இதனாலதான் ஃப்ளைட் டிக்கெட் ரேட் இவ்ளோ காஸ்ட்லியா வச்சிருக்காங்களோ... விமானத்தின் மைலேஜ் விபரம்!
ஓர் விமானம் தோராயமாக ஒரு நிமிடம் இயங்க எத்தனை லிட்டர் எரிபொருளை உறிஞ்சும் என்பது பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

நல்ல மைலேஜ் தரக் கூடிய ஓர் பைக் சுமார் 50 கிமீ முதல் 60 கிமீ வரையில் பயணிக்க ஒரு லிட்டர் பெட்ரோலே போதுமானதாக இருக்கின்றது. இதேபோல், சூப்பராக மைலேஜ் தரக் கூடிய ஓர் கார் 20 கிமீ முதல் 25 கிமீ வரை பயணிக்க ஒரு லிட்டர் பெட்ரோலே போதுமானதாக உள்ளது.

இந்த மாதிரியன சூழலில் வானில் சீறி பாய்ந்து பறக்கும் விமானங்கள் எத்தகைய மைலேஜை தரும்? என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கு ஏற்பட்டிருக்கக் கூடும். குறிப்பாக, அவை எந்தளவு எரிபொருளை பயன்படுத்தும் என்கிற சந்தேகமும் எழுப்பியிருக்கக் கூடும். இந்த சந்தேகத்திற்கான விளக்கத்தையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

முதலில் வானூர்திகளில் பயன்படுத்தப்படும் ஏவியேஷன் டர்பைன் ஃப்யூவல் (Aviation Turbine Fuel) ஒரு கிலோலிட்டர் எவ்வளவு ரூபாய்க்கு விற்கப்படுகின்றது என்பது பற்றிய விபரத்தைப் பார்க்கலாம். கடந்த ஜூலை 16ம் தேதி நிலவரப்பட, ஏவியேஷன் டர்பைன் ஃப்யூவல் ஒரு கிலோ லிட்டர் ரூ. 1,38,147.93 -க்கு விற்கப்படுகின்றது.

அப்படியானால், விமானங்களுக்கான எரிபொருள் ஒரு லிட்டருக்கு ரூ. 130-க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இது தலைநகர் டெல்லியில் விற்கப்படும் விலை நிலவரம் ஆகும். ஒரு கிலோ லிட்டர் என்றால் ஆயிரம் லிட்டருக்கு சமம் ஆகும். இத்தகைய அதிக விலையில் விற்கப்படும் எரிபொருளை மிக அதிக வேகத்தில் ஓர் விமானம் உறிஞ்சும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஓர் போயிங் 747 விமானத்தின் எரிபொருள் பயன்பாடு:
உதாரணமாக ஓர் போயிங் 747 விமானம் 4 லிட்டர் எரிபொருளை ஒவ்வொரு செகண்டுக்கும் செலவு செய்யுமாம். ஆமாங்க, இங்கே எழுத்து பிழை எதையும் நாங்கள் செய்யவில்லை. ஒரு செகண்டிற்கே ஓர் போயிங் 747 ரக விமானம் சராசரியாக 4 லிட்டர் ஏவியேஷன் டர்பைன் ஃப்யூவலை பயன்படுத்தும். அப்படியென்றால், அது ஒரு நிமிஷத்திற்கு 240 லிட்டர் வரை எரிபொருளை உறிஞ்சும்.

ஒரு நிமிஷத்துக்கே இத்தனை லிட்டர் என்றால், ஒரு மணி நேரத்திற்கு அது எரிபொருளை உறிஞ்சும் என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பலாம். போயிங் விமானம் ஒரு மணி நேரம் இயங்க 14,400 லிட்டர் வரை எரிபொருள் தேவைப்படுகின்றது. இத்தகைய அதிக எரிபொருள் செலவீணத்தைக் கொண்டதாகவே போயிங் ரக விமானங்கள் பல உள்ளன.

உதாரணமாக, ஓர் போயிங் 747 விமானம் டோக்யோவில் இருந்து நியூ யார்க் நகரத்தை நோக்கி பறக்கின்றது என வைத்துக் கொள்வோம். இந்த பயணத்திற்கு சுமார் 13 மணி நேரம் விமானம் பறக்க வேண்டியிருக்கும். ஆகையால், இப்பயணத்திற்கு மட்டும் சுமார் 1,87,200 லிட்டர் எரிபொருள் தேவைப்படும். போயிங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில், போயிங் 747 ஒரு கிலோமீட்டர் பயணிக்க 12 லிட்டர் வரை எரிபொருளை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் ஒரே நேரத்தில் 568 பேரால் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஏர்பஸ் ஏ321 நியோ விமானம் எவ்வளவு எரிபொருளை நுகரும்?
இந்த விமானம் 1,200 கி.மீட்டர்., இடைவெளியை வெறும் இரண்டே மணி நேரங்களில் கடந்துவிடும். அதாவது, மும்பையில் இருந்து தலை நகர் டெல்லியைச் சென்று சேர அதற்கு வெறும் 2 மணி நேரங்களே போதுமானதாக உள்ளது. இது மணிக்கு 600 கிமீ பறக்கும் திறன் கொண்டது. அதாவது, ஒரு நிமிடத்தில் 10 கிமீட்டரைக் கடுக்கும் வேகத்தில் இவ்விமானம் பறக்கும்.

இந்த விமானத்தில் சுமார் 192 பேர் வரை ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். இத்தகைய ஏர்பஸ் ஏ321 விமானம் ஒரு கிமீ பயணிக்க 4.18 லிட்டரை எரிபொருளை பயன்படுத்துமாம். அதாவது, அதன் 1,200 கிமீ பயண இடைவெளியை முழுமையாக முடிக்க 5,016 லிட்டர் ஃப்யூவல் தேவைப்படும் என தரவுகள் தெரிவிக்கின்றன.

இதை வைத்து பார்க்கையில் ஒரு செகண்டிற்கு இந்த விமானம் 0.683 லிட்டர் எரிபொருளை செலவு செய்கிறது என்பது தெரிகின்றது. போயிங் 747 விமானத்தைக் காட்டிலும் இது பல மடங்கு குறைவாகும். ஒரு நிமிட இயக்கத்திற்கு 41.8 லிட்டர் எரிபொருள் போதுமானதாக உள்ளது. இதேபோல், ஒரு மணி நேரத்திற்கு 2,508 லிட்டரை அது எரிக்கும். ஓர் ஏர்பஸ் ஏ321 நியோ விமானத்தின் எரிபொருள் கெபாசிட்டி 32,940 லிட்டர் ஆகும்.


Click it and Unblock the Notifications








