வட இந்தியாவே இந்த போராட்டத்தில் பத்தி எரியுது! லாரி டிரைவர்கள் ஏன் கொந்தளிக்கின்றனர்?
இந்தியா முழுவதும் மத்திய அரசு கொண்டுவரப்போகும் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் செய்து வந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் இருந்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. என்ன சட்டத்திற்கு இப்படி லாரி ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தினார்கள் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கடந்த இரண்டு நாட்களாக வட இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வந்தது லாரி ஓட்டுனர்களின் போராட்டம் தான். இந்தியா முழுவதும் இயங்கி வரும் பல லாரி ஓட்டுநர்கள் மத்தியரசு கொண்டு வரப்போகும் ஹிட் அண்ட் ரன் குற்றத்திற்கான தண்டனையை அதிகரிப்பதற்கான சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டு வந்தனர். இதனால் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது சரக்கு போக்குவரத்துக்கள் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது.

இதனால் பலர் திண்டாடிய நிலையில் மத்திய அரசு இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கு முன் போக்குவரத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் என அறிவித்தது. இதனால் தற்போது லாரி ஓட்டுநர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் தங்கள் பணிகளை துவங்கியுள்ளனர். இப்படியாக லாரி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அளவிற்கு என்ன சட்டம் அது? என்ற விபரங்களை தான் இனிமே இங்கே காணப் போகிறோம்.
இந்திய சட்டத்தின் படி சில குற்றங்களுக்கான தண்டனை மற்றும் அபராதங்கள் மிகக் குறைவாக இருப்பதால் மக்கள் மத்தியில் இந்த குற்றங்கள் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இதனால் ஏற்படும் பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கிறது என்பதால் இப்படியான குற்றங்களை கண்டறிந்து அதற்கான தண்டனைகள் மற்றும் அபராதங்களை அதிகப்படுத்தும் வகையில் மத்திய அரசு பாரத நியாய சன்ஹிதா என்ற புதிய சட்டம் ஒன்றை அமலுக்கு கொண்டு வந்தது.

இந்த சட்டத்தின்படி போக்குவரத்து துறையில் மிக முக்கியமாக சாலையில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களுக்கான தண்டனை என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சாலையில் விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என சட்டத்தில் இடம் இருக்கிறது.
ஆனால் இந்த புதிய பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் படி இந்த குற்றத்திற்கான தண்டனை 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ7 லட்சம் வரையிலான அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது. இது நாடு முழுவதும் உள்ள லாரி ஓட்டுனர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வடமாநில லாரி ஓட்டுனர்கள் பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த சட்டத்தால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

சாலையில் விபத்து ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நடக்கும் ஒரு விஷயம் தான். ஆனால் சாலையில் செல்லும்போது ஒரு கனரக வாகன ஓட்டுனர் விபத்து ஏற்படுத்திவிட்டால் அவர் அப்பகுதியில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவரை பிடித்து அடித்து அவரது உயிர் போகும் வரை கூட அவரை காயப்படுத்துகிறார்கள்.
இதற்கு பயந்தே பல கனரக வாகன ஓட்டுனர்கள் சாலையில் விபத்து ஏற்பட்டு விட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாமல் தங்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். தற்போது அதற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இந்த குற்றத்திற்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூபாய் 7 லட்சம் வரை அபராதம் என்ற புதிய சட்டம் ஓட்டுநர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மத்திய அரசு தரப்பில் இருந்து சாலையில் வாகன விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். இவர்கள் எல்லாம் போதிய நேரத்தில் உதவி கிடைக்காத காரணத்தால் உயிரிழந்தவர்கள். சாலையில் விபத்தை ஏற்படுத்தியவர்கள் தங்கள் வாகனத்தை நிறுத்தி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்திருந்தால் அவர்கள் உயிரெல்லாம் காப்பாற்றப்பட்டிருக்கும்.
இதனால் எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்களை தவிர்க்கவே மத்திய அரசு இந்த சட்டத்தை கடுமையாக்கி இவ்வாறாக உதவி செய்யாமல் செல்லும் ஓட்டுனர்களுக்கு அதிகமான தண்டனைகளை வழங்க முடிவு செய்து இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சட்டத்திற்கு பின்னால் இப்படி ஒரு பிரச்சனை ஒட்டுநர்களுக்கு இருக்கும் என்ற செய்தி யாருக்கும் தெரியவில்லை.
இந்த சட்டத்தை புரிந்து கொண்டு லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், மத்திய அரசு தரப்பில் இருந்து இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கு முன் போக்குவரத்து சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும் என அறிவித்துள்ள நிலையில் தற்போது லாரி ஓட்டுநர்கள் இந்த வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரு உயிருக்கு என்று விலை நிர்ணயம் செய்யவே முடியாது. இதனால் சாலை விபத்தில் சிக்கும் நபர்களுக்கு உரிய நேரத்தில் உரிய உதவி கிடைக்க மத்திய அரசு இப்படியான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என ஒரு பக்கம் நினைத்தாலும் மற்றொரு பக்கம் லாரி ஓட்டுனர்களின் கோரிக்கையும் நியாயமானதாக இருக்கிறது. இதற்கு இரு தரப்பும் பேசி ஒரு நல்ல முடிவை கொண்டு வருவது தான் சிறந்த வழியாகும்.


Click it and Unblock the Notifications









