6 கிமீ ஆழத்தில் கடலை ஆராய இருக்கும் இந்தியா.. இதற்கான கருவியை தயாரிச்சது நம்ம சென்னை நிறுவனம்! இதோ முழு விபரம்
இந்தியா சமீபத்தில் சந்திரனின் தென் துருவத்தை ஆராயும் விதமாக சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இதில் அனுப்பி வைக்கப்பட்ட விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி பணிகளைக்கூட தொடங்கிவிட்டது. இப்போது ஓய்வில் இருக்கும் விக்ரம் லேண்ட்ர் சூரியனின் மறு உதயத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றது.
இஸ்ரோ, தன்னுடைய இந்த விண்வெளி ஆராய்ச்சியை விரிவாக்கும் செய்யும் விதமாக மற்றுமொரு விண்கலத்தை சந்திரயான் 3-ஐ தொடர்ந்து விண்ணிற்கு அனுப்பியது. அது ஆதித்யா எல்1 (Aditya L1) விண்கலம் ஆகும். இது சூரியனை ஆராயும் விதமாக எல்1 பகுதியில் நிலை நிறுத்தப்பட இருக்கின்றது.

இந்த நிலையிலேயே இந்தியா தன்னுடைய பார்வை வான்வெளியில் மட்டுமல்ல சமுத்திரத்திலும் (கடலிலும்) உண்டு என்பதை வெளிக்காட்டி இருக்கின்றது. ஆமாங்க, வான்வெளியைத் தொடர்ந்து கடலை ஆராய்ச்சி செய்யும் பணியிலும் அது ஈடுபட இருக்கின்றது. இந்த திட்டத்திற்கு சமுத்ரயான் (Samudrayaan) என பெயரிடப்பட்டு உள்ளது.
இதன் மூலம் 6 கிலோ மீட்டர் ஆழம் வரை கடலுக்குள் சென்று ஆராய்ச்சி பணிகள் செய்யப்பட இருக்கின்றன. இந்த அற்புதமான பணிக்காகவே இந்தியா தற்போது தீவிரமாக தயாராகிக் கொண்டிருக்கின்றது. இந்த தகவலை புவி அறிவியியல் அமைச்சகத்தின் கிரண் ரிஜ்ஜு-வும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

இதற்காக மத்ஸ்யா 6000 (MATSYA 6000) எனும் கடல் ஆராய்ச்சி கலம் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. திருப்பதி லட்டு போல் உருளை வடிவத்தில் தயார் செய்யப்பட்டு இருக்கும் இந்த கலனே கடலின் ஆறு கிமீ ஆழம் வரை பயணித்துச் சென்று கடல் ஆராய்ச்சியில் ஈடுபட இருக்கின்றது.
இதனை உருவாக்கியது சென்னையில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓசோன் டெக்னாலஜிஸ் (Chennai's National Institute of Ocean Technology) என்பது குறிப்பிடத்தகுந்தது. மூன்று பேர் வரை உள்ளிருந்து கடலுக்குள் பயணிக்கும் வகையிலேயே இந்தக் கலன் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதன் உள்ளிருந்து மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது.
இந்தியாவின் இந்த சமுத்ரயான் பயணத்திற்கான முக்கியமான காரணம் ஒன்று மட்டுமே ஆகும். அது, ஆழ் கடல் வளத்தை ஆராய்வது மட்டுமே ஆகும். இத்துடன், கடல் பல்லுயிர் மதிப்பீட்டின் விரிவான ஆய்வையும் இந்த கலத்தின் வாயிலாகவே ஆராய்ச்சியாளர்கள் செய்ய இருக்கின்றனர். இந்த ஆராய்ச்சிகள் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
குறிப்பாக, ப்ளூ எகனாமி எனப்படும் கடல் சார்ந்த பொருளாதாரத்தை இது மேம்படுத்த உதவும். பொருளாதார வளர்ச்சியில் மட்டுமல்ல வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதிலும் இதன் பங்களிப்பு மிகப் பெரியதாக இருக்கும் என கருதப்படுகின்றது. கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தவும் இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கப் போகின்றது.
இந்தியா தற்போது விண்வெளி மற்றும் கடல்சார் ஆராய்ச்சியில் தீவிரம் காட்ட தொடங்கி இருப்பதை வைத்து பார்க்கையில், தன்னை மிகப் பெரிய நாடாக இந்த விஷயங்களில் காட்டிக் கொள்ளும் முயற்சியில் அது களமிறங்கி இருப்பது தெளிவாக தெரிகின்றது. இந்த புதிய சமுத்ரயான் திட்டத்தின் வாயிலாக இந்தியா மற்றுமொரு வரலாற்று சாதனையைப் படைக்க இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரனின் தென் துருவ ரகசியத்தைப் போலவே பெருங்கடலின் இருள் சூழ்ந்த ஆழ்கடல் ரகசியத்தையும் இந்த உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்ட இருக்கின்றது, இந்தியா. இதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே சமுத்ரயான் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகையால், விரைவில் இந்த உலகம் அறிந்திராத ஆழ்கடல் ரகசியங்கள் பலவற்றை இந்தியா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வாயிலாக பல வழிகளில் இந்தியாவும், மீனவ மக்களும் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








