கோடை காலத்தை விட பெட்ரோலுக்கு அதிகமா செலவாகும்... குளிர் காலத்தில் உங்க காரின் மைலேஜ் ஏன் குறைகிறது தெரியுமா?
கோடை காலத்தை விட குளிர் காலத்தில், உங்கள் காரின் மைலேஜ் ஏன் குறைகிறது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோடை காலத்தை காட்டிலும் குளிர் காலங்களில் உங்கள் காரில் எரிபொருள் வேகமாக தீர்ந்து விடும். எனவே நீங்கள் அடிக்கடி எரிபொருள் நிரப்ப வேண்டியதிருக்கும். குளிர்ச்சியான சூழ்நிலையானது, உங்கள் காரின் எரிபொருள் சிக்கனத்தில், அதாவது மைலேஜில், எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துவதுதால்தான் மைலேஜ் குறைவாக கிடைக்கிறது.

கோடை காலத்தை காட்டிலும் குளிர் காலத்தில் கார் ஏன் குறைவான மைலேஜை வழங்குகிறது? என்பதற்கான காரணங்கள் பலருக்கும் தெரிவதில்லை. இந்த காரணங்களை தெரிந்து கொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானதுதான். கோடை காலத்தை விட குளிர் காலத்தில் காரின் மைலேஜ் ஏன் குறைகிறது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் விளக்கமாக கூறியுள்ளோம்.

அமெரிக்காவின் எரிசக்தி துறை, மைலேஜ் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. இதன் முடிவுகளில், வெப்ப நிலை குறைய குறைய மைலேஜ் குறைவது கண்டறியப்பட்டது. அதாவது வழக்கமான பெட்ரோல் இன்ஜின் கார் ஒன்றை நகர பகுதிகளில் ஓட்டி சோதனை செய்தனர். தொலைதூர பயணங்கள் அல்லாமல், குறுகிய தொலைவு கொண்ட 'ட்ரிப்' மட்டுமே அடிக்கப்பட்டது.

அப்போது 77 டிகிரி ஃபாரன்ஹீட்டில் கிடைத்த மைலேஜை விட 20 டிகிரி ஃபாரன்ஹீட்டில் கிடைத்த மைலேஜ் 12 சதவீதம் குறைவாக இருந்தது. அதாவது அதிக வெப்ப நிலையில் அதிக மைலேஜ் கிடைத்தது. அதே சமயம் குறைவான வெப்ப நிலையில் குறைவான மைலேஜ் மட்டுமே கிடைத்தது. மிகவும் சிறிய ட்ரிப்களின்போது மைலேஜ் இன்னும் குறைந்தது.

அதாவது 5 முதல் 7 கிலோ மீட்டர் வரையிலான சிறிய ட்ரிப்களை அடித்தபோது, 22 சதவீதம் வரை மைலேஜ் குறைவாக கிடைத்தது. குளிரான சூழ்நிலை, நீங்கள் நினைப்பதை விட பல்வேறு விதங்களில் மைலேஜை பாதிக்கிறது. குளிர்ச்சியான இன்ஜின் ஆயில் காரணமாக குளிரான சூழ்நிலைகளில், இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனின் உராய்வு அதிகரிக்கும்.

எனவே சிறப்பான மைலேஜிற்கு உகந்த வெப்ப நிலையை அடைவதற்கு உங்கள் காரின் இன்ஜின் அதிக நேரம் எடுத்து கொள்ளும். இதன் காரணமாக குறுகிய தொலைவு பயணங்களின்போது, மைலேஜ் மிக கடுமையாக பாதிக்கப்படும். ஏனெனில் சிறப்பான மைலேஜிற்கு உகந்த வெப்ப நிலையை இன்ஜின் எட்டுவதற்கு முன்பாகவே உங்கள் பயணம் முடிந்து விடும்.

இன்னும் தெளிவாக சொல்வதென்றால், உகந்த வெப்ப நிலையை விட குறைவான வெப்ப நிலையில்தான் கார் அதிக நேரத்தை செலவிடும். இதன் காரணமாகதான் அமெரிக்காவின் எரிசக்தி துறை குறுகிய தொலைவு நடத்திய சோதனைகளில், அதிகமான வெப்ப நிலையை காட்டிலும், குறைவான வெப்ப நிலையில் கார் குறைவான மைலேஜை வழங்கியது.

மேலும் குளிர் காலங்களில் ஹீட்டட் சீட்கள் (Heated Seats) மற்றும் விண்டோ டீஃப்ராஸ்டர்கள் (Window Defrosters) ஆகிய வசதிகளும் அதிகமாக பயன்படுத்தப்படும். அத்துடன் ஹீட்டர் ஃபேன்களும் (Heater Fans) அதிகளவில் உபயோகிக்கப்படும். இவை கூடுதல் சக்தியை பயன்படுத்தும். இதன் காரணமாகவும் குளிர் காலங்களில் மைலேஜ் குறைந்து விடுகிறது.

அத்துடன் வார்ம்-அப் செய்வதும் கூட மைலேஜை குறைத்து விடும். குளிர் காலங்களில் புறப்படுவதற்கு முன்பு காரை வார்ம்-அப் செய்யும் வழக்கம் பலரிடமும் காணப்படுகிறது. இது அதிக எரிபொருளை நுகர செய்து, மைலேஜ் குறைவாக கிடைக்க காரணமாகி விடும். மேலும் இயற்கையாகவே ஐட்லிங்கில் இருக்கும்போது உங்கள் காரின் மைலேஜ் பூஜ்ஜியம்தான்.

குளிர் காலங்களில் புறப்படுவதற்கு முன்பாக காரை ஐட்லிங்கில் விடும் பழக்கமும் நிறைய பேரிடம் உள்ளது. இதுவும் மைலேஜ் குறைவாக கிடைப்பதற்கு ஒரு காரணம் ஆகும். நகரங்களின் டிராஃபிக் சிக்னல்களில், பச்சை விளக்கிற்காக காத்திருக்கும்போது, இன்ஜின் தானாகவே ஆஃப் ஆகி விடும் தொழில்நுட்பங்கள் தற்போது வந்து விட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

சிக்னல்களில் உங்கள் வாகனம் ஐட்லிங்கில் இருக்கும்போது, தேவையில்லாமல் எரிபொருள் செலவாகும் என்பதுதான் இதற்கான காரணம். அதேபோன்று குளிர் காலங்களில் நீங்கள் புறப்படுவதற்கு முன்பாக ஐட்லிங்கில் விட்டாலும், கார் அதிகளவில் எரிபொருளை நுகரும். மேலும் குளிர்ச்சியான காற்று அடர்த்தியானது என்பதும், குளிர் காலங்களில் மைலேஜ் குறைய ஒரு காரணமாகும்.

அதாவது குளிர்ந்த காற்று அடர்த்தியானது என்பதால், உங்கள் காரின் ஏரோடைனமிக் இழுவை அதிகரிக்கும். குறிப்பாக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது இப்படி நடக்கலாம். இதன் காரணமாகவும் மைலேஜ் குறைகிறது. எனவே கோடை காலத்தை விட குளிர் காலங்களில் நீங்கள் உங்கள் காருக்கு அதிகளவில் எரிபொருள் நிரப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.


Click it and Unblock the Notifications








