சில நிமிட சந்தோஷத்துக்காக ரூ.53 ஆயிரத்தை இழந்த பைக் ஓட்டி! ரோட்டில் எல்லா பக்கமும் கேமராக்கள் இருக்கு!
ஆபத்தான பயணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இத்தகைய நிகழ்வுகள் பலவற்றிற்கு முக்கியமான காரணமாக இருப்பது, சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நம்மில் பலரிடத்தில் இல்லாதது ஆகும். இதனால், யாரோ ஒருவர் செய்யும் தவறுக்கு அப்பாவி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். அவ்வாறான ஒரு அஜாக்கிரதையான மற்றும் பார்க்கும் எவரொருவருக்கும் கோபத்தை வரவழைக்கக்கூடிய வகையில் பைக்கை ஓட்டியவரை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். குறிப்பாக, கல்யாணம் ஆகாத சிங்கிள்ஸுக்கு இந்த நிகழ்வு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவின் இதயமாக விளங்கும் டெல்லியை சுற்றியுள்ள நகரங்கள் யாவும் மக்கள் தொகையிலும், பொருளாதாரத்திலும் வேகமாக வளர்ந்து வருகின்றன. இதற்கேற்ப அவர்களது கலாச்சாரமும், பண்பாடும் கூட சேர்ந்து மாறி வருகிறது. குறிப்பாக, இளம் தலைமுறையினர் இணையம் தொடர்பான விஷயங்களிலும், மற்றவர்களது கவனத்தை ஈர்க்கும் விதமான செயல்களிலும் அதிகளவில் ஈடுப்படுகின்றனர்.

அவ்வாறு, இங்கு ஒரு காதல் ஜோடி டெல்லிக்கு அருகே உள்ள உத்தர பிரதேசம் மாநிலத்தின் நொய்டாவில் பைக்கில் இறுக்கமாக கட்டிப்பிடித்தப்படி பரபரப்பான ஹைவேயில் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R) பைக்கில் சென்றுள்ளனர். காதல் ஜோடிகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தப்படி பைக்கில் செல்வது சாதாரணமான ஒன்றுதான்.
ஆனால், இந்த சம்பவத்தில் ஆண் பைக்கை ஓட்ட அவருக்கு நேரெதிராக பெட்ரோல் டேங்கில் அமர்ந்தப்படி இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். இந்த காட்சியை அந்த வழியாக காரில் சென்றவர்கள் படம் பிடித்து இணையத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது. மேலும், போலீசாரின் நடவடிக்கைக்கும் சம்பந்தப்பட்ட எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக் காதலர் சிக்கியுள்ளார்.

மொபைல் போன்களினாலும், இணையத்தின் வளர்ச்சியினாலும் இந்த ஒரு நல்லது நடக்கிறது, அதாவது தவறுகள் பொது இடத்தில் எங்கேனும் நடந்தால் அது உடனுக்குடன் தெரிந்துவிடுகிறது. அவ்வாறு வெளியாகும் வீடியோக்களை கண்காணிக்கவே காவல் துறையிலும் புதிய பிரிவுகள் உள்ளதால், வீடியோக்களை ஆதாரமாக வைத்து பல குற்ற செயல்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், நொய்டாவில் நடைபெற்றுள்ள இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவருக்கும் அதிரடியாக சுமார் ரூ.53 ஆயிரத்து ஐந்நூறு ரூபாயை அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. இத்தகைய செயல்கள் முற்றிலும் ஆபத்தானது ஆகும். ஏனெனில், ஹைவேயில் அதிவேகமாக செல்லும்போது, எங்கேனும் வளைவுகளில் திரும்புகையில் அந்த பெண் கொஞ்சம் சறுக்கினால் இரண்டு பேரும் ஒன்றாக இணைந்து சாலையில் விழ வேண்டியதுதான்.
மேலும், முன்னால் ஒருவர் அமர்ந்திருப்பதால் பைக் ஓட்டியால் சாலையை முழுவதுமாக காண முடியாமல் போகலாம். இதுவும் விபத்துக்கு வழிவகுக்கும். நடுரோட்டில் இந்த அளவுக்கு சாகசத்தை காட்ட தெரிந்தவர்களுக்கு ஹெல்மெட் (Helmet) அணிய வேண்டும் என தெரியவில்லை. இத்தனைக்கும் இந்த ஜோடியிடம் ஒரேயொரு ஹெல்மெட் இருந்துள்ளது.
இருப்பினும், ஆணை இறுக்க கட்டியணைத்து கொள்வதற்கு ஏதுவாக அதனை இந்த பெண் கழற்றி கையில் வைத்துள்ளதை வீடியோவில் காணலாம். இத்தகைய செயல்களினால், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் போன்ற தரமான பைக்கிற்கு தான் கெட்ட பெயர் ஆகும். இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் 125சிசி பைக்குகளுள் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய செயல்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதற்கு இவ்வாறான அதிகப்படியான அபராதங்கள் அவசியமாகின்றன. சில நிமிட சந்தோஷத்திற்காக பைக்கின் விலையில் பாதி விலையை இந்த நபர் அபராதமாக செலுத்த போகிறார். இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள எக்ஸ்ட்ரீம் 125ஆர் ஆனது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் விற்பனை செய்யப்பட்ட லேட்டஸ்ட் 125சிசி பைக் ஆகும். விற்பனையில் இந்த பைக்கிற்கு டிவிஎஸ் ரைடர், பஜாஜ் பல்சர் 125 உள்ளிட்ட பைக்குகள் போட்டியாக உள்ளன.


Click it and Unblock the Notifications