“ஆள விடுங்கப்பா சாமி...” பாகிஸ்தானில் தொழிற்சாலையை மூடும் பிரபல கார் நிறுவனம் - எதிர்பார்த்ததுதான்!!
பாகிஸ்தானில் உலகளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தொழிற்சாலையை மூடுகிறது. எந்த கார் தயாரிப்பு நிறுவனம் அது? ஏன் இந்த நடவடிக்கையை அந்த நிறுவனம் கையில் எடுத்துள்ளது? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
பொருளாதார நெருக்கடி நம் அண்டை நாடுகளில் சமீப காலமாக அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி சூழலை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். கிட்டத்தட்ட அதேபோன்றதான சூழல் தான் நமது மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானில் நிலவி வருகிறது. பாகிஸ்தான் அரசு தனது பொருளாதார வரலாற்றில் சில முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக, சிகேடி எனப்படும் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதிலும், இரும்பு, எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்டவற்றின் இறக்குமதியிலும் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ள பாகிஸ்தான் அரசாங்கம் வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைகளில் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இது பாகிஸ்தானில் பல்வேறு வெளிநாட்டு தனியார் நிறுவனங்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதித்துள்ளது. அத்தகைய நிறுவனங்களுள் ஒன்றுதான் ஹோண்டா.
ஜப்பானை சேர்ந்த பழமையான கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, பாகிஸ்தானில் ஹோண்டா அட்லாஸ் கார்ஸ் என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த மார்ச் 8ஆம் தேதி அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. அந்த அறிக்கையில், மேலும் தொடர முடியாத காரணத்தால் பாகிஸ்தானில் தொழிற்சாலையில் உற்பத்தி பணிகளை நிறுத்தி கொள்ள உள்ளதாகவும், இதன்படி இந்த மார்ச் மாதம் முழுவதும் (மார்ச் 31) தொழிற்சாலை மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ள இந்த அறிக்கையில், நிறுவனத்தின் விநியோக சங்கிலி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்வதாக ஹோண்டா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி பாகிஸ்தானில் லாகூர் நகரத்தில் உள்ள ஹோண்டா அட்லாஸ் கார் தொழிற்சாலை 2023 மார்ச் 9 முதல் மார்ச் 31 வரையில் மூடப்படுகிறது.
பாகிஸ்தானில் பொருளாதார வளர்ச்சி ஆனது மிகவும் மெதுவாகவே நிகழ்ந்து வருகிறது. இதற்கிடையில் தற்போதைய சூழலில் ஆட்டோமொபைல் பாகங்களை வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானில் இறக்குமதி செய்வது செலவு மிகுந்ததாக உள்ளது. இதில் ஹோண்டா மட்டுமின்றி பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிக்கி தவித்து வருகின்றன. இதன் விளைவாக பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

அதில் சில நிறுவனங்கள் நிரந்தரமாக தனது தொழிற்சாலையை மூடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவலினாலும், உலகளவில் குறைக்கடத்திகளுக்கு ஏற்பட்ட பற்றாக்குறை உள்ளிட்ட சில காரணங்களினாலும் நமது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டன; பொருளாதாரம் பெரிதும் சரிந்தது. ஆனால் பாகிஸ்தானில் மட்டும் அதே நிலை நாட்டின் பொருளாதாரத்தில் தொடர்வது போல் உள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் கூக்குரலிட்டு வருகின்றன.
ஹோண்டா அட்லாஸ் கார் நிறுவனத்திற்கு முன்னதாகவே டொயோட்டா மோட்டார்ஸ், பாகிஸ்தான் சுஸுகி என சில ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்தி பணிகள் பாகிஸ்தானில் நிறுத்தி கொள்ளப்பட்டு விட்டன. இவ்வாறு உற்பத்தி பணிகள் நிறுத்தப்படுவதாலும், சிகேடி பாகங்களுக்கு அதிக செலவாகுவதாலும் அந்த நாட்டில் கார்களின் விலைகள் கிடுகிடுவென சமீப காலத்தில் உயர்ந்துள்ளன. இதன் விளைவாக பாகிஸ்தானில் ஆட்டோமொபைல் வாகனங்கள் விற்பனை ஆனது பெரிய அளவில் குறைந்துள்ளது.


Click it and Unblock the Notifications