ரோடு பார்ப்பதற்கு ரெண்டும் ஒரே மாதிரி இருக்கும், ஆனா வேற வேற!! லாங் டிரிப் பிளான் போட்டு இருக்கீங்களா?
ஹைவே (Highway) என்ற வார்த்தையை நம் அன்றாட வாழ்வில் அவ்வப்போது பயன்படுத்துகிறோம். ஆனால், எக்ஸ்பிரஸ்வே (Expressway) என்ற வார்த்தையை சமீப காலமாக தான் அதிகமாக கேள்விப்பட்டு வருகிறோம். எக்ஸ்பிரஸ்வே என்றால் என்ன? ஹைவே - எக்ஸ்பிரஸ்வே இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம்? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
ஹைவே என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நெடுஞ்சாலைகளிலும், எக்ஸ்பிரஸ்வே எனப்படும் விரைவுச்சாலைகளிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே பாதைகள் வகுக்கப்பட்டு வாகனங்கள் அனுமதிப்படுகின்றன. சாதாரண சாலைகளில் இருந்து ஹைவே மற்றும் எக்ஸ்பிரஸ்வே இரண்டும் ஒரே விதமாகவே பிரிக்கப்படுகின்றன.

இருப்பினும், இவை இரண்டிற்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. இதில் முக்கியமானது அனுமதிக்கப்படும் வேகம் ஆகும். நெடுஞ்சாலைகளை காட்டிலும் விரைவுச்சாலைகளில் கூடுதல் வேகம் அனுமதிக்கப்படுகிறது. இதற்கு ஏற்றவாறே விரைவுச்சாலைகள் வடிவமைக்கப்படுகின்றன. இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலைகளில் 110kmph வேகம் வரையில் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கப்படுகிறது.
அதுவே, விரைவுச்சாலைகளில் 120kmph வேகம் வரையில் செல்லலாம் என 2018இல் மத்திய சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் வேக வரம்பு வேறுப்படும். அதாவது, ஒரு சில இடங்களில் நெடுஞ்சாலையில் 2-லேன் மட்டுமே இருக்கும். ஆனால், சில இடங்களில் 3-லேன் இருக்கும். லேன்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 2-லேன் ஹைவேயில் வேக வரம்பு சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

ஆதலால், 110kmph வேகம் ஆனது 3-லேன் ஹைவேயில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆனால், எக்ஸ்பிரஸ்வே முழுக்க அதிவிரைவான போக்குவரத்தை மனதில் வைத்து வடிவமைக்கப்படுவதால், இதில் இந்த ஸ்பீடு லிமிட் வேறுப்பாடு எதுவும் கிடையாது. ஸ்பீடு லிமிட்டுக்கு அடுத்து ஹைவே & எக்ஸ்பிரஸ்வே இவை இரண்டும் எங்கே வேறுப்படுகின்றன என்றால்... டிராஃபிக் சிக்னல்களில் ஆகும்.
நீங்கள் கூகுள் மேப்பில் எக்ஸ்பிரஸ்வே-ஐ பார்த்தாலே தெரியும், பெரியதாக எந்தவொரு வளைவுகளும் இன்றி ஒரே நேர்க்கோடாக விரைவுச்சாலைகள் போடப்பட்டிருக்கும். தடையில்லா வேகமான பயணத்துக்காக எக்ஸ்பிரஸ்வே இவ்வாறு வடிவமைக்கப்படுகிறது. ஆனால், ஹைவேயில் நிறைய இடங்களில் வளைவுகளை காண முடியும். இந்த வளைவுகளில் திரும்பும்போது வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டியதாகிறது.

அதேபோல், ஹைவேயில் அடிக்கடி டிராஃபிக் சிக்னல்கள் வருவதை காண முடியும். ஆனால், சுரங்கங்கள் மற்றும் மேம்பாலங்கள் மூலமாக எக்ஸ்பிரஸ்வேயில் டிராஃபிக் சிக்னல்கள் தவிர்க்கப்படுகின்றன. இதனால்தான், பிசியான நகரத்துக்குள் செல்லும் விரைவுச்சாலைகளில் கூட வேகமாக செல்ல முடிகிறது. ஏனெனில், நகரத்துக்குள் சென்றாலும், மற்ற சாலைகள் உடனான எக்ஸ்பிரஸ்வேயின் தொடர்பு குறைவாகவே இருக்கிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நெடுஞ்சாலைகள் பழைய போக்குவரத்து நடைமுறையை பின்பற்றுபவை. ஆனால், எக்ஸ்பிரஸ்வே அதிவிரைவான, அதேநேரம் பாதுகாப்பான போக்குவரத்தை பயன்படுத்துபவை ஆகும். வேகமான பயணம் ஆபத்தானவை என்கிற கருத்தை விரைவுச்சாலைகள் நீர்த்துப்போக செய்கின்றன. ஆதலால், எதிர்காலத்தில் நெடுந்தூர போக்குவரத்து ஆனது விரைவுச்சாலைகளை சார்ந்தே இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொழிற்நுட்பங்களின் உதவியுடன், மாடர்ன் டிசைனில் எக்ஸ்பிரஸ்வே வடிவமைக்கப்படுவதால் சாலை விபத்துகளை குறைக்க முடியும். இதன் காரணமாகவே, நெடுஞ்சாலைகளை காட்டிலும், விரைவுச்சாலைகள் விஷயத்தில் நம் மத்திய அரசு கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேநேரம், பயன்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைகளையும் பேணி பராமரிக்க வேண்டியதும் அவசியமாகும்.


Click it and Unblock the Notifications









