உண்டியல் சேமிப்பை வெள்ள நிவாரணத்துக்கு வழங்கிய அனுப்பிரியாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹீரோ!!
பணம் படைத்த சிலரே, வெள்ள காட்சிகளை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், 4 ஆண்டுகளாக தான் சேமித்து வைத்திருந்த ரூ.9,000 சேமிப்பை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கி எல்லோரையும் நெகிழ வைத்து
கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத மழை வெள்ளத்தால், ஆயிரக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து திக்கற்ற நிலையில் நிர்கதியாகி உள்ளனர். இந்த சூழலில், நாடுமுழுவதும் இருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் குவிந்து வருகின்றன. அதில், சிலரின் உதவிகள் மனிதநேயம் மரித்துப் போகவில்லை என்பதை பரைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

தனது முதுகை படிக்கட்டாக்கி பெண்கள் படகில் ஏறுவதற்கு உதவியவர், உயிரையும் துச்சமென மதித்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீனவ சமுதாய நண்பர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ராணுவத்தினர் என இந்த வரிசை நீள்கிறது.
இந்தநிலையில், வெள்ள நிவாரண நிதி அளிப்பதிலும் நல் உள்ளோம் கொண்டோர் பட்டியல் மனிதநேயத்தை உலகுக்கு பரைசாற்றி வருகிறது. இந்த வரிசையில், எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துள்ளவர் விழுப்புரத்தை சேர்ந்த 8 வயது சிறுமி அனுப்பிரியா.

பணம் படைத்த சிலரே, வெள்ள காட்சிகளை வேடிக்கையாக பார்த்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், 4 ஆண்டுகளாக தான் சேமித்து வைத்திருந்த ரூ.9,000 சேமிப்பை கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கி எல்லோரையும் நெகிழ வைத்துள்ளார் அனுப்பிரியா.

பிறந்தநாளுக்காக சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேர்த்த பணத்தை அடுத்தவர் படும் துயரம் பொறுக்காமல் சட்டென அள்ளிக் கொடுத்து எல்லோர் மனதிலும் நிறைந்துவிட்டார் அனுப்பிரியா.
நாளிதழ்களில் வந்த இந்த செய்தியை எத்திராஜன் சீனிவாசன் என்பவர் ட்விட்டரில் பதிவு செய்தார். இதையடுத்து, அனுப்பிரியாவுக்கு சமூக வலைதளங்களில் அனுப்பிரியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், சமூக வலைத்தளம் மூலமாக அனுப்பிரியாவின் செய்கையை அறிந்த ஹீரோ சைக்கிள் நிறுவனம் நெகிழ்ந்து போய் அவரை பாராட்டி இருக்கிறது. இது விலை மதிப்பில்லாத செயல் என்று புகழாராம் சூட்டி இருக்கிறது. அத்துடன், அனுப்பிரியாவுக்கு புத்தம் புதிய சைக்கிள் ஒன்றையும் பரிசாக அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.

அனுப்பிரியாவின் முகவரி, தொடர்பு விபரங்களை அளிக்குமாறும் ட்விட்டர் மூலமாக வேண்டுகோள் விடுத்துள்ளது. ஹீரோ சைக்கிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்புக்கு சமூக வலைதளத்தில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அனுப்பிரியாவின் இந்த செய்கை வெள்ள நிவாரணம் வழங்குவதை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதுடன், அவரது நல் உள்ளத்துக்கு அடுத்து அவர் ஆசைப்பட்ட சைக்கிளையும் பரிசாக பெறும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications