இவ்ளோ பிரச்னைகள் வரும்னு தெரியாம போச்சே... இனி மோசமான ரோட்ல வண்டி ஓட்டவே கூடாது... பேசாம சுத்தி கூட போயிரலாம்!
மோசமான சாலையில் சென்றால், உங்கள் காரின் எந்தெந்த பாகங்கள் கடுமையாக பாதிக்கப்படும்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஏராளமான சாலைகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன. சாலைகளில் ஆங்காங்கே உள்ள குழிகள், நமது பயணத்தில் தடையை ஏற்படுத்துகின்றன. அத்துடன் நமது கார்களுக்கும் அவை பாதிப்புகளை உண்டாக்குகின்றன. மோசமான சாலைகளில் உள்ள குழிகளில் இறங்கி ஏறும்போது கார்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த ஒரு விஷயம்தான்.

ஆனால் எந்தெந்த பாகங்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கும் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. எனவே சாலைகளில் உள்ள குழிகளால் கார்களின் எந்தெந்த பாகங்கள் பாதிக்கப்படும்? என்பதை இந்த செய்தியில் விரிவாக விளக்கியுள்ளோம். இந்த தகவல்கள் உங்களுக்கு பயன் அளிக்க கூடியதாக இருக்கும் என நம்புகிறோம்.

டயர் வெடிப்புகள் மற்றும் வீல் சேதம்:
நீங்கள் கார் பயணம் செய்வது மிக மோசமான சாலையாக இருந்தால், டயர்கள் பிளவுபடுவதற்கும், பஞ்சர் ஆவதற்கும் வாய்ப்புகள் அதிகம். அத்துடன் வீல்களும் சேதம் அடையலாம். இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறும்போது நீங்கள் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தால், காரின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடலாம்.

டயர் அல்லது வீல் திடீரென சேதம் அடையும்போது வேகமாக சென்று கொண்டிருந்தால் காரை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சிரமமான காரியமாக மாறி விடும். இது சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கலாம். எனவே மோசமான சாலைகளில் மெதுவாக செல்வதுதான் அனைவருக்கும் சிறந்த விஷயமாக இருக்கும்.

ஸ்டியரிங் சிஸ்டத்தின் அலைன்மெண்ட் பாதிப்பு:
மோசமான சாலைகளில் உள்ள குழிகளால் டயர்கள் மற்றும் வீல்கள் பாதிக்கப்படலாம் என்பது கூட பலருக்கும் தெரிந்த விஷயமாகதான் இருக்கும். ஏனெனில் டயர்கள்தான் சாலையுடன் நேரடி தொடர்பில் இருக்கின்றன. ஆனால் இனி நாங்கள் கூறப்போகும் விஷயங்கள் நிறைய பேருக்கு தெரிந்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.

இதில் ஒன்றுதான் ஸ்டியரிங் சிஸ்டத்தின் அலைன்மெண்ட் பாதிப்பு. மோசமான சாலையில் உள்ள குழியில், நீங்கள் கடுமையாக இறங்கி ஏறும்போது, உங்கள் காரின் ஸ்டியரிங் சிஸ்டமும் பாதிக்கப்படலாம். மோதலின் கடுமை, அலைன்மெண்ட்டில் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக உங்கள் காரின் கையாளுமை, அதாவது ஹேண்ட்லிங் பாதிக்கப்படலாம்.

காரின் ஹேண்ட்லிங் பாதிக்கப்பட்டாலும் கூட, விபத்து நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அத்துடன் ஹேண்ட்லிங் சரியில்லை என்றால், உங்கள் பயண அனுபவமும் சிறப்பாக இருக்காது. எனவே சாலையில் குழிகள் இருந்தால், காரை மிகவும் மெதுவாக ஓட்ட பழகி கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கும், மற்றவர்களுக்கும் பாதுகாப்பானது.

எக்ஸாஸ்ட் அமைப்பு பாதிப்பு:
உங்கள் காரின் எக்ஸாஸ்ட் அமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவிற்கு ஒரு சில குழிகள் இருக்கும். இந்த சேதம் உங்கள் கார் இன்ஜினில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவிற்கு கூட கடுமையாக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சேதமடைந்த எக்ஸாஸ்ட் அமைப்பானது, கார்பன் மோனாக்சைடு மூலம் உங்களையும், உங்களுடன் பயணிப்பவர்களையும் பாதிப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

காரின் பாடியில் பாதிப்பு:
டயர்கள், வீல்கள், ஸ்டியரிங் சிஸ்டம் மற்றும் எக்ஸாஸ்ட் அமைப்புகளில் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், உங்கள் காரின் பாடியிலும், மோசமான சாலைகள் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க விரும்பினால், மோசமான சாலைகளில் பயணிப்பதை விட்டு விடுங்கள். சற்று தூரம் அதிகம் என்றாலும் கூட மாற்று வழியில் செல்லுங்கள்.

ஆனால் அனைத்து சமயங்களிலும் இது சாத்தியமில்லை என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் நீங்கள் வசிக்கும் ஊரில் மட்டுமே சாலைகளின் கண்டிஷன் உங்களுக்கு தெரியும். மற்ற ஊர்களில் தெரியாது. எனவே எந்த சாலையில் பயணித்தாலும், குழிகள் இருக்கிறதா? என்பதை நன்றாக கவனித்து கொண்டே காரை ஓட்டுங்கள்.

அத்துடன் மெதுவாகவும் செல்வது அவசியம். ஏனெனில் அப்போதுதான் குழிகள் இருப்பது தெரிந்தால், உங்களால் காரை நிறுத்த முடியும். மோசமான சாலைகளில் நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக வேகமாக செல்கிறீர்களோ, அவ்வளவு பாதிப்புகள் ஏற்படும். எனவேதான் குழிகள் அதிகமாக உள்ள சாலைகளில் மெதுவாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகிறது.

குறிப்பாக உங்களுக்கு அறிமுகம் இல்லாத சாலைகளில் மெதுவாக செல்வதுதான் அனைத்து வழிகளிலும் நன்மை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். இதையும் தாண்டி மோசமான சாலைகளால் உங்கள் கார் பாதிக்கப்பட்டு விட்டால், அதன் காரணமாக ஏற்பட்ட பிரச்னைகளை அலட்சியம் காட்டாமல் உடனடியாக சரி செய்து விடுங்கள்.


Click it and Unblock the Notifications








