கிரேன் வச்சு சீஸ் பண்ண காரை எல்லாம் ஓனர் கிட்டையே குடுத்திருங்க! ஆனா தீர்ப்பில் ஒரு டிவிஸ்ட் வைத்த கோர்ட்!
டில்லியில் போலீசார் பறிமுதல் செய்த வயதான கார்களை மீண்டும் அதன் உரிமையாளர்களிடமே ஒப்படைக்க டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி அரசு வயதான கார்களை பயன்படுத்த தடை விதித்து அதை பறிமுதல் செய்து எடுத்த நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
டில்லியில் அதிகமான காற்று மாசு ஏற்படுகிறது. இதற்கு அப்பகுதியில் பயன்படுத்தப்படும் தகுதியில்லாத வாகனங்கள் உமிழும் மாசு முக்கியமான காரணமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்நிலையில் டில்லி அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 15 ஆண்டுகளுக்கு பழைய பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு பழைய டீசல் வாகனங்களை டில்லி பகுதியில் பயன்படுத்த தடை விதித்தது.

இந்த வாகனங்கள் எல்லாம் அதிகமான மாசுவை உமிழ்வதால் டெல்லியில் மிகப்பெரிய காற்று மாசு பிரச்சினை ஏற்பட்டு வருவதாக கூறி டில்லி அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. இப்படியாக பழைய கார்களை வைத்திருக்கும் நபர்கள் அதை டெல்லி நகருக்குள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது மட்டுமல்லாமல் டெல்லி அரசு இதில் ஒரு படி மேலே போய் சாலையில் நிற்கும் பழைய வயதான கார்களை எல்லாம் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் இறங்கியது.
பழைய கார்கள் மீதான அரசு தடையை மீறியும் சிலர் அதை சாலைகளில் பயன்படுத்தி வந்ததால் அதை தடுக்க இவ்வாறான நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி பார்க்கிங் இல்லாமல் ரோட்டில் காரை நிறுத்தி வைத்திருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இந்த பழைய கார்களை குறி வைத்து டில்லி அரசு பறிமுதல் செய்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று கொடுக்கப்பட்டது அதன்படி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு பொருளை வாங்குவதற்கான உரிமை மக்களுக்கு இருப்பதாகவும் அந்த அடிப்படை சட்டத்தை மீறும் விதமாக வாகனங்களை பறிமுதல் செய்து டில்லி அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் இதனால் வாகனங்களை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு புதிய வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி பாத்ரீக் ஜலான் என்பவர் விசாரித்தார். இந்த வழக்கில் அவர் முக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதன்படி டில்லியில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் அனைத்தையும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் இப்படியாக உரிமையாளர்களின் ஒப்படைக்கும் போது அதை சாதாரணமாக ஒப்படைக்க கூடாது என்றும் இதற்கு சில நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்கள், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள் ஆகியவை டெல்லி பகுதியில் மட்டும்தான் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் டில்லி வெளிப்புறப் பகுதியில் பயன்படுத்த இதற்கு தடை இல்லை. இதனால் டில்லி வெளிப்புறப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஒருவேளை டில்லியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் அதையும் உரிமையாளர்கள் தான் ஒப்படைக்க வேண்டும் ஆனால் அதற்கு உரிமையாளர்கள் இரண்டு விதமான சான்றுகளை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ஒன்று இந்த வாகனத்தை நிறுத்துவதற்கு சொந்தமாக ஒரு பார்க்கிங் இருப்பதற்கான சான்றை உரிமையாளர்கள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இப்படியாக பாக்கிங் செய்ய இடம் இருக்கும் வாகனங்களை உரிய உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சொந்தமாக பார்க்கிங் வைத்து வாகனங்களை திரும்பப்பெறும் உரிமையாளர்கள் அதை எக்காரணத்தை கொண்டும் டில்லி பகுதியில் பயன்படுத்தக் கூடாது. சாலையில் இறக்கி ஓட்டக்கூடாது, ஓட்டினால் மீண்டும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் பார்க்கிங் வசதி இல்லாத வாகன உரிமையாளர்களுக்கும் ஒரு ஆப்ஷன் ஒன்றை வழங்கி உள்ளது.
அதன்படி அவர்கள் தங்கள் வாகனத்தை டில்லியிலிருந்து பதிவு நீக்கம் செய்து வேறு ஒரு மாநிலத்தில் பதிவு செய்ய விரும்பினால் டில்லியில் இருந்து பதிவு நீக்கம் செய்து அதற்கான தடையின்மை சான்று பெற்று அதை ஒப்படைத்தால் அந்த வாகனத்தை குறிப்பிட்ட உரிமையாளரிடம் டில்லி அரசு ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எக்காரணம் கொண்டும் டெல்லியில் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படாது என்பதால் இந்த உத்தரவை டில்லி உயர்நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ளது.டில்லியில் இதனால் காற்று மாசு பிரச்சனை ஏற்படாது என்பதால் இந்த மாதிரியான உத்தரவை தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது கார் உரிமையாளர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெல்லியில் காற்று மாசு என்பது மிகப்பெரிய அபாயமான நிலையில் இருக்கிறது. இதனால் இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் டில்லி அரசு இருக்கிறது. அதனால் தான் பழைய வாகனங்கள் மீது டில்லி அரசு மிக கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் இந்த உத்தரவு பறிமுதல் செய்யப்பட்ட கார் ஓனர்களுக்கு சற்று மன நிம்மதியை அளித்திருக்கும்.


Click it and Unblock the Notifications
