ஜிஎஸ்டி குறைத்தால் இது நடக்கும்னு மத்திய அரசுக்கு தெரியாமலா இருக்கும்? எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதா வேணாமா?
பெட்ரோல்/ டீசல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி (GST) குறைப்பு அவற்றின் விற்பனையில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த ஜிஎஸ்டி குறைப்பின்படி, பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் பைக்குகள் உள்பட கமர்ஷியல் வாகனங்களின் விலைகளும் வெகுவாக குறைகின்றன. இதனாலேயே அவற்றை வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை வளர்ச்சி எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை பாதிக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஜிஎஸ்டி குறைப்பால் ஏற்கனவே சில கார் நிறுவனங்கள் தங்களது கார்களின் விலைகளை குறைத்துள்ளதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை ஏற்கனவே குறைய துவங்கிவிட்டதாக செய்திகள் வெளிவர துவங்கி உள்ளன.

இதனால், வரும் மாதங்களில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மக்களின் ஈர்ப்பு மேலும் மங்கக் கூடும். நுகர்வோர் செலவு குறைந்த விருப்பங்களை நோக்கிச் செல்வதால், இந்திய மோட்டார் வாகனத் துறை மாற்றத்தைக் கண்டு வருகிறது. இதனை சற்று உன்னிப்பாக கவனித்து பார்த்தால், எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை வரும் காலங்களில் வெகுவாக குறையலாம் என்பதற்கு பல காரணிகள் நம் கண் முன் வந்து செல்கின்றன.
எலெக்ட்ரிக் வாகனங்களின் மீதான தாக்கம்: போக்குவரத்தின் எதிர்காலமாக ஒரு காலத்தில் கருதப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்த வரி மாற்றத்தால் தற்போது சவால்களை எதிர்கொள்கின்றன. வழக்கமான பெட்ரோல்/ டீசல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி குறைப்பு அவற்றைப் பொருளாதார ரீதியாக மிகவும் ஈர்க்கக்கூடியதாக ஆக்குகிறது; இதனால் இவி விற்பனை குறைகிறது. இந்த மாற்றம், வாடிக்கையாளர்கள் எடுக்கும் முடிவுகளில் விலையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

துறை ரீதியான பிரதிபலிப்பு: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையின் இந்த போக்கிற்கு ஏற்ப தங்கள் உத்திகளை மாற்றியமைக்கின்றன. சில நிறுவனங்கள் தங்கள் பாரம்பரிய பெட்ரோல்/ டீசல் கார்களின் அம்சங்கள் மற்றும் மலிவுத்தன்மையை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதேநேரம், சில எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தொழிற்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதற்கான வழிகளை ஆராய்கின்றன.
வாடிக்கையாளர்களின் விருப்பங்கள்: வாகனங்களைத் தேர்ந்தெடுக்கும்போது சுற்றுச்சூழல் நன்மைகளை விட மலிவுத்தன்மைக்கு மக்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள். பாரம்பரிய பெட்ரோல்/ டீசல் கார்களின் குறைந்த விலை மக்களை ஈர்க்கிறது; இது வரும் காலங்களில் மேலும் வெகுவாக ஈர்க்கக் கூடும். நிலைத்தன்மை முக்கியமானது என்றாலும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருந்தால் அது மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து விலக்க கூடும்.

எதிர்கால கண்ணோட்டம்: வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மாறிவரும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப தங்களது திட்டங்களை மாற்றியமைப்பதால், இன்னும் சில காலத்திற்கு இந்திய மோட்டார் வாகன சந்தை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைக் காணலாம். நிலையான போக்குவரத்தை ஊக்குவிப்பதற்கும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இடையிலான சமநிலைதான் இந்திய ஆட்டோமொபைல் துறையின் எதிர்கால திசையை வடிவமைப்பதில் முக்கியமாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு நம் மத்திய அரசு ஒன்றும் எதிரான அரசு இல்லை. இன்னும் சொல்லப்போனால், எலெக்ட்ரிக் வாகனங்களை நாடு முழுவதும் மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என ஊக்கப்படுத்துவதில் கடந்த பல வருடங்களாகவே மத்திய அரசு ஈடுப்பட்டு வருகிறது. இருப்பினும், குறிப்பிட்ட பெட்ரோல்/ டீசல் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டு உள்ளதால், மிக விரைவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில் ஏதேனும் அறிவிப்பு மத்திய அரசிடம் இருந்து வெளிவரலாம்.


Click it and Unblock the Notifications









