ஒர்க்ஸாப் வைத்திருந்தவர் சொன்ன ஐடியா! கவாஸாகி பைக்குகள் ஏன் பச்சை கலரில் உள்ளன தெரியுமா? உண்மையாவே செம தில்லு!
கவாஸாகி நிறுவனத்தின் பைக்குகள் பெரும்பாலும் பச்சை நிறத்திலேயே இருப்பதற்கு பின்னால் சுவாரஸ்யமான காரணம் ஒன்று உள்ளது. அது என்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய பைக்கை வாங்குபவர்கள் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பரிசீலனை செய்வார்கள். எந்த நிறுவனத்தின் பைக்கை வாங்குவது? என்பதுதான் அவர்கள் பரிசீலனை செய்யும் முதல் விஷயமாக இருக்கும். எந்த நிறுவனம் என்பது முடிவானவுடன், அந்த நிறுவனத்தின் எந்த பைக்கை வாங்குவது? என அவர்கள் பரிசீலனை செய்ய தொடங்குவார்கள்.

இந்த 2 கேள்விகளுக்கும் உறுதியான பதில்கள் கிடைத்தவுடன், அடுத்து அவர்கள் கவனிக்கும் விஷயமாக இருப்பது நிறம்தான். பைக்குகளின் நிறம் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்குமே உண்டு. கவர்ச்சிகரமான நிறத்தின் மூலம் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க நினைப்பது மனித இயல்பே.

இப்படி நிறம் நம் அனைவரின் வாழ்க்கையிலும் முக்கிய பங்காற்றுகிறது. பைக் நிறுவனங்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. இங்கு ஒவ்வொரு பைக் நிறுவனத்திற்கும் தனித்துவமான அடையாளம் உள்ளது. பைக்குகளில் செய்யும் டிசைன்கள் மூலமாகவும் பைக் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன.

இந்த வகையில் லைம் க்ரீன் (Lime Green) நிறம் கவாஸாகி நிறுவனத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. கவாஸாகி நிறுவனத்தின் பைக்குகளில் லைம் க்ரீன் நிறம் முக்கிய இடத்தை வகிக்கிறது. கவாஸாகி நிறுவனத்தின் பெரும்பாலான பைக்குகள் லைம் க்ரீன் நிறத்தில்தான் டிசைன் செய்யப்பட்டிருக்கும்.

கவாஸாகி என்ற வார்த்தையை கேட்ட உடனேயே பெரும்பாலானவர்கள் மனதில் லைம் க்ரீன் நிறம் தோன்றி விடும். அந்த அளவிற்கு கவாஸாகி நிறுவனத்தின் லைம் க்ரீன் நிறம் நம் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இந்த லைம் க்ரீன் நிறம் கவாஸாகி நிறுவனத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக மாறியதற்கு பின்னால் சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது.

ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனத்தின் லைம் க்ரீன் நிறத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் 1969ம் ஆண்டிற்கு பயணிக்க வேண்டும். அப்போது வேகமாக வளர்ந்து வந்த அமெரிக்க சந்தையில் வலுவாக காலூன்றுவதற்கு கவாஸாகி நிறுவனம் தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தது.

அமெரிக்க சந்தையில் வலுவாக காலூன்ற வேண்டுமென்றால், வாடிக்கையாளர்கள் மத்தியில் தனக்கென ஒரு இமேஜை உருவாக்க வேண்டும். அதற்காக கவாஸாகி நிறுவனம் முயற்சி செய்து கொண்டிருந்தது. அப்போது கவாஸாகி நிறுவனத்தின் தலைவராக இருந்த ஜார்ஜ் ஹமாவாக்கி (George Hamawaki), அமெரிக்காவில் தங்களது பிராண்ட் இமேஜை உயர்த்துவது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வந்தார்.

இதன் ஒரு பகுதியாக தங்களது சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவினரை அழைத்த அவர், தனித்துவமாக ஏதேனும் ஒன்றை செய்யும்படி கேட்டு கொண்டார். அப்போது உருவானதுதான் இந்த லைம் க்ரீன் நிறம். ஆம், இன்று கவாஸாகி நிறுவனத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் லைம் க்ரீன் நிறம் விளம்பர முயற்சிகளின் ஒரு பகுதியாகதான் பிறந்தது.

டேடோனா 200 மைல்ஸ் (Daytona 200 Milles) என்பது அமெரிக்காவில் நடைபெற்று வரும் மிகவும் பிரபலமான 'ரேஸ்' ஆகும். 1969ம் ஆண்டு நடைபெற்ற இந்த பந்தயத்தில் போட்டியிடுவதற்கு கவாஸாகி நிறுவனமும் தனது அதிகாரப்பூர்வ அணியை பதிவு செய்து வைத்திருந்தது. மதிப்பு மிகுந்த இந்த பந்தயத்தில் வெற்றி பெறும் நிறுவனங்களின் பைக் விற்பனை மிகவும் சிறப்பாக இருக்கும்.

எனவே டேடோனா 200 மைல்ஸ் பந்தயத்தில் வெற்றி பெறுவதற்கு முன்னணி நிறுவனங்கள் கடுமையாக போராடும். இந்த பந்தயத்தில் வெற்றி பெறுவதுடன், ரேஸ் டிராக்கில் கவாஸாகி பைக்குகளை மக்கள் கவனிக்க வேண்டும் என ஜார்ஜ் ஹமாவாக்கி உள்ளிட்ட அதன் உயர் அதிகாரிகள் விரும்பினர். இதற்காக ரோலின் மோலி சாண்டர்ஸ் (Rollin Molly Sanders) என்பவரை கவாஸாகி அதிகாரிகள் அணுகினர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தென் பகுதியில் பெயிண்ட் ஒர்க்ஸாப் ஒன்றை அவர் நடத்தி வந்தார். கார்கள் மற்றும் பைக்குகளுக்காக இந்த பெயிண்ட் ஒர்க்ஸாப் செயல்பட்டு வந்தது. இவர்தான் கவாஸாகி நிறுவனத்தின் பைக்குகளை லைம் க்ரீன் நிறத்தில் பெயிண்ட் செய்யலாம் என்ற யோசனையை முன்மொழிந்தார்.

அப்போது லைம் க்ரீன் நிறத்தை ரேஸ் பைக்குகளில் பெரும்பாலும் யாருமே பயன்படுத்த மாட்டார்கள். இந்த நிறம் துரதிருஷ்டத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை அந்த சமயங்களில் இருந்து வந்ததுதான் இதற்கு காரணம். எனவே லைம் க்ரீன் நிறத்தில் பைக்குகளை பெயிண்ட் செய்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க முடியும் என்பது ரோலின் மோலி சாண்டர்ஸின் நம்பிக்கையாக இருந்தது.

இப்படிதான் கவாஸாகி பைக்குகளில் லைம் க்ரீன் நிறம் இடம்பெற தொடங்கியது. ரோலின் மோலி சாண்டர்ஸ் முன்மொழிந்த திட்டம் வெற்றியடைந்தது. எனவே 'கவாஸாகி ரேஸிங் க்ரீன்' (Kawasaki Racing Green) என்ற காப்புரிமை பெற்ற பெயரில், லைம் க்ரீன் நிறத்திற்கு மாற கவாஸாகி நிறுவனம் அதிக காலம் எடுத்து கொள்ளவில்லை.

லைம் க்ரீன் நிறத்தில் பைக்குகளை பெயிண்ட் செய்யலாம் என ரோலின் மோலி சாண்டர்ஸ்தான் கவாஸாகி அதிகாரிகளை சமாதானம் செய்தார். இது தனித்துவமான நிறம் என்றும், ரேஸ் டிராக்கில் தனித்து தெரியும் எனவும் அவர் விளக்கினார். எல்லாவற்றுக்கும் மேலாக இது புதிய நிறம் என்றும், இதற்கு முன்பு இந்த நிறத்தை பலரும் பார்த்திருக்க மாட்டார்கள் எனவும் அவர் எடுத்துரைத்தார்.

அதன்பின் என்ன நடந்தது? என்பது வரலாறு. துரதிருஷ்டவசமானதாக கருதப்பட்ட ஒரு நிறம், தைரியமாக எடுக்கப்பட்ட ஒரு முடிவால் தற்போது கவாஸாகி நிறுவனத்தின் அடையாளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆனால் கவாஸாகி நிறுவனம் தற்போது லைம் க்ரீன் நிறத்தில் மட்டுமல்லாது, மற்ற நிறங்களிலும் தனது பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. லைம் க்ரீன் என்பது அந்நிறுவனத்தின் முக்கியமான நிறமாகும்.


Click it and Unblock the Notifications