30 வருஷமா உழைச்சவங்களுக்கு இது எல்லாம் சின்ன பரிசு... டிஃபெண்டர் கார் வாங்குறது இப்போ ரொம்ப சாதாரணமாகிடுச்சு!
ஒவ்வொரு ஆண்டின் பண்டிகைக் காலத்திலும், சில தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பங்களிப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்தைப் பாராட்டும் விதமாக பரிசுகளை வழங்குவது உண்டு. அதில் மிகவும் சில நிறுவனங்கள் தனித்துவமான மற்றும் விலையுயர்ந்த பிரம்மாண்டமான பரிசுகளை வழங்கி ஊழியர்களை ஆச்சிரியப்படுத்துவதையும் நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். ஏனெனில், அவ்வாறு வழங்கப்படும் பிரம்மாண்டமான பரிசுகள் பல நேரங்களில் 2-வீலர் அல்லது காராக இருப்பது உண்டு.
பல இலட்ச ரூபாய் மதிப்பிலான கார்களை எல்லாம் பெரிய நிறுவனங்கள் தான் கொடுக்கும் என நினைத்துவிடாதீர்கள், சமீபத்தில் துவங்கப்பட்ட ஸ்டார்ட்அப் (Start-up) நிறுவனங்களும் கொடுத்துள்ள நிகழ்வுகள் நடந்துள்ளன. இருப்பினும், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போவது, கொஞ்சம் அனுபவம் வாய்ந்த தனியார் நிறுவனம்தான். இன்னும் சொல்லப்போனால், நிறுவனம் துவங்கப்பட்டு 30 வருடங்கள் கடந்ததை கொண்டாடும் விதமாகவே தனது ஊழியர்களுக்கு காரை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஹை-லைட் குழுமம் (Hi-Lite Group), மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நன்கு அறியப்பட்ட ஒரு முதன்மையான, பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமாகும். ரியல் எஸ்டேட் (Real Estate), கட்டுமானம், சில்லறை வர்த்தகம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல்வேறு துறைகளில் ஹை-லைட் குழுமம் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
சமீபத்தில், ஹை-லைட் குழுமம் ஒரு சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்து, தங்கள் நிறுவனத்தில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் 47 ஊழியர்களுக்கு புத்தம் புதிய கார்களைப் பரிசாக வழங்கியுள்ளது. இந்த 47 கார்களில் ஒரு விலையுயர்ந்த லேண்ட் ரோவர் டிஃபென்டர் (Land Rover Defender) காரும் இடம்பெற்றது.

அபு ஜோசப் கோட்டாரத்தில் (Apu Joseph Kottarathi) என்பவர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் இதுதொடர்பான காணொலியைப் பகிர்ந்துள்ளார். இந்த காணொலியில், மால் ஒன்றின் வெளியே ஊழியர்களுக்குப் பரிசளிக்க நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கார்களைப் பற்றி விவரிக்கிறார். ஹை-லைட் குழுமம் சமீபத்தில் 30 ஆண்டுகளை நிறைவு செய்தது. குழுமத்தின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு தனிநபரும் சிறந்த முறையில் உழைத்துள்ளனர்.
அதனாலேயே அவர்களுக்கு விலையுயர்ந்த கார்களைப் பரிசளிப்பதன் மூலம் கெளரவிக்க நிறுவனம் முடிவு செய்தது. விழாக் கூடம் வெளியே துணியால் மறைக்கப்பட்ட கார்கள் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர், நிறுவனத்தின் தலைவர் பி.சுலைமான் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அஜில் முகமது ஆகியோர் கட்டிடத்தை விட்டு வெளியே வந்து ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு சாவிகளை வழங்கினர்.
ஹை-லைட் குழுமம் லேண்ட் ரோவர் டிஃபென்டர், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் (Range Rover Sport) மற்றும் பிற சொகுசு கார்களுடன், பல்வேறு பிராண்டுகளின் கார்களையும் பரிசளித்துள்ளது. இதில் டிஃபென்டர் கார், 'வூல்ஸ்டோன் கிரீன் மெட்டாலிக்' (Woolstone Green Metallic) நிறத்தில் உள்ளது. இந்த நிறத்தில் கேரளாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ள முதல் டிஃபென்டர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரேஞ்ச் ரோவர் மற்றும் லேண்ட் ரோவருடன், ஆடி (Audi), ஹூண்டாய் (Hyundai), கியா (Kia), டொயோட்டா (Toyota), மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) போன்ற பலதரப்பட்ட பிராண்டுகளின் கார்களை இங்கே காண முடிகிறது. இந்த 47 கார்களை ஊழியர்களுக்குப் பரிசாக வாங்குவதற்காக மட்டும் 10 கோடி ரூபாய்க்கு மேல் ஹை-லைட் குழுமம் செலவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த மூன்று தசாப்த காலப் பயணத்தில், ஊழியர்கள் மிக முக்கியப் பங்காற்றியதாக இந்த நிறுவனம் கருதுகிறது. உண்மையில், ஹை-லைட் குழுமம் தங்கள் ஊழியர்களை வெறும் பணியாளர்களாக இல்லாமல், குடும்ப உறுப்பினர்களாகவே கருதுகிறது. பொதுவாக, இதுபோன்ற நிகழ்வுகளில், நிறுவனங்கள் ஒரே பிராண்டைச் சேர்ந்த, பெரும்பாலும் வெகுஜன சந்தை கார்களையே பரிசளிப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஹை-லைட் குழுமம் சற்று வித்தியாசமாக ஊழியர்களின் தகுதிகளை பொறுத்து அவர்களுக்கான காரை வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








