பக்கத்து சிட்டிக்கு கூட விமானத்தில் சென்றுவர தயாராகுங்க! இந்த ஒரேயொரு கையெழுத்து மொத்தமா மாற்ற போகுது!
இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த பி.ஜே.எஸ்.சி- யூ.ஏ.சி (PJSC-UAC) ஆகிய நிறுவனங்களுக்கு இடையேயான புதிய கூட்டணி, இந்தியாவின் உள்நாட்டு விமான உற்பத்தித் துறையையும், மக்களின் விமான பயன்பாட்டையும் வெகுவாக வலுப்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், மக்கள் பயன்பாட்டிற்கான பயணிகள் விமானங்கள் முதல்முறையாக இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
இது நாட்டின் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதோடு, இந்தியாவை உலகளாவிய விமானத் துறையின் மதிப்புச் சங்கிலியில் இணைப்பதன் மூலம் இந்திய விமானப் போக்குவரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க உள்ளது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதி ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் கையெழுத்தான இந்த கூட்டணியின் முக்கிய நோக்கம், இந்தியாவில் எஸ்.ஜே-100 (SJ-100) சிவில் பயணிகள் விமானங்களை கூட்டாகத் தயாரிப்பதாகும்.

இது இரட்டை என்ஜின் கொண்ட, குறுகிய உடல் அளவு கொண்ட ஒரு ஜெட் விமானம் ஆகும். குறுகிய தூரப் பயணங்களுக்காக வடிவமைக்கப்பட்டு, பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த விமானங்களில் பயணத்திற்கான கட்டணம் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், குறுகிய தூரப் பயணங்களுக்கு எஸ்.ஜே-100 விமானம், ஒரு "கேம் சேஞ்சர்" ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், இது மத்திய அரசாங்கத்தின் உடான் (UDAN - Ude Desh ka Aam Nagrik) திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டத்தின் நோக்கம், நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு விமானப் போக்குவரத்தை மலிவாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுவது ஆகும். இந்திய விமானப் போக்குவரத்துத் துறைக்கு அடுத்த பத்தாண்டுகளில் உள்நாட்டு இணைப்பிற்காக 200-க்கும் மேற்பட்ட பிராந்திய ஜெட் விமானங்களும், இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு 350 விமானங்களும் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக விலையுள்ள வெளிநாட்டு இறக்குமதியைச் சார்ந்திராமல், இந்தத் தேவையை உள்நாட்டு உற்பத்தி பூர்த்தி செய்ய உதவும். தற்போது இணைப்பில் இல்லாத சிறிய நகரங்களுக்கு புதிய வழித்தடங்களை உருவாக்குவதன் மூலம், இந்தத் திட்டம் இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்களுக்கு விமானப் பயண வசதியை எளிதாக்கும். இவ்வாறு, சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியாவின் "ஆத்மநிர்பர் பாரத்" (தற்சார்பு இந்தியா) முயற்சிக்கு இந்த இந்திய-ரஷ்ய கூட்டணி ஒரு முக்கிய படியாகும்.
1988ஆம் ஆண்டில் அவ்ரோ எச்.எஸ்-748 (Avro HS-748) திட்டம் முடிந்த பிறகு, முதல்முறையாக ஒரு முழுமையான பயணிகள் விமானம் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து தொழில்நுட்பப் பரிமாற்றங்கள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். விமானக் கட்டமைப்பு வடிவமைப்பு, சிஸ்டம் ஒருங்கிணைப்பு மற்றும் கலப்புப் பொருட்கள் பயன்பாடு குறித்த அறிவு போன்றவை இந்திய பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தும்.

உதிரிபாகங்கள் மற்றும் துணை-அசெம்பிளிகளுக்கான உள்ளூர் சப்ளையர்களின் ஒரு வலுவான சங்கிலியை இந்தத் திட்டம் வளர்க்கும். இது தனியார் துறை பங்களிப்பை ஈர்த்து, விமான உற்பத்தி சார்ந்த துணைத் தொழில்களை மேம்படுத்தும். விமானப் பயணத்தைத் தாண்டி, இந்த கூட்டணி முக்கியமாக நாட்டிற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகளை வழங்கக்கூடியது ஆகும்.
விமான உற்பத்தி வசதிகள், பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு (MRO) மையங்கள் உடன் உள்நாட்டில் சப்ளை செயினை உருவாக்குவது ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கும். இந்தியாவில் எஸ்.ஜே-100 விமானங்களைத் தயாரிப்பது, விமான உற்பத்தியில் இந்தியாவை ஒரு பிராந்திய மையமாக எதிர்காலத்தில் முன் நிறுத்தலாம். இது மற்ற ஆசிய மற்றும் ஆப்பிரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.

எஸ்ஜே-100 ஒரு இரட்டை என்ஜின் கொண்ட, குறுகிய உடல் கொண்ட விமானம் என்பதை ஏற்கனவே கூறிவிட்டோம். பொதுவாக, 87 முதல் 108 பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட இந்த வகை விமானங்களின் அடிப்படை மாடல் அதிகப்பட்சமாக சுமார் 3,048 கிமீ தூரம் வரை பறக்கும். அதுவே, விரிவுபடுத்தப்பட்ட தூரம் கொண்ட பதிப்பு சுமார் 4,578 கிமீ தூரம் வரை செல்லும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த முயற்சி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தனது முக்கிய கவனம் தற்காப்பு உபகரண உற்பத்தியில் இருந்து வணிக விமானப் போக்குவரத்திற்கு மாறுவதற்கு உதவுகிறது. இதன் மூலம், அதன் தற்போதைய விமான அனுபவத்தைப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த இந்திய- ரஷ்ய கூட்டணியினால், எதிர்காலத்தில் குறுகிய தூர பயணங்களையும் நாம் விமானங்களில் மேற்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.


Click it and Unblock the Notifications









