எப்படா இறங்குவோம்னு ஆயிரும்! அதிக லாபத்திற்காக இப்படி எல்லாம் பண்றாங்களா? விமானத்தில் பறக்கற ஆசையே போயிருச்சு!
அதிக லாபம் ஈட்டுவதற்காக விமான நிறுவனங்கள் செய்யும் காரியங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமான நிறுவனங்கள் டிக்கெட் விற்பனை மூலம் பணம் சம்பாதிக்கின்றன. அத்துடன் சரக்கு போக்குவரத்தை கையாள்வதன் மூலமும் விமான நிறுவனங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. இதுதவிர அதிக லாபம் ஈட்டுவதற்காக விமான நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளையும் பின்பற்றுகின்றன. பலருக்கும் தெரியாத விமான நிறுவனங்களின் இந்த யுக்திகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

எந்தெந்த வழிகளில் எல்லாம் லாபம் சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளனவோ, அந்த வழிகளை எல்லாம் விமான நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. அதிக லக்கேஜிற்கு பணம் வசூலிப்பது இதில் ஒன்று. ஒரு பயணி இவ்வளவு எடையில்தான் லக்கேஜ்களை கொண்டு வர வேண்டும் என விமான நிறுவனங்கள் நிர்ணயம் செய்திருக்கின்றன.

விமான நிறுவனங்கள் நிர்ணயித்திருக்கும் எடையை விட, அதிக எடையில் லக்கேஜ்களை கொண்டு வரும் பயணிகள், கூடுதல் தொகையை செலுத்த வேண்டும். அதேபோல் முன்பெல்லாம் இலவசமாக குறிப்பிட்ட உணவு மற்றும் பானங்களை பயணிகளுக்கு இலவசமாக வழங்கி வந்த ஒரு சில விமான நிறுவனங்கள் தற்போது அந்த சேவைகளை நிறுத்தியுள்ளன.

எனவே உணவு மற்றும் பானங்களை தற்போது பயணிகள் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதேபோல் நெருக்கடியான இருக்கைகள் மூலமும் விமான நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. அதாவது சிறிய அளவில் கூட இடவசதி இல்லாத வகையில் விமானங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த இருக்கைகளில் பயணிகளால் சௌகரியமாக அமர்ந்து பயணம் செய்ய முடியாது.

விமானங்களில் பயணம் செய்ய வேண்டும் என்ற கனவு உங்களுக்கு இருக்கலாம். ஆனால் விமானங்களில் அடிக்கடி பயணம் செய்பவர்களிடம் கேட்டு பாருங்கள். நெருக்கடியான இருக்கைகள் குறித்து புலம்பி தள்ளுவார்கள். விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசையே உங்களிடம் இருந்து போய் விடக்கூடிய அளவிற்கு அவர்களின் புலம்பல் இருக்கும்.

அதிக பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்ற விமான நிறுவனங்களின் எண்ணமே இந்த நெருக்கடியான இருக்கை வடிவமைப்பிற்கு காரணம். அதேபோல் முன்பெல்லாம் தொலைதூர விமானங்களில் பயணிகள் நிம்மதியாக தூங்குவதற்கு போர்வைகள் மற்றும் தலையணைகள் இலவசமாகவே வழங்கப்பட்டு வந்தன. ஆனால் அந்த சேவைகளை தற்போது பல்வேறு நிறுவனங்களும் நிறுத்தி விட்டன.

அதற்கு பதிலாக போர்வைகள் மற்றும் தலையணைகளுக்கு அவை கட்டணம் வசூலிக்க தொடங்கி விட்டன. எனவே நீங்கள் நிம்மதியாக தூங்க வேண்டுமென்றால் அதற்கும் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல் பண்டிகை காலங்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில், டிக்கெட் விலையை விமான நிறுவனங்கள் வெகுவாக உயர்த்தி விடுகின்றன.

தொடர்ச்சியாக அதிக நாட்கள் விடுமுறை வருகிறது என்றாலும் விமான டிக்கெட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து விடும். எனவே இந்த நாட்களில் பிரீமியம் விலையில்தான் நீங்கள் விமான டிக்கெட்களை வாங்க வேண்டும். இது விமான நிறுவனங்களுக்கு அதிக லாபத்தை அள்ளி தரக்கூடிய மிகவும் எளிமையான வழிமுறையாகும்.

விடுமுறை நாட்களில் கட்டணத்தை உயர்த்தும் அதே சமயம், கடைசி நிமிடத்தில் காலியாக இருக்க கூடிய இருக்கைகளுக்கு விமான நிறுவனங்கள் தள்ளுபடிகளை வழங்குகின்றன. இதன் மூலம் ஒரு இருக்கை கூட காலியாக இல்லாமல் இருப்பதற்கு விமான நிறுவனங்கள் முயற்சி செய்கின்றன. அதேபோல் விமானத்தில் பொழுதுபோக்கு வசதிகளையும் பல்வேறு நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.

விமானங்களில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக ஒரு சில வசதிகள் இருக்கும். ஒவ்வொரு இருக்கைக்கும் இந்த பொழுதுபோக்கு வசதிகளை வழங்கினால், விமானத்தின் எடை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து விடும். இதன் காரணமாக விமானங்கள் அதிக எரிபொருளை பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகும். எனவேதான் பொழுதுபோக்கு வசதிகளை விமான நிறுவனங்கள் குறைத்து வருகின்றன.

பெரும்பாலான உள்நாட்டு விமானங்களில் தற்போது பொழுதுபோக்கு இல்லாத பயணம்தான் பயணிகளுக்கு கிடைக்கிறது. இதுதவிர ஊழியர்களுக்கான செலவுகளை குறைப்பதன் மூலமாகவும் விமான நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன. இந்த துறையை பொறுத்தவரையில், விமானங்களை இயக்குவதற்கான மொத்த செலவில் சுமார் 30-35 சதவீத செலவு ஊழியர்களுக்கு ஆவதாக கூறப்படுகிறது.

எனவே குறைவான லாபமே கிடைக்கிறது என்றால், லாபத்தை அதிகரிப்பதற்காக, ஊழியர்களை வேலையில் இருந்து உடனடியாக நீக்குதல் அல்லது அவர்களின் சம்பளத்தை குறைத்தல் அல்லது அவர்களுக்கான சலுகைககளை தவிர்த்தல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் விமான நிறுவனங்கள் செலவுகளை குறைக்கின்றன.

ஆனால் விமான நிறுவனங்கள் மேற்கொள்ளும் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் விமான பயணத்தின் தரம் பாதிக்கப்படுகிறது. அதேபோல் பயணிகள் அசௌகரியமான சூழலில் விமான பயணத்தை மேற்கொண்டாக வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. எனினும் போட்டி நிறைந்த வியாபாரத்தில் நீடித்து இருப்பதற்காக இந்த யுக்திகளை விமான நிறுவனங்கள் கையாள்கின்றன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications