் மற்றும் வடிகட்டுதல் ஆகிய செயல்முறைகள் வாயிலாகவே எத்தில் ஆல்கஹால் தயாரிக்கப்படுகின்றது.
எத்தனால் எப்படி எரிபொருளாக மாறுகின்றது? தானியம் மற்றும் சில தாவரங்களை அரைப்பதன் மூலம் எத்தனால் தயாரிப்பு பணிகள் தொடங்குகின்றது. கரும்பு, பார்லி, சக்கரை வள்ளிக் கிழங்கு, கோதுமை மற்றும் சோளம் உள்ளிட்டவையே பெரும்பாலும் எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்றது. இவற்றில் இருந்தே நொதித்தல் வாயிலாக சுத்தமான எத்தில் ஆல்கஹால் பெறப்படுகின்றது.
இந்த நொதித்தல் முறையை விரைவுப்படுத்த ஈஸ்ட் சேர்க்கப்படுகின்றது. இந்த வழியிலேயே மதுபானமும் தயாரிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எத்தனால் காய்ச்சி சுத்திகரிக்கப்பட்ட உடன் அது பயன்படுத்த தயாராகிவிடும். நான்கு விதமான செயல்முறைகளைத் தொடர்ந்தே எத்தில் ஆல்கஹால் கைகளுக்கு கிடைக்கும். இந்த செயல்களுக்கு பெரிய அளவில் செலவாகாது.
இதனாலேயே அரசு எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்துவதற்கு தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, கரும்பில் இருந்து எத்தனாலை தயாரிக்க, முதலில் கரும்பில் இருந்து சாறு பிழிந்தெடுக்கப்படுகின்றது. பின்னர், அது புளிக்க வைக்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, புளித்த அந்த கரும்பு சாற்றை காய்ச்சி எடுக்கப்படும். இந்த நிலையிலேயே எத்தனால் கிடைக்கப்படுகின்றது.
இது ஓர் சுத்தமான எரிபொருள் ஆகும். துகள் இல்லாத எரிபொருளும்கூட. இதை எரிக்கும்போது கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீராவி ஆகியவையே வெளியாகும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு அடுத்தபடியாக பூமியில் எரிபொருள் கிடைக்காமல் போகலாம். ஆனால், எத்தனால் விவசாயம் என்பது அழியும் வரை நம்மால் உற்பத்தி செய்துக் கொள்ள முடியும் விவசாயம் அழிவு என்பது சாத்தியமற்ற ஒன்றாகும். ஆகையால், புதைப்படிவ எரிபொருளைக் காட்டிலும் மிக சிறந்த எரிபொருளாக எத்தனால் பார்க்கப்படுகின்றது.
எத்தனால் எரிபொருளில் கிடைக்கும் நன்மைகள்: பெட்ரோல், டீசல் ஆகியவை கச்சா எண்ணெயில் இருந்தே தயாரிக்கப்படுகின்றது. இதை நாம் வெளிநாடுகளில் இருந்தே பெற வேண்டியதாக இருக்கின்றது. மேலும், நேரடியாக நம்முடைய ரூபாயை கொடுத்து வாங்க முடியாமல், டாலர்களைக் கொடுத்தே வாங்க வேண்டியதாக இருக்கின்றது. இதற்காக பெரும் தொகையை கமிஷனாக வழங்க நேரிடுகின்றது. இதனால் ஆண்டு ஒன்றிற்கு பல லட்சக் கணக்கான கோடி ரூபாய் செலவாகும் சூழல் உள்ளது.
இந்த நிலை எத்தனால் பயன்பாட்டிற்கு மாறும்போது இருக்காது. உள்நாட்டிலேயே வைத்து தயாரித்துக் கொள்ள முடியும். மேலும், உற்பத்தி செலவும் குறைவே ஆகும். மேலும், முன்னதாக கூறியதைப் போலவே அது சுற்றுச் சூழலுக்கு மாசுபாட்டை ஏற்படுத்தாது. குறைந்த அளவே அது மாசுபாட்டை ஏற்படுத்தும். இதுதவிர, பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைத்தல், நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்கும், குறிப்பாக, விவசாய துறைக்கு பெரும் உதவியாக இருக்கும்.
எத்தனால் எரிபொருளில் உள்ள தீமைகள்: எத்தனால் எரிபொருளில் நன்மைகள் பல இருந்தாலும், அதில் சில பாதகங்களும் உள்ளன. பெரிய அளவில் நிலம் அதற்கு தேவைப்படுகின்றது. விவசாயம் கழிவுகளைச் சார்ந்து இதன் உற்பத்தி இருப்பதனால், மழை அல்லது இயற்கை பேரிடரில் அந்த பயிர்கள் அழிந்துவிடாமல் இருக்க வேண்டும்.
எத்தனால் உற்பத்திக்கு பெரும் உதவியாக இருக்கக் கூடிய பயிர் வகைகள் மழை அல்லது இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் எனில் மிகப் பெரிய அளவில் எத்தனால் பற்றாக்குறை ஏற்படக் கூடும். இதுவே மிக பெரிய பாதகம் ஆகும். எத்தனால் பிரித்தெடுக்க நொதித்தல் முறை கையாளப்படுகின்றது. இந்த செயல் முறைக்கு அதிக வெப்பம் தேவைப்படுகின்றது.
வெப்பம் என்று வரும்போது கேஸ் அல்லது விறகு கட்டையே இதற்கு பெரும் உதவியாக இருக்கின்றது. இந்த இரண்டுமே சுற்றுச் சூழலை பாதிக்கச் செய்யக் கூடியவை ஆகும். விறகு கட்டையை எரிக்கும்போது அதிக புகை வெளியேறக் கூடும். இதேபோல், எரிவாயுவை பயன்படுத்தும்போது அதிகளவு காற்றை மாசுப்படுத்தக் கூடிய விஷ வாயுக்கள் வெளியேறுகின்றன.
இதுவும் எத்தனால் பயன்பாட்டில் இருக்கும் மிகப் பெரிய பாதகம் ஆகும். இதுதவிர, எத்தனால் உற்பத்திக்கு சோளம், பார்லி உள்ளிட்டவை பயன்படுத்தப்பட இருப்பதால் அந்த குறிப்பிட்ட உணவு பொருட்களின் விலை பலமடங்கு உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர தண்ணீரின் தேவையும் இருப்பதனால், தண்ணீர் பற்றாக்குறையை இது ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர இன்னும் பல பாதகங்களை எத்தனால் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாதகம் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே இல்லை. அந்தவகையில், சற்று அதிகபட்ச நன்மையை எத்தனால் கொண்டிருப்பதால் அதன் வருகையை எதிர்பார்ப்போரே அதிகமாக இருக்கின்றனர். மலிவு விலை, அதிக மைலேஜ் உள்ளிட்ட பலன்களை அது கொண்டிருப்பதே எதிர்பார்ப்பிற்கான முக்கிய காரணமாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications
