இதுதான் TTF அண்ணாவின் கனவு பைக்காம்... இதையெல்லாம் வாங்க அம்பானியே ஒரு நிமிஷம் யோசிப்பாரு... அவ்ளோ காஸ்ட்லி!
யூடியூப்பில் பிரபலமான TTF வாசன் பயன்படுத்தும் பைக்கள் மற்றும் அவர் வைத்திருக்கும் பைக்கள் குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்

TTF இன்று தமிழ்நாட்டின் சென்சேசனலான தலைப்பு இது தான். சமீபத்தில் யூடியூபில் பயண வீடியோவை வெளியிட்டு இளசுகளின் மனதைக் கவர்ந்தவர் தான் வாசன். இவர் Twin Throttler என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் இவர் ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளுக்கு ஒரு மீட் அப் ஏற்பாடு செய்ததில் ஏகப்பட்ட ரசிகர்கள் கூடியது பெரிய அளவில் வைரலானது.

சமூகவலைத்தளங்களில் 90ஸ் கிட்ஸ் என சொல்லிக்கொள்பவர்கள் எல்லாம் டிடிஎஃப் வாசனை கிண்டல் செய்து பதிவு செய்கின்றனர். அவர் யார் என்றே தெரியாது என்றெல்லாம் கிண்டல் பதிவுகளைச் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் பைக் மற்றும் டிராவல் விலாக் ரசிகர்களுக்கு இவரைக் கட்டாயம் தெரியாமல் இருக்காது. வயதானவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இப்படியாக TTF யார் என்றே தெரியாதவர்களுக்கு அவரை பற்றி அறிமுக செய்யும் விதமாக இந்த பதிவு இருக்கும். கடந்த 2000 ஆண்டு கோவை மாவட்டத்தில் பிறந்தவர் தான் வாசன். விவசாய குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்ட இவருக்கு பைக் மீது காதல் வந்ததற்கு இவரது தந்தை தான் காரணம்.

அவர் ஒரு புல்லட் பைக் ஒன்றை வைத்திருந்தார். 2000-2010 ஆகிய ஆண்டுகளில் புல்லட் பைக்கை வெகு சிலரே வைத்திருப்பார்கள். இப்படியாக இவர் தந்தை ஓட்டி செல்வதைப் பார்க்கும் இவருக்கு அந்த பைக்கை ஓட்ட வேண்டும் என ஆசை ஏற்பட்டுள்ளது. அந்த தருணம் தான் டிடிஎஃப்பிற்கு முதல் படி. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவரது தந்தை இவர் 7ம் வகுப்பு படிக்கும் போதே தவறிவிட்டார்.

அப்பொழுது இவர் தந்தை பயன்படுத்திய பைக் ஒரு ஓரமாக யாரும் பயன்படுத்தாத படி நிறுத்தப்பட்டது. இவருக்கு வளர்ந்த பின்பு அந்த பைக்கை ஓட்ட வேண்டும் என ஆசை அப்பொழுது வந்தது. அதன்பின் பைக்குகள் குறித்து அதிகமாக ஆர்வமுடன் தெரிந்த கொள்ள ஆரம்பித்தார். இந்நிலையில் அவருக்கு யமஹா R15 பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது.

இதற்காக அந்த பைக்கை வாங்க முயற்சி செய்தார். அந்த பைக்கை வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டால் அதிக விலை காரணமாகச் சிரமப்படுவார்கள் என நினைத்து பகுதி நேர வேலைக்குச் சென்றார். அங்கு அவர் சம்பாத்திய காசை சேமித்து வைத்து தன் தாயிடமும் பணம் வாங்கி முதன் முறையாக யமஹா ஆர்15 பைக்கை வாங்கினார்.

இந்நிலையில் இந்த பைக்கில் இவர் பயணிப்பது குறித்து வீடியோ எடுத்துப் போடத் துவங்கினார். இந்த தளம் தான் Twin Throttlers என்ற யூடியூப் பக்கம் 2020 கொரோனா தாக்கத்திற்குப் பின்பு வீடியோக்களை வெளியிடத் துவங்கிய இவருக்கு இன்று 2.8 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர்.

இந்த யூடியூப் சேனலை தனது நண்பர்கள் இருவருடன் சேர்த்து நடத்தி வருகிறார். இந்த சேனலில் இவர் கோவையிலிருந்து லடாக் பயணம் செல்வது குறித்த வீடியோ வெளியிட்டது தான் செம வைரலாக பரவியது. இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்து வந்தனர். இது போக இவர் பைக்கில் செல்லும் போது அங்குச் சாலையில் சிரமப்படுபவர்களுக்கு இவர் செய்யும் உதவி உள்ளிட்ட வீடியோக்களும் வைரலாக பரவியது.

தற்போது இவரிடம் 5 பைக்குகள் இருக்கிறது. டிவிஎஸ் எக்ஸ் எல் முதல் ஸ்போர்டஸ் பைக் வரை வைத்திருக்கிறார். இவர் அத்தனை பைக்குகளிலும் வீடியோ போட்டுள்ளார். அவரிடம் கவாசகி z900,புல்லட் யமஹா ஆர்15 வி3, டிவிஎஸ் எக்ஸ்எல், டிவிஎஸ் அப்பாச்சி ஆகிய பைக்குகள் இருக்கிறது. அதில் விலை உயர்ந்தது. கவாசகி z900 பைக் தான். இந்த பைக் குறித்த விபரங்களை இனி காணலாம்

இந்த கவாசகி z900 பைக் ஒரு சூப்பர் பைக் கேட்டகிரியில் வரும் பைக், இது 948 சிசி இன்ஜினை கொண்டது. இந்த இன்ஜின் குறைந்த பட்சம் 95 ஆக்டேன் ரேட்டிங் கொண்ட எரிபொருளில் இயங்கும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 125 பிஎஸ் பவரை 9500 ஆர்பிஎம்மில் வெளியிடுகிறது. டார்க்கை பொருத்தவரை 98.6 எம்என் டார்க்கை 7700 ஆர்பிஎம்மில் வெளியிடுகிறது.

17 லிட்டர் டேங்க் கொள்ளளவு கொண்ட இந்த பைக் மொத்தம் 212 கிலோ எடை கொண்டது. இந்தியாவில் இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ8.84 லட்சம் இந்த பைக்கை வாங்க டிடிஎஃப் வாசன் ரூ12 லட்சம் வரை செலவு செய்ததாக ஒரு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமல்ல இவரது நண்பர் அஜீஸ் என்பவரும் இவருடன் இணைந்து வீடியோ வெளியிடுகிறர். அவர் கவாசகி நின்ஜா 650 பைக்கை வைத்திருக்கிறார். அதைப் பற்றிக் காணலாம் வாருங்கள்

இந்த கவாசகி நின்ஜா 650 பைக்கும் சூப்பர் பைக் தான். இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 649 சிசி இன்ஜின் திறன் கொண்டது. இது 8000 ஆயிரம் ஆர்பிஎம்மில் 65 பிஎஸ் பவரை
யும், 6700 ஆர்பிஎம்மில் 64.0 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. 15.6 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு கொண்ட இந்த பைக் 196 கிலோ எடை கொண்டது. இந்த பைக்கின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ 6.68 லட்சம் ஆகும்.

TTF வாசன அடுத்து வாங்க நினைக்கும் கனவு பைக்காக இருப்பது கவாஸகி நின்ஜா எச்2 பைக் தான் இந்த பைக் பல வேரியன்களில் வருகிறது. இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 215 பிஎஸ் பவர் முதல் 243 பிஎஸ் பவர் வரை இருக்கிறது. அதே போல டார்க் திறனைப் பொருத்தவரை 133.5 என்எம் முதல் 141.7 என்எம் டார்க் திறன் இருக்கிறது.

இது போக டச் ஸ்கிரீன், செல்ஃப் ஹீலிங்க் பெயிண்ட், கெமிக்கல் ஸ்பிரிங் அப்சர்ப்ஸ், ஆகிய ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கை கவாசகி நிறுவனம் ஜப்பானில் தான் தயாரிக்கிறது. இந்தியாவிற்கு இந்த பைக் வேண்டும் என்றால் ஜப்பானிலிருந்து முழுவதும் கட்டமைக்கப்பட்ட பைக்காக இறக்குமதி செய்து விற்பனை செய்கிறது.

இந்த பைக்கின் விலையைப் பொருத்தவரை எக்ஸ் ஷோரூம் விலையாக இந்தியாவில் ரூ35 லட்சம் முதல் ரூ80 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகிறது. இதன் வேரியன்டை பொருத்தவரை நின்ஜா எச் 2 ஸ்டாண்டர்டு, நின்ஜா எச்2 கார்பன், டாப் வேரியன்டாக நின்ஜா எச்2 ஆர் என விற்பனையாகிறது.

TTF வாசனை பல ட்ரோல் செய்தாலும் அவர் இணையத்தில் பல ரசிகர்களைச் சம்பாதித்துவிட்டார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. இவர் வீலிங் செய்வது, பைக்கில் வித்தை காட்டுவது, போன்ற விஷயங்களால் சில விபரம் தெரியாத இளைஞர்கள் திசை மாறி செல்லும் அச்சம் இருக்கிறது. அது மட்டும் இல்லை என்றால் TTF பாஷையில் தங்கம் சார் அவரு...


Click it and Unblock the Notifications








