பாத்து யூஸ் பண்ணுங்க! மாச கணக்கா கடல்ல சுத்தும் உல்லாச கப்பல்களுக்கு உண்மையில் எப்படி குடிநீர் வருது தெரியுமா?
கடலில் உலாவும் உல்லாச கப்பல்கள் எப்படி குடிநீரை பெறுகின்றன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உல்லாச கப்பல்கள் மிகவும் அழகானவை. உட்புறமாகட்டும் அல்லது வெளிப்புறமாகட்டும், பார்ப்பதற்கு அவை மிகவும் அழகாக காட்சியளிக்கும். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான பயணிகள், உல்லாச கப்பல்கள் என்ற பொறியியல் அதிசயங்களில் பயணம் செய்து வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும், வெவ்வேறு வயதினரும் உல்லாச கப்பல்களில் ஒன்றாக பயணிக்கின்றனர்.

ஒரு சராசரி அளவுடைய உல்லாச கப்பலே 2,000-3,000 பயணிகளை சுமந்து செல்லும். மிகப்பெரிய உல்லாச கப்பல்களில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை இதை விட மிகவும் அதிகமாக இருக்கும். இத்தனை பயணிகளும் உல்லாச கப்பல்களில் பல நாட்கள் பயணம் மேற்கொள்கின்றனர். ஒரு சில சமயங்களில் உல்லாச கப்பல்கள் மாத கணக்கில் கூட கடலில் பயணிக்கும்.

அப்படி இருக்கும்போது, இத்தனை பயணிகளுக்கு, இத்தனை நாட்களுக்கு தேவையான சுத்தமான தண்ணீர் எங்கே இருந்து பெறப்படுகிறது? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். பலருக்கும் மிக நீண்ட நாட்களாக இருந்து வரும் இந்த சந்தேகத்திற்கு இந்த செய்தி தொகுப்பு விடையளிக்கிறது. குடிப்பதற்கு மட்டுமல்லாது இன்னும் பல்வேறு தேவைகளுக்கும், உல்லாச கப்பல்களில் சுத்தமான தண்ணீர் தேவைப்படுகிறது.

அதாவது துணி துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற தேவைகளுக்கும் சுத்தமான தண்ணீர் அவசியம். அது மட்டுமல்லாது, உல்லாச கப்பல்களில் இருக்கும் நீச்சல் குளங்கள் மற்றும் தண்ணீர் விளையாட்டுகளுக்கும் சுத்தமான தண்ணீர் அவசியம். எனவே சராசரியாக ஒரு உல்லாச கப்பலுக்கு, ஒரு நாளில் மட்டும் 500-1,000 டன்கள் சுத்தமான தண்ணீர் தேவைப்படும்.

பெரிய உல்லாச கப்பல்கள் ஒரு நாளைக்கு நுகரும் தண்ணீரின் அளவு, இதை விட மிகவும் அதிகமாக இருக்கும். உல்லாச கப்பல்களின் அளவு மற்றும் மொத்த பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட அம்சங்களை பொறுத்து, தேவைப்படும் சுத்தமான தண்ணீரின் அளவு மாறுபடலாம். இவ்வளவு தண்ணீரையும் உல்லாச கப்பல்கள், கடலில் இருந்தே எடுத்து கொள்கின்றன.

உல்லாச கப்பல்கள் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும், உப்பு மிகுந்த கடல் நீரை நேரடியாக பயன்படுத்த முடியாது. கடல் நீரை பயணிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மாற்றிதான், அவர்களுக்கு வழங்க முடியும். எனவே உல்லாச கப்பல்களில் கடல் நீரில் இருந்து உப்பை நீக்கும் அமைப்புகள் (Desalination Systems) இருக்கும்.

இது கடல் நீரில் இருக்கும் உப்பு மற்றும் அசுத்தங்கள் ஆகியவற்றை அகற்றி விடும். இதன் மூலம் கடல் நீர், சுத்தமான ஃப்ரெஷ் வாட்டர்-ஆக மாற்றப்படுகிறது. ஆனால் இந்த தண்ணீர் கழுவுவதற்கும், துணிகளை துவைப்பதற்கும் மட்டும்தான் ஏற்றது. இந்த தண்ணீரை பயணிகள் குடிப்பதற்கு ஏற்றதாக மாற்ற வேண்டுமானால், மற்றொரு செயல்முறையை செய்ய வேண்டும்.

அது 'மினலரைசேஷன்' (Mineralization) என அழைக்கப்படுகிறது. உப்பு நீக்க செயல்முறையின்போது, மினரல்களும் (Minerals) சேர்த்தே அகற்றப்பட்டிருக்கும். அப்போது அகற்றப்பட்ட மினரல்களை, இந்த 'மினலரைசேஷன்' செயல்முறை மீட்டெடுக்கிறது. இவ்வாறுதான் கடல் நீர், பயணிகள் குடிப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்யப்படுகிறது.

இதன் பின்னர் இந்த சுத்தமாக தண்ணீர் உல்லாச கப்பல்களில் இருக்க கூடிய மிகப்பெரிய தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும். இந்த தொட்டிகள் பல லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்கும் அளவிற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். இந்த தொட்டிகளின் தண்ணீர் கொள்ளளவு, உல்லாச கப்பல்களை பொறுத்து மாறுபடும்.

அளவில் பெரிய மற்றும் அதிநவீன உல்லாச கப்பல்களில்தான், உப்பு மற்றும் அசுத்தங்களை நீக்கும் பிளாண்ட் (Plant) இருக்கும். இதன் மூலம் உல்லாச கப்பலிலேயே தேவையான அளவிற்கு சுத்தமான தண்ணீர் உருவாக்கி கொள்ளப்படும். ஆனால் சிறிய மற்றும் பழைய உல்லாச கப்பல்களில் இந்த பிளாண்ட் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

எனவே பயணத்தை தொடங்குவதற்கு முன்பே தேவையான அளவிற்கு சுத்தமான தண்ணீர் அந்த உல்லாச கப்பல்களில் நிரப்பப்பட்டு விடும். உல்லாச கப்பல்களில் இருக்கும் பெரிய தொட்டிகளில் இந்த தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். உல்லாச கப்பல்கள் சுத்தமான குடிநீரை பெறுவதில் இவ்வளவு செயல்முறைகள் இருப்பதால், பயணிகள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது.


Click it and Unblock the Notifications