போலீசாருக்கு எம்.எல்.ஏ வாங்கி கொடுத்த பைக்கை பார்த்து மிரண்டு போன இணையவாசிகள்! ரூ.25 லட்சத்தை செலவழிச்சாச்சு!
குற்றவாளிகளை பிடிக்க வேண்டுமெனில், அவர்களை காட்டிலும் போலீசார் ஒருபடி முன்னோக்கி இருக்க வேண்டியதாக உள்ளது. இதனாலேயே போலீசாரும் அதிவேகத்தில் இயங்கக்கூடிய கார் & பைக்குகளை பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. துபாய், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் எல்லாம் லம்போர்கினி (Lamborghini), ஃபெராரி (Ferrari) கார்களை பயன்படுத்தக்கூடிய போலீசார்காரர்களை கூட சர்வ சாதாரணமாக பார்க்க முடியும்.
ஆனால், நம்ம ஊர் போலீசார் இன்னமும் மாருதி (Maruti), ஹூண்டாய் (Hyundai) கார்களில் தான் ரோந்து பணிகளில் உலா வந்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது என்றாலும், இந்த மாற்றத்தை விரைவாக கொண்டுவர இங்கு ஒருவர் எடுத்த முயற்சி பெரிதும் பேசும் பொருளாகி இருப்பதுடன், அதுவே கடைசியில் அவருக்கு பிரச்சனையாக அமைந்துள்ளது.

இதுதொடர்பான தகவல்கள் பெலகவி செய்திகள் என்கிற எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் நபர் சாதாரணமான ஆள் கிடையாது, ஒரு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ (MLA) ஆவார். கர்நாடகா மாநிலத்தின் பெலாகவி வடக்கு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக இருப்பவர் ஆசிஃப் சயித் (Asif Sait) ஆவார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் கர்நாடகாவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை சேர்த்தவர்களுள் இவரும் ஒருவராவார். அவ்வப்போது எதாவது சர்ச்சைக்குரிய வகையில் பேசி இணையத்தில் வைரலாகக்கூடிய ஆசிஃப் சயித், சமீபத்தில் செய்த காரியம் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை அளவிற்கு சென்றுள்ளது.

அப்படி ஆசிஃப் சயித் என்ன செய்தார் என்றால், தனது சட்டமன்ற தொகுதிக்கு மாநில அரசாங்கம் சார்பில் ஒதுக்கப்பட்ட மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சத்தை செலவழித்து 13 போலீஸ்காரர்களுக்கு மோட்டார்சைக்கிள்களை வாங்கி கொடுத்துள்ளார். சமுதாயத்திற்கு நல்லதுதானே செய்துள்ளார் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவர் போலீசாருக்கு வாங்கிக் கொடுத்த பைக் மாடல் தான் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
போலீசாருக்கு எம்.எல்.ஏ ஆசிஃப் சயித் ரோந்து பணிகளுக்காக வாங்கி கொடுத்திருப்பது, ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனத்தின் சிபி350 (CB350) மோட்டார்சைக்கிள் ஆகும். ஹோண்டா சிபி350 பைக் ஒன்றின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) தற்சமயம் ரூ.2.15 லட்சமாக உள்ளது. இது சிபி350 பைக்கின் டீலக்ஸ் (DLX) வேரியண்ட்டின் விலை ஆகும்.

டீலக்ஸ் புரோ (DLX Pro) வேரியண்ட்டின் விலை ரூ.2.18 லட்சமாக உள்ளது. மேலும் இங்கே நாங்கள் குறிப்பிட்டுள்ளவை பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பைக்கின் ஆன்-ரோடு விலைகள் (On-road Prices) இன்னும் சில பத்தாயிர ரூபாய்கள் அதிகமாக வரும். அதாவது, ஹோண்டா சிபி350 பைக்கின் ஆன்-ரோடு விலை ஏறக்குறைய ரூ.3 லட்சம் அளவிற்கு வந்துவிடும்.
இவ்வளவு விலையுயர்ந்த ஹோண்டா பைக்கை போலீசாருக்கு எம்.எல்.ஏ ஆசிஃப் சயித் வாங்கிக் கொடுத்திருப்பதினாலேயே இதற்கு இணையத்தில் நெட்டிசன்கள் (Netizens) பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து உள்ளனர். போலீசாருக்கு 100சிசி அல்லது 125சிசி பைக்கை வாங்கிக் கொடுத்து, மீதி பணத்தை பள்ளிக்கூடம், சாலைகள் போன்ற உள்கட்டமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்பதே பலரது குமுறலாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா சிபி350 பைக்கையே நம்மில் பலர் விலையுயர்ந்த பைக்காக நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது கர்நாடக எம்.எல்.ஏ ஆசிஃப் சயித்தின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் தெரிவித்து வரும் கமெண்ட்கள் மீண்டும் ஒருமுறை உறுதி செய்கின்றன. ஆனால், சிபி350 பைக்கை காட்டிலும் விலையுயர்ந்த & பவர்ஃபுல்லான பைக்குகளும் உள்ளன; அவற்றை வெளிநாட்டு போலீசார் பயன்படுத்தி வருகின்றனர் என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியவில்லை. காலத்திற்கு ஏற்ப மாறிவரும் குற்றவாளிகளை பிடிக்க, அவர்களுக்கு இணையாக போலீசாரும் அட்வான்ஸாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.


Click it and Unblock the Notifications









